புதிய நம்பிக்கை – 4

பொதுவாகவே, நம் ஒவ்வொருவரிடமும் சமூகத்தைப் பற்றிய எண்ணம், புரிதல் என்பது மிகவும் குறைந்து போய்விட்டது என்ற உண்மையை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும்… எனக்கும் சமூகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைப் போலத்தான் நாம் ஒவ்வொருவரும் சுயநலத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..!

உண்மையில், சமூகத்தின் மீதான அக்கறையுடன் வாழ்வதில் நம்முடைய சுயநலமும் அடங்கியிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்… ஆனால், நமக்கு அதைப்பற்றியப் புரிதல் சிறிதுமில்லை…

ஒரு பெற்றோர் ஏன் சமூகத்தைப் பற்றிய சிந்தனையுடன், அக்கறையுடன் வாழவேண்டும்..? காரணம், நம் குழந்தைகள் விபரம் தெரிந்த பெரியவர்கள் ஆகும் வரையில் இந்தச் சமூகத்தில்தான் வாழ்ந்தாக வேண்டும்… அந்தக் குழந்தைகளின் பாதுகாப்புக்காக, அவர்களின் வாழ்க்கையில் சிக்கல்கள் அதிகம் உண்டாகாமல் அல்லது சிக்கல்கள் ஏற்பட்டாலும் அவற்றைச் சமாளித்து, படித்து, வளர்ந்து, வேலைதேடி சரியானபடி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவேண்டும் என்றால் அதற்கு இந்தச் சமூக அமைப்பு சரியாக இருக்கவேண்டும், இயங்கவேண்டும்…

இன்றைக்கு நாம் தினம் தினம் செய்தித் தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும், சமூக வலைத்தளங்களிலும், விதம் விதமான, குழந்தைகள் மீதான தாக்குதல்கள், பாலியல் வன்கொடுமைகள், கொடூரமான சித்திரவதைகள் நடப்பதைப் படிக்கிறோம், பார்க்கிறோம், கேட்கிறோம்..!

பொது இடங்களில் மட்டுமல்லாமல் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நினைத்து நாம் நம்பி அனுப்பிவைக்கும் பள்ளி, கல்லூரி, கோவில்களில் கூட, குழந்தைகள் மீதான குற்றங்கள் அன்றாடம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன… அப்படியென்றால் இந்தச் சமூகம் எவ்வளவு மோசமாக மாறியிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்… இந்த நிலைமை போகப்போக இன்னும் மோசமாக மறுவதற்கு நாம் உடந்தையாக இருக்கப் போகிறோமா? அல்லது இனியாவது இந்தச் சமூகம் சரியான வழியில் மாறுவதற்காகச் சிந்திக்கப் போகிறோமா? என்பது இன்றைய காலகட்டத்தில் நமக்கு முன்னால் இருக்கும் முக்கியமான, தவிர்க்க முடியாத கேள்வி..!

காலமாற்றத்தில் இவற்றையெல்லாம் தடுத்து நிறுத்த முடியாது என்று சாதாரணமாக சொல்லிவிட்டு நாம் கடந்து போய்விட முடியாது… மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பது உண்மைதான்… ஆனால், உண்மையான மாற்றம் என்பது என்ன..? சரியான, சமூகத்துக்குத் தேவையான மாற்றம் மட்டுமே உண்மையான மாற்றமாக இருக்க முடியும்..! இந்தச் சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களால் மக்களுக்கு, சமூகத்துக்கு நன்மையில்லை, மாறாக தீமைகள்தான் அதிகமிருக்கின்றன என்றால், அந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமா..? அது உண்மையான மாற்றமா..? அந்த மாற்றத்தை அத்தியாவசியமானதாக வைத்துக்கொள்ள வேண்டுமா..?  

சரியோ, தப்போ மனித வாழ்க்கையில், இந்தப் பூமியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு யார் காரணம்..? நாம் காரணமில்லை என்று சொல்லிவிட முடியுமா..? நான் காரணமில்லை என்று ஒவ்வொருவரும் சொன்னால், இன்று ஏற்பட்டுள்ள மாற்றம் இயற்கையாக, தானாகவே ஏற்பட்டதா..? அப்படித் தானாக மாற்றங்கள் ஏற்படுமா..? இயற்கை என்றுமே மனிதனுக்கு நன்மை கொடுப்பதாக மட்டுமே இருந்திருக்கிறது… மனிதர்களுக்கோ மற்ற உயிர்களுக்கோ ஆபத்தான எந்தவொரு செயலிலும் இயற்கை தாமாக ஈடுபடுவதில்லை..!

காற்றில் அசுத்தம் அதிகமாகி நாம் சுவாசிக்க முடியாமல் போனதற்குக் காரணம், இயற்கையா..? அந்த மாற்றம் இயற்கையால் இயற்கையாக உண்டானதா..? சுத்தமான குடிநீர் இல்லாமல் போனதற்குக் காரணம் நாம் இல்லையா..? நாம் வாழும் இந்தப் பூமியின் மீது நம்முடைய அக்கறையற்ற செயல்பாடுகளால்தான் இவ்வளவும் நிகழ்ந்திருக்கிறது என்பதை நாம் மறுக்கவோ, மறைக்கவோ முடியுமா..? இவற்றையெல்லாம் நாம் புரிந்து கொண்டோமா..?

அதைப்போலவே, நம்முடைய குழந்தைகள் பொது இடங்களில் மட்டுமல்ல, பள்ளிகளில், கல்லூரிகளில், கோவில்களில்கூடப் பாதுகாப்பாக இருக்க முடியாத நிலை ஏற்பட்டதற்கும் நாம் ஒவ்வொருவரும்தான் காரணம் என்பதை நாம் மறுக்க முடியுமா..?

மாற்றங்கள் என்ற பெயரில் நாம் செய்துகொண்டிருக்கும் இயற்கைக்கு எதிரான குற்றங்களை எப்பொழுது நாம் உணர்ந்துகொள்ளப் போகிறோம்..? நாளைக்கு இந்தப் பூமியில் வாழப்போவது நம் குழந்தைகள்தான், அவர்களுக்கும் இந்தப் பூமியில் வாழ எல்லா உரிமையும் இருக்கிறது என்ற உண்மையை நாம் எப்பொழுது உணர்ந்துகொள்ளப் போகிறோம்..? இந்தப் பூமியும், சமூகமும் நல்ல முறையில் மாறுவதற்கான முன்னெடுப்பை நாம் எப்பொழுது துவங்கப் போகிறோம்..?

இல்லை, இனியும் ஒவ்வொருவரும் ‘’எனக்கென்ன..? நான் என் வேலையைப் பார்க்கிறேன்… யாரோ, எப்படியோ போகட்டும்..?’’ என்று போகப்போகிறோமா… இன்று அடுத்தவர்கள் வீட்டில், அடுத்தவர்களின் குழந்தைகளுக்கு நடக்கும் அவலங்கள், கொடூரங்கள், வக்கிரங்கள் நாளை நம் வீட்டிலும், நம் குழந்தைகளுக்கும் நடக்காது என்று சொல்லிவிட முடியுமா..? அப்படி ஒவ்வொருவர் வீட்டுக்குள்ளும் தவறுகள், கொடூரங்கள், குற்றங்கள் நடந்துவிட்ட பின்னர்தான், நாம் சிந்திப்போம், செயல்படுவோம் என்றால், அந்தச் செயலை, அந்த அறிவை எதில் சேர்க்க முடியும்..?

எவ்வளவு பெரிய மாளிகையாக இருந்தாலும், ஒரு செங்கல்லை எடுத்து வைத்துத்தான் அதைக் கட்டி எழுப்புவதற்கு ஆரம்பிக்க வேண்டும் என்று சொல்வார்கள்… அதுதான் இயற்கை.  ஒரு தெரு சுத்தமாக இருக்க வேண்டும் என்று ஒருவர் நினைத்து அந்தத் தெருவைச் சுத்தப்படுத்தினால் மட்டும் போதாது… அவர் தன்னுடைய வீட்டு வாசலையும் சுத்தப்படுத்த வேண்டும்.  அப்பொழுதுதான் தெரு சுத்தமாக இருக்கும்… தெருவைச் சுத்தமாக வைத்திருக்க நினைக்கும் ஒருவர் நிச்சயமாக தன் வீட்டையும் சுத்தமாக வைத்திருக்கத் தவற மாட்டார்.  ஆனால், அதற்கு ஒவ்வொருவருடைய ஒத்துழைப்பும் தேவை… ஒவ்வொருவரும் தங்கள் வீட்டு வாசலை சுத்தமாக வைத்திருந்தால் போதும்… அந்தத் தெரு தானகவே சுத்தமாகிவிடும். இங்கே, தெருவின் சுத்தம் என்பது ஒவ்வொருவரிடமும், ஒவ்வொரு வீட்டிலும்தான்

இருக்கிறது, ஒரு பெரும் மாளிகையின் உருவாக்கம் என்பது ஒரு செங்கல்லில் இருப்பதைப் போல..! ஒரு சமூகத்தின் மேன்மை என்பது, மொத்த மக்களின் வாழ்க்கை உயரவேண்டும் என்பது ஒவ்வொருவரிடமும் இருக்கிறது… ஒருவர் அதிலிருந்து தவறினாலும், சமூகம் சிக்கலைத்தான் சந்திக்கும்… தெருவில் இருக்கும் எல்லா வீடுகளும் சுத்தமாயிருந்து ஒரு வீடு மட்டும் சுத்தமில்லாமல் இருந்தால், அந்தத் தெரு சுத்தமில்லை என்று சொல்வதைப்போல…

ஒவ்வொருவரும் தங்களின் குழந்தைகளை சமூகத்திற்கானவர்களாக, நம் நாட்டுக்கானவர்களாக, நல்லவர்களாக உருவாக்க வேண்டிய கட்டாயத்துக்கு வந்துவிட்டோம்… அதைப்போலவே, ஒவ்வொரு ஆசிரியரும் தன்னுடைய மாணவ, மாணவிகளை சிறந்தவர்களாக உருவாக்க வேண்டும்.

அதற்கு முக்கியமாக முதலில் நாம் செய்யவேண்டியது, நம்முடைய பிள்ளைகளுக்கு, நம் மாணவ, மாணவிகளுக்கு நாம் முன்னுதாரணமாக இருப்பதுதான்… ஒரு பெற்றோரோ, ஆசிரியரோ யாராக இருந்தாலும், மாணவ, மாணவிகளையோ அல்லது யாரையுமோ உருவாக்க வேண்டும் என்பதுகூட தேவையில்லை. நாம் நம்மை உருவாக்கிக் கொண்டு, அவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்தால் போதும். அவர்கள் நம்மைப் பார்த்து தங்களை மாற்றிக்கொள்வார்கள்.

நாம் மொபைலைத் தூக்கி தூர வைத்துவிட்டு, புத்தகங்களை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டால், நம்மைப் பார்த்து அவர்களும் அதைச் செய்ய ஆரம்பிப்பார்கள்… மொபைல் என்பது அத்தியாவசியமான ஒன்றாக இருக்கலாம்… ஆனால், அது ஒன்றுதான் அத்தியாவசியம் மற்ற அனைத்தும் அனாவசியம் என்ற நிலை ஒட்டுமொத்தமாக நம்மை ஆபத்துக்கு அழைத்துச் செல்லும்..! உங்கள் கைகளில் மொபைல் இருக்கட்டும்… அதே நேரம் புத்தகமும் இருக்கட்டும்… புத்தக வாசிப்பற்ற சிந்தனையால், ஒருபோதும் இந்தச் சமூகத்துக்கு நன்மை ஏற்பட்டுவிடாது என்ற அடிப்படை உண்மையை, அறிவியல் உண்மையை முதலில் நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

இவற்றையெல்லாம் என்றோ நாம் செய்திருக்க வேண்டும்… சரியாக இருந்த சூழலை நாம்தான் உண்மையை உணர்ந்து கொள்ளாமல் மாற்றினோம்… நினைத்துப் பாருங்கள்… எத்தனைச் சிறந்த எழுத்தாளர்கள் நம் தமிழ் நாட்டில் இருந்தார்கள்… எவ்வளவு சிறந்த இலக்கியங்களைப் படைத்திருக்கிறார்கள்… கதை, சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல், நாடங்கம் என எத்தனை எத்தனை மிகச்சிறந்த படைப்புகளை படைத்துக் கொடுத்திருக்கிறார்கள்…

அவ்வளவு உயர்ந்த படைப்புகளைக் கொடுத்த மாபெரும் எழுத்தாளர்களை, சிந்தனையாளர்களை எல்லாம் கொண்டாடாமல், அவர்கள் வாழும்பொழுதே அவர்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோம்… விளைவு, இன்று நம் இளைய சமுதாயம் சுத்தமாக படிப்பதை நிறுத்திவிட்டது… சிந்திப்பதை நிறுத்திவிட்டது… புத்தகம் படிப்பதை தவறான செயலாகவே நினைக்க ஆரம்பித்து விட்டார்கள்…புத்தகம் படிப்பதை, பொழுதுபோகாமல் இருப்பவர்கள் செய்யும் தேவையில்லாத செயலாக நினைக்கிறார்கள்..!

படிக்கவே படிக்காமல், சிந்திக்கவே தெரியாமல் போனதன் விளைவு என்ன தெரியுமா..? இன்றைய இளைய சமூகம் தனக்கு மட்டுமே பசிக்கும் என்று நினைக்கிறது… தனக்கு மட்டுமே வலிக்கும் என்று நினைக்கிறது… தன்னை மட்டுமே தயார்ப்படுத்திக் கொள்கிறது… தன்னைத் தவிர எதைப்பற்றியும் சிந்திப்பதில்லை.

தனக்குப் பசிக்கும் என்பதை நினைக்கும்போது, அந்த உணவு எப்படிக் கிடைக்கிறது..? யார் அதை உருவாக்குவது..? அதில் இருக்கும் பிரச்னைகள் என்ன..? என எதைப்பற்றியும் இந்த இளைய சமூகத்தால் சிந்திக்க முடியவில்லை… சிந்திக்கத் தெரியவில்லை.

இந்தச் சமூகத்தின் மேன்மைக்காகவே சிந்தித்து செயல்பட்டு வயதாகி வாழ்ந்து மறைந்த மாமனிதர்களைப் பற்றி ஓராயிரம் புத்தகங்கள் வந்திருந்தாலும், அவைகளையெல்லாம் படித்து அறிந்துகொள்ளாமல், சில வரிகளில் வரும் செய்திகளைப் படித்து, சீர்கெட்ட சிந்தனைகளை வளர்த்துக்கொள்ளும் நிலைக்கு வந்து நிற்கின்றன இளைய சமூகம்..! இது குற்றச் சாட்டில்லை… இந்தப் பூமி இன்றோ நாளையோ மறைந்து போகப்போவதில்லை… இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்தப் பூமி இருக்கும்… அதில் நாமும் மரம், செடி, கொடி, புள், பூண்டு, பறவைகள், விலங்குகள், மீன்கள் என எல்லா உயிரினமும் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது…

அதற்கு இந்தப் பூமி ஆரோக்கியமாக இருக்க வேண்டும்… நாமும் மற்ற மற்ற உயிரினங்களும் ஆரோக்கியமாக இருக்கவேண்டும்… இந்தப் பூமியில் இருக்கும் எந்த ஒன்றும் மற்ற எந்த ஒன்றுடனும் தொடர்பற்று இல்லாமல் இல்லை… பல்லாயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பால் இருக்கும் அமேசான் காட்டுக்கும் நமக்கும் சம்பந்தம் இருக்கிறது… பல்லாயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பால் இருக்கும் அண்டார்ட்டிக் பனிப்பிரதேசத்துக்கும் நமக்கும் சம்பந்தம் இருக்கிறது…

ஆனால், நாம் நமக்கும் நம் பக்கத்து வீட்டுக்காரனுக்கும் சம்பந்தமில்லை என்று வாழ்கிறோம்… ஒரு மாணவன் தன்னுடன் படிக்கும் மற்ற மாணவன் மீது அக்கறையற்று இருக்கிறான்… ஒரு ஆசிரியருக்குத் தன் மாணவன், மாணவி மீது அக்கறையில்லை… பாடங்களைச் சொல்லிக்கொடுக்கும் கடமை மட்டுமே ஒரு ஆசிரியருக்கானதல்ல… பெற்றோரின் கடமை தங்கள் குழந்தைகளைப் படிக்க அனுப்புவதோடு நின்றுவிடுவதில்லை… அந்தக் குழந்தைகளை இந்தச் சமூகத்திற்கானதாக மாற்றும் பொறுப்பு அவர்களுக்கும் உண்டு… சொல்லப்போனால், பெற்றோர்களுக்குத்தான் அதிகம் இருக்கின்றது என்று சொல்ல வேண்டும்..!

ஒரு ஆசிரியர், மாணவ, மாணவிகள் மீதான தன்னுடைய அன்பை, அக்கறையை அவர்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்… தன்னுடைய மாணவ, மாணவிகளைத் தோழர்களாகக் கருதவேண்டும்… வீட்டுப் பிரச்னை, சொந்தப் பிரச்னை, சமூகப் பிரச்னை என எதையும் தன்னிடம் மனம் விட்டுப் பகிர்ந்துகொள்ளும் அளவுக்கான சுதந்திரத்தை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்…

ஒரு பெற்றோர் தங்களுடைய அலுவலகப் பணிச் சுமைகளுக்கு இடையில் தங்களின் குழந்தைகள் மீதான கவனத்தை எக்காரணம் கொண்டும் விட்டுவிடக் கூடாது… அந்தக் கவனம் என்பது அவர்களைச் சந்தேகப்படுவதாக அவர்கள் நினைப்பதைப் போல அமைந்துவிடக் கூடாது… அவர்கள் மீதான அக்கறையினால் அவர்களைக் கவனிப்பதாக வெளிப்பட வேண்டும்… அதற்கு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீது உண்மையான, முழுமையான அன்பும் அக்கறையும் இருக்க வேண்டும்..!

ஒரு அரசுக்கும் மாணவ, மாணவிகள் மீதான பொறுப்பு அதிகமிருக்கிறது என்பதை ஆளுகின்ற ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும்… சிறிய, பெரிய கட்சிகள் என பாரபட்சமில்லாமல், அரசியல்வாதிகள் ஒவ்வொருவருக்கும் அந்தப் பொறுப்பும் அக்கறையும் இருக்கிறது… அதன் காரணமாகத்தான் மக்கள் உங்களை மதிக்கிறார்கள்… தேர்தல்களில் உங்களுக்கு வாக்களிக்கிறார்கள்… மக்களை ஆளும் வாய்ப்பு உங்களுக்குக் கொடுக்கப்பட்டபின், அந்தப் பொறுப்பினாலும் அக்கறையினாலும்தான் அரசுப் பள்ளியில், கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் எதிர்காலம் சிறப்பானதாக அமையும்… அதற்கான முழுமையான பொறுப்பும் உங்களிடம்தான் இருக்கிறது…

அரசுப் பள்ளியிலோ கல்லூரியிலோ படிக்கும் மாணவ, மாணவிகளின் சிந்தனைகள், செயல்பாடுகள் அனைத்துக்கும் பொறுப்பு அரசாங்கம்தான்… அந்த மாணவ, மாணவிகள் எப்படி உருவாக வேண்டும்..? உருவாக்கப்பட வேண்டும் என்பதை அரசாங்கம்தான் தீர்மானிக்கும்… மாணவ, மாணவிகள் என்னென்ன படிக்கவேண்டும் என்பதை அரசாங்கம்தான் முடிவு செய்கிறது… பாடங்கள் முழுமையும் அரசாங்கத்தால்தான் தேர்ந்தெடுக்கப்படுகின்றன…

ஆசிரியர்களை வைத்துக்கொண்டு மாணவ, மாணவிகளை அரசாங்கம் உருவாக்குகிறது… ஐந்து வயதில் பள்ளியில் சேர்ந்து, கல்லூரி முடிக்கையில் கிட்டத்தட்ட இருபது வயதுக்குக் குறையாமல் ஆகிவிடுகிறது… மாணவ, மாணவிகள் பதினைந்து வருடங்கள் தங்களின் வாழ்க்கையை ஆசிரியர்களிடம், அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட ஆசிரியர்களிடம் தங்களின் பதினைந்து வருட வாழ்க்கையை ஒப்படைக்கிறார்கள்..! அப்படியென்றால் அந்த மாணவ, மாணவிகளின் வாழ்க்கையை வடிவமைக்கும் பொறுப்பு அரசுக்கும் அரசு நிர்ணயித்த ஆசிரியர்களுக்கும் இருக்கிறது என்பதை எப்படி மறுக்க முடியும்..? மாணவ, மாணவிகளுக்கு படிப்பை மட்டுமல்லாமல் எதையும் எதிர்கொண்டு நம்பிக்கையுடன் வாழ்க்கையில் வெற்றிபெற கற்றுக்கொடுக்கும் பொறுப்பு ஆசிரியர்களிடம் இருக்கிறது..!

ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளுக்கு பாடத்தை மட்டுமல்லாமல், மற்றவற்றையும் கற்றுக்கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது… மற்றவைகள் என்றால் எவையெவை..? எல்லாவற்றையும்… ஆம்… எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்தே ஆகவேண்டும்..!

தொடரும்…