பண்டிகை என்றாலே மகிழ்ச்சிக்கு உரியது. இதில் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லை. அவரவர் வசதிக்கேற்ப பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள். அந்த மகிழ்ச்சி யாருக்கும் அவஸ்தையில் போய் முடியக் கூடாது. மற்ற பண்டிகைகளை விட தீபாவளிப் பண்டிகைதான் குட்டீஸ்களுக்கும், சிறுவர்களுக்கும் மிகவும் பிடிக்கும். காரணம், புத்தாடை, இனிப்புகள் மட்டுமல்ல.. பட்டாசும்தான். என்ன டிரஸ் வேண்டுமானாலும், போடட்டும்.. மகிழ்ச்சி. என்ன இனிப்புகள் வேண்டுமானாலும் சாப்பிடட்டும்.. மகிழ்ச்சி. ஆனால், பட்டாசு மட்டும் பாதுகாப்பாக வெடித்தால்தான் எல்லோருக்கும் மகிழ்ச்சி. அதற்காக சில முன்னெச்சரிக்கை குறிப்புகள்:

குழந்தைகள், சிறுவர்களுக்கு ஏற்ற சரியான பட்டாசை வாங்கிக் கொடுத்து, அவர்கள் வெடிக்கும்போது கூடவே இருந்து கண்காணிக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட, லைசென்ஸ் பெற்ற விற்பனையாளரிடம் மட்டும் பட்டாசை வாங்குங்கள்.

குழந்தைகள் பட்டாசைக் கையில் வைத்துக் கொண்டிருக்கும்போது ஒருவர் அருகிலேயே இருக்க வேண்டும்.

வீட்டுக்குள்ளோ ஓர் அறைக்குள்ளோ பட்டாசையோ புஸ்வாணத்தையோ கொளுத்தக் கூடாது. வெட்ட வெளியில், கூட்ட நெரிசல் இல்லாத இடத்தில்தான் கொளுத்த வேண்டும்.

பட்டாசு அல்லது புஸ்வாணத்தின் மீது கவிழ்ந்து கொண்டு கொளுத்தக் கூடாது. கவிழ்ந்து கொண்டு கொளுத்தும்போது, வெடித்துவிட்டால் ஆபத்து. ஆகவே, பக்கவாட்டில் நின்று கொண்டு, கையை நீட்டி கொளுத்த வேண்டும். கொளுத்திய உடன் தூர விலகிச் செல்ல வேண்டும். அது எரிகிறதா.. அணைகிறதா என்று அருகில் சென்று ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டாம். குனிந்து பார்க்கும்போது திடீரென்று முகத்தில் வெடிக்கும் ஆபத்து இருக்கிறது.

பட்டாசையும், புஸ்வாணத்தையும் கையில் கொளுத்தி தூக்கிப் போடாதீர்கள். அது ஹீரோயிசம் அல்ல. மரண விளையாட்டு. அது உங்களையும் பாதிக்கும். தெருவில் நடந்து செல்லும் அப்பாவிகளையும் அல்லல்படுத்தும்.

பட்டாசு கொளுத்தும்போது, தொளதொளவென்று இல்லாத பருத்தி உடைகளை அணிந்து கொள்ளுங்கள். நைலான் இழை ஆடைகள் வேண்டவே வேண்டாம்.

முதலுதவிப் பெட்டியையும் தண்ணீரையும் தயாராக அருகில் வைத்துக் கொள்ளுங்கள்.

தீ காயம் ஏற்பட்டால், காயத்தின் மேல் தண்ணீரைக் கொட்டுங்கள். ஆயின்மென்ட், வெண்ணெய், நெய், கிரீஸ் போன்ற எதையும் காயத்தின் மீது தடவ வேண்டாம். அதிக காயம் என்றால் உடனே மருத்துவரைச் சென்று பாருங்கள்.

காயமில்லாத கனிந்த மகிழ்ச்சியான தீபாவளியைக் கொண்டாடுங்கள். வாழ்த்துக்கள்!