
புதிய நம்பிக்கை – 5
நம் மாணவ, மாணவிகளுக்கு எல்லாவற்றையும் கற்றுக்கொடுக்க வேண்டும்… பாலியல் கல்வியையும் கூடக் கற்றுக்கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு வந்திருக்கிறோம் என்பது இன்று அனைவருக்கும் புரிந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்… காரணம், அனைவரின் கைகளிலும் கை பேசிகள் – ஒன்றுக்கு இரண்டாக -நீக்கமற நிறைந்து ஆக்கிரமித்திருக்கின்றன… அதில் இல்லாத எதையும் நாம் புதிதாகச் சொல்லிக் கொடுத்துவிடப் போவதில்லை என்பதும் புரிந்திருக்கிறது.
சமூகத்தின் மீது அக்கறை உள்ளவர்களால் மாற்றத்திற்கான முன்னெடுப்புகள் ஏற்படுத்தப்பட்டும், சில பிற்போக்கு அரசியல்வாதிகளாலும், பிற்போக்குச் சிந்தனைவாதிகளாலும் அவை இன்னும் ஆரம்பக் கட்டத்திலேயே நின்று கொண்டிருக்கின்றன…
மாணவ, மாணவிகளுக்கு, அந்த வயதில், அந்தப் பருவத்தில் எல்லாவற்றையும் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் ஏற்படுவது இயல்பான ஒன்றுதான்… அவர்களின் இளம் மூளை ஏராளமானவற்றை நிரப்பிக்கொள்ளத் தயாராக இருக்கும்… உடலில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களும் மூளையுடன் இணைந்து அனைத்தையும் அறிந்து கொள்ள ஆசைப்படும்… அவர்களின் அந்த ஆர்வத்தைப் பயன்படுத்திக் கொண்டு, நாம் அவர்களைச் சரியாகக் கையாள வேண்டும்… அனைத்தையும் அந்தப் பருவத்தில் சொல்லிக் கொடுப்பதன் மூலம் மாணவ, மாணவிகளை நாம் சரியாகக் கையாள முடியும். அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்களை, நம்பிக்கைகளை எளிதாக அவர்களின் சிந்தனைகளில் சேர்த்துவிட முடியும்…
ஆனால், அந்த வயதுக்கேயான செயல்களை பெற்றோர்களும் உறவினர்களும் ஆசிரியர்களும் உணர்ந்து கொள்ளத் தவறிவிடுகிறோம்… அவர்களைத் தவறாகக் கருதுகிறோம்… அத்தகைய எண்ணத்தை முதலில் நாம் அனைவரும் மாற்றிக் கொள்ள வேண்டும்…
இங்கே நான் சொல்வது மாணவ, மாணவிகளின் அனைத்து செயல்களையும் சிந்தனைகளையும் சேர்த்துத்தான்… இன்றைய காலகட்டத்தில் அது அத்தியாவசியமான ஒன்றாக அமைந்துவிட்டது…
அதன் அடிப்படையில்தான் குழந்தைகளுக்குத் தொடுதல்களைப் பற்றிச் சொல்லிக் கொடுக்குமாறு சொல்கிறார்கள் உளவியல் அறிஞர்கள்… ஒரு பெண் குழந்தையோ அல்லது ஆண் குழந்தையோ இருவருக்குமே “சரியான தொடுதல்கள், தவறான தொடுதல்கள்” எவையெவை என்பதைச் சொல்லிக் கொடுப்பதை அவசியம் கடைபிடித்தாக வேண்டும்…
இந்த விஷயத்திலேயே நம் எல்லோரிடமும் சரியான புரிதல் இல்லை என்றுதான் தோன்றுகிறது… பலரும், ஆண் குழந்தைகளுக்கு இந்தத் தொடுதல் விஷயங்களைப் பற்றிச் சொல்லிக் கொடுப்பதில் எந்தப் பயனும் இல்லை என்று எண்ணுகிறார்கள்… அதுவே அடிப்படையில் தவறான சிந்தனை…
குழந்தைகளின் எண்ணங்களில் ஆண், பெண் என்கிற அடிப்படை வேற்றுமைகள் இருக்கக் கூடாது என்பதுதான் முக்கியம்… குழந்தைகளைப் பொறுத்த வரையில் அவர்களுக்கு உடல்களைப் பற்றிய புரிதல்களுக்காக தொடுதல்களைப் பற்றிய உண்மைகள் சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை… குழந்தையிலேயே அவர்களின் சிந்தனையில் பால் பேதங்களைத் தவிர்ப்பதற்காகத்தான் சொல்லிக்கொடுக்கப் படுகின்றன… ஆண் என்பவன் மேலானவன், பெண் என்பவள் ஆணைவிட தகுதி குறைந்தவள் என்கிற சிந்தனை உருவாகாமல் அந்த வயதிலேயே கட்டுப்படுத்தப் பட வேண்டும்…
அனைத்தின் மீதும் அக்கறை இருந்தது..!
இன்றைக்கு இருக்கும் அறிவியல் முன்னேற்றம் தொண்ணூறுகளில் எல்லாம் இருக்கவில்லை… ஆனால், தொண்ணூறுகள் வரையில் கூட குழந்தைகள் மீதான் பாலியல் அத்து மீறல்கள் ஏறக்குறைய இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்… அதற்குக் காரணம், அன்றைக்கு மாணவ, மாணவிகளுக்கும் சரி, நம் சமூகத்திலும் சரி நல்லது கெட்டது என்கிற இரண்டும் கொஞ்சம் கொஞ்சம் எல்லோருக்கும் தெரிந்துதான் இருந்தது… அத்துடன் மனிதர்களிடம் மட்டுமல்லாமல் சக உயிர்களின் மீதான அக்கறையைக் கூட ஆழமாகக் குழந்தைப் பருவத்திலேயே கற்றுக்கொடுக்க ஆரம்பித்திருந்தார்கள்… அடுத்தவர்களின் வலியை உணர்ந்து கொள்ளுவது இயல்பான ஒன்றாகவே ஒவ்வொருவரிடமும் இருந்தது என்று சொல்லலாம்…
கதை, கவிதை, நாடகம், பாட்டு, கூத்து முதல் சினிமா வரையில் எல்லாவற்றிலும் நன்மையும் தீமையும் கலந்தேதான் இருந்தது… முற்றிலுமாக நன்மையை மட்டுமோ அல்லது முற்றிலுமாக தீமையை மட்டுமோ கொண்டிருக்கும் எந்த ஒரு கலையையும் பார்க்க முடியாது… கிராமங்களில் நடக்கும் கரகாட்டம், ஒயிலாட்டம், கிராமங்களில் நடக்கும் மேடை நாடகங்கள் என எல்லாவற்றிலும் எவ்வளவு பாலியல் சமாச்சாரங்கள் கலந்திருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்…
திரைப்படங்களை எடுத்துக் கொண்டால் அதிலும் எல்லாமும் இருக்கும்… ஒரு படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கிறதென்றால் ஐந்தும் ஐந்து விதமான கருத்துகளைச் சொல்லும் வகையில் அமைந்திருக்கும்… காதல், கலாட்டா, சோகம், தத்துவம், கவர்ச்சி என அனைத்து விதமான உணர்வுகளையும் ஒரே படத்தின் பாடல்களில் பார்க்க முடியும்… பாடல்கள் மட்டுமல்லாமல், படத்தின் கதையும் காட்சி அமைப்புகளிலும் கூட அப்படித்தான் எல்லாமும் கலந்தேதான் இருக்கும்…
ஒரு மனிதனை முற்றிலும் ஒழுக்கம் நிறைந்தவனாகவோ, நல்லவனாகவோ உருவாக்க முடியுமா என்றால், நிச்சயமாக முடியாது… அதைப்போலவே ஒருவனை முற்றிலுமாக ஒழுக்கம் குறைந்தவனாக, தீயவனாக வளர்க்க முடியுமா என்றால், உறுதியாகச் சொல்ல முடியும், அதுவும் சாத்தியம் இல்லாத ஒன்றுதான்… இதற்குக் காரணம் என்னவென்றால், நம் மூளையின் அமைப்பும், இயற்கையின் உடற்கூறு அமைப்பும் அதற்கு ஏற்றவாறு இல்லாமல் இருப்பதுதான்…
அனைத்தையும் சொல்லிக் கொடுங்கள்… அனைத்தையும் கற்றுக் கொடுங்கள்… அல்லது கற்றுக்கொள்ளப் பழக்குங்கள்… ஐந்து வயதுக் குழந்தை மொபைலை அத்தனைச் சுலபமாகக் கையாளும் போது, அதற்கு ஏன் பாடங்களையோ, சில பழக்க வழக்கங்களையோ கற்றுக் கொள்வது கடினமாக இருக்கப்போகிறது..?
பத்து வயதில் பாடங்களுடன் இலக்கியம், சினிமா, விளையாட்டு, ஆட்டம், பாட்டம், கூத்து, கொண்டாட்டம் என ஏன் அவற்றால் அனைத்தையும் உள் வாங்கிக் கொண்டு, தங்கள் வாழ்க்கையை இயல்பாக வாழ முடியாது..? அந்த வயதில் வாழ்க்கையை வாழ்வதற்கு என்ன இருக்கிறது? என்று யோசிக்காதீர்கள்… நான் சொல்வது, நீங்கள் அவர்களுக்கு என்று உருவாக்கி வைத்திருக்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறதல்லவா, அதை ஏன் அவர்களால் இயல்பாக அமைத்துக் கொள்ள முடியாது? என்று கேட்கிறேன்…
இன்று நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு அதிகபட்சமாக எதைக் கற்றுக் கொடுத்திருக்கப் போகிறீர்கள்..? “படி… படி… படி… அதிக மதிப்பெண்கள் எடு… குறைந்த பட்சம் எதிர்வீட்டில் உன்னுடன் படிக்கும் அவனை விட அதிகமான மதிப்பெண்களை வாங்கு..” இதைத்தவிர வேறு எதை நீங்கள் கற்றுக்கொடுத்திருக்கப் போகிறீர்கள்..! அப்படி இருக்கும் அந்தக் குழந்தையின் இயல்பு வாழ்க்கை எப்படியிருக்கும்..? அதற்கு எங்கிருந்து? எப்படி நம்பிக்கை கிடைத்திருக்கும்..? அந்தக் குழந்தை தனக்கு ஏற்படும் சிக்கல்களை எப்படிச் சரியாகக் கையாள முடியும்..?
நிச்சயமாக அந்தக் குழந்தையால் இயல்பான வாழ்க்கையை வாழ முடியாது… அப்படி முடியவில்லை என்றால், நம் ஒட்டுமொத்த அத்தனை வருட வாழ்க்கையும், வழிகாட்டுதல்களும் தவறானது என்றுதானே அர்த்தம்… அது பெற்றோருக்கும் பொருந்தும், ஆசிரியருக்கும் பொருந்தும் அரசியல் வாதிகளுக்கும் பொருந்தும்… ஏன்? இந்த மொத்த சமூகத்துக்குமே பொருந்தும்.
இது மாணவ, மாணவிகளின் கல்லூரி வாழ்க்கை வரைக்குமான பொதுவான கருத்துதான்… இனிமேலும் தயங்க வேண்டாம்… கற்றுக் கொடுங்கள்… அனைத்தையும் கற்றுக் கொடுங்கள்… குழந்தைகளாக இருக்கும்போது தொடுதல்கள் பற்றியும், பருவ வயது வரும்போது பாலியல் கருத்துகளையும் சொல்லிக் கொடுப்பதை அவசியமான ஒன்றாக அமைத்துக்கொள்ள வேண்டும்.
இரைச்சல் இசைக்குள் ஒளிந்து கிடந்து ஒலிக்கும் ஓரிரு வார்த்தைகளைக் கூடக் கண்டுபிடித்து பாடுகின்றன நம் ஆறேழு வயது குழந்தைகள்… அவைகளுக்குத் தமிழிலோ அல்லது மற்ற மொழிகளிலோ எத்தனை வார்த்தைகள் இருக்கிறதென்றே தெரியாது… சில நூறு வார்த்தைகள் மட்டுமே தெரிந்த அந்தக் குழந்தைகள், பாடல்களுக்குள் புதைந்து கிடக்கும் அவர்களுக்குத் தெரியாத, புரியாத வார்த்தைகளைக்கூட சரியாகக் கண்டுபிடித்துப் பாடுகின்றன…
மாணவ, மாணவிகள் பருவ வயதில் ஒரு கதாநாயகனின் வாழ்க்கையில் நடந்த அத்தனைக் கதைகளையும், அவர்கள் படங்களில் இருக்கும் அத்தனை வசனங்களையும் கூட நினைவில் வைத்துக்கொள்ளும் அவர்களுக்கு, கூடவே சரியான சிந்தனைகளையும் கருத்துகளையும் சொல்லிக் கொடுப்பதில் என்ன சிக்கல்கள் இருக்கப் போகின்றன..! சிக்கல்கள் எதுவும் இருக்காது என்பதை நாம் புரிந்துகொண்டு, அவர்களுக்கும் புரியவைக்க வேண்டும்…
கற்றுக் கொடுங்கள்… அன்பு, பாசம், நட்பு, துரோகம், கருணை, கடமை, காதல், காமம், இசை, நடனம், பாடல், கதை, கவிதை என எல்லாவற்றையும் கற்றுக் கொடுங்கள்… எதையும் விட்டு விடாதீர்கள்… அதைத்தான் அன்றைக்கு நம் எழுத்தாளர்கள் தங்களின் எழுத்துகளில் படைத்தார்கள்… இன்றும் படைத்துக் கொண்டிருக்கிறார்கள்…
கிரிக்கெட் மட்டுமே விளையாட்டல்ல..!
அத்துடன் இன்னொன்றையும் முக்கியமாகக் கவனத்தில் கொள்ளுங்கள்… ஏதோ ஒன்றை மட்டுமே கற்றுக்கொடுத்து, அது ஒன்று போதும், அது மட்டுமே அவர்களின் வாழ்க்கையை கட்டமைத்து விடும் என்பது போன்ற தவறான காரியங்களைச் செய்யாதீர்கள்…
நாம் தொலைக் காட்சிகளிலும் மொபைல்களிலும் பார்க்கலாம்… சில குழந்தைகள் ஆடல், பாடல், பேச்சுகளில் அதீதமான திறமையுடன் செயல்படுவார்கள்… அதைப் பார்க்கும் நமக்குப் பிரமிப்பாக இருக்கும்… உடனே அந்தப் பிரமிப்பில் நம் குழந்தைகளையும் அவர்களைப்போல மாற்ற வேண்டும் என்று முயற்சிக்க ஆரம்பிப்போம்… நம் குழந்தைகளின் மீது அப்படிப்பட்ட எண்ணத்தை திணித்து அவர்களை மாற்ற முயற்சிப்போம்…
ஒரு குழந்தைக்கு ஆடவும் பாடவும் தெரிந்தால் மட்டும் போதுமா..? ஆடவும் பாடவும் தெரிந்துகொண்டு அதைக்கொண்டு அந்தக் குழந்தை எதைச் சாதித்துவிட முடியும் என்ற புரிதல் எதுவும் நம்மிடம் இல்லை… அதனால்தான் இன்றைக்குப் பெரும்பாலான தொலைக்காட்சிகளில் அப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் அதிகமாக இருக்கின்றன… இந்தச் சமூகத்துக்கு மதுக்கடைகளால் ஏற்படும் ஆபத்துகளைவிட, தொலைக்காட்சித் தொடர்களால் ஏற்படும் சீர்கேடுகளைவிட, இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளால் உண்டாகும் மோசமான சிந்தனை மாற்றங்கள் ஒட்டுமொத்த சமூகத்துக்குமே மிகப்பெரும் ஆபத்து என்கிற புரிதல் நமக்கு இல்லை…
இதற்கு நாம் சரியான உதாரணமாக ஒன்றைச் சொல்லலாம்… கிரிக்கெட் என்ற ஒரு விளையாட்டை மட்டுமே முன்னிலைப் படுத்தி, நம் நாட்டில் இருக்கும் அனைத்து விளையாட்டுகளையும் அழித்துவிட்டோம்… நம் நாட்டின் தேசிய விளையாட்டான ஹாக்கியையே நாம் மறந்துவிடும் அவலமான நிலைக்கு வந்துவிட்டோம்…
நம் கிராமங்களில் எத்தனை வகையான விளையாட்டுகளை நம் குழந்தைகள் விளையாடுவார்கள்… பகல், இரவுக்கு ஏற்ற மாதிரியான விளையாடுகள்… கோடை, குளிர்காலம் போல சூழலுக்கு ஏற்ற விளையாட்டுகள்… வயல்கள், காடு, நீர்நிலைகள் என இடத்துக்கு ஏற்ற மாதிரியான விளையாட்டுகள் என விதம் விதமாக விளையாடுவார்கள்…
ஆனால், இன்று கிராமம், நகரம் என எங்கு பார்த்தாலும் நம் குழந்தைகள் விளையாடுவது கிரிக்கெட்டாகத்தான் இருக்கிறது… அவர்களின் எண்ணத்தில் கிரிக்கெட் மட்டுமே பதிந்து போயிருக்கிறது… இந்த விளையாட்டினால் நமக்கு எந்தப் பயனும் இல்லை என்கிற உண்மையை அவர்களால் உணர முடியவில்லை… இளைஞர்கள் தங்கள் சுயத்தை இழந்துவிடும் அளவுக்கு அவர்களின் சிந்தனையில் ஆழமாகப் பதிந்து கிடக்கிறது கிரிக்கெட்… பதிந்து கிடக்கிறது என்று சொல்வதைவிட, பதிய வைக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் சரி… ஏன்? எதற்கு? யாரால்? என்பதையெல்லாம் இப்போது விவாதித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை…
சாதாரண உடற்பயிற்சிக்காகக் கூட மற்ற மற்ற விளையாட்டுகளை விளையாட விரும்பாமல் கிரிக்கெட்டை மட்டுமே விளையாடும் அளவுக்கு நிலைமை மோசமாகிப் போயிருக்கிறது…
அப்படிப்பட்ட மோசமான மாற்றத்திற்குத் தொலைக்காட்சிகளும் ஒரு முக்கியமான காரணம்… அப்படித்தான் இன்று ஆட்டம், பாட்டு, கொண்டாட்டம் என்று குழந்தைகளையும் இளைஞர்களையும் சிந்தனைக் குருடர்களாக மாற்றும் வேலைகளைச் செய்து வருகின்றன தொலைக்காட்சிகளும் சமூக ஊடகங்களும்.
அவற்றில் இருந்தெல்லாம் குழந்தைகளையும் மாணவ, மாணவிகளையும் காப்பாற்றி அவர்களை சுய சிந்தனை கொண்டவர்களாக மாற்றவேண்டும். அவர்களிடம் நம்பிக்கையை விதைக்க வேண்டும்… அவர்களை நாளைய சமூகத்திற்கு ஏற்றவர்களாக வடிவமைக்க வேண்டும். இவையெல்லாம் சாத்தியம் ஆகவேண்டும் என்றால், அவர்களுக்கு அனைத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும்… பாலியல் கல்வி உட்பட அனைத்தையும் கற்றுக்கொடுக்க வேண்டும்.
நம்மிடம் மொபைல் என்கிற ஒரு சாதனம் வந்தவுடன் இந்தக் கற்றுக்கொடுக்கும் போக்கில் மற்றொரு பெரும் சிக்கல் உருவாகிவிட்டிருக்கிறது… அது, முதலில் நம் குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகளின் எண்ணத்தில் ஆழமாகப் பதிந்து கிடக்கும் தவறான அல்லது தேவையற்ற குப்பையான சிந்தனைகளை அகற்றிவிட்டு. அதன்பின்னர்தான் புதிய, ஆரோக்கியமான சிந்தனைகளைப் புகுத்த வேண்டிய அளவுக்கு ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ளது…
தொடரும்…

