
– வி.முகுந்தன்,கண் பரிசோதனை நிபுணர்(Optometrist)
இருளை பகலாய் மாற்றும் பிரகாச ஒளி வழங்கக்கூடிய மின்விளக்குகள் ஊரெங்கும் பரவலாகிவிட்டன.அயராது கணினி(கம்ப்யூட்டர்) முன் அமர்ந்து ஆடாமல் அசையாமல் மணிக்கணக்கில் வேலை. குழந்தைகளின் கைகளை கூட தாளம் போடவைக்கும் மொபைல் போன்கள்… உயிரும் உடலும் போல, நகமும் சதையும் போல, இன்று கைகளும் கைப்பேசிகளும் பிரிக்கமுடியாத அளவுக்கு இணைந்துவிட்டன. இணையத்தின் வழி இணைப்பு பெற்ற நவீன தொலைக்காட்சிப் பெட்டிகள்…ஒளி உமிழ் திறனால் துல்லிய காட்சிகள்.ஒளியை உமிழ்ந்தபடிபோட்டி போட்டுக்கொண்டு அதிவேகமாக சாலைகளில் ஓடும் வாகனங்கள் … இப்படி இயற்கை சூரிய ஒளியின் புற ஊதாக் கதிர்களோடு போட்டி போடும் செயற்கை ஊதாக் கதிர்கள் …தடுக்கவோ தவிர்க்கவோ முடிவதில்லை. எல்லாமே வாழ்வின் அங்கமாகவே மாறிவிட்டன.

மருத்துவம், திரைப்படத்துறை, தொழில்- வணிகம்,உயிர் இயற்பியல் என அனைத்துத் துறைகளிலும் கதிர்வீச்சின் பயன்பாடுகள்… இதனால் நன்மை பல இருப்பினும் தீமைகளும் இருக்கத்தானே செய்கின்றன.
தோலின் நிறம் கருத்தல், முகச்சுருக்கங்கள், கண்களில் புரை ஏற்படுதல், கண்களின் விழித்திரை பாதிப்பு, கண்கள் எளிதில் சோர்வடைதல், கண் கூசுதல் போன்ற பல பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. நன்மைகளை அனுபவிக்கும் அதே தருணத்தில் தீமைகளைத் தடுக்கும் விதமாக கண்களுக்கு ஊதா மற்றும் புற ஊதா கதிர் தடுப்பு மற்றும் கதிர் பிரதிபலிக்கும் தன்மை கொண்ட கண் கண்ணாடிகள் பயன்பாட்டில் உள்ளன.
பார்வை குறைபாடுகளை சரி செய்யும் திறன் கொண்ட கண்ணாடிகளிலும் இவ்விதமான கதிர் தடுப்பு மற்றும் பிரதிபலிக்கும் தன்மை கொண்ட சிறப்பு பூச்சி படலம் கொண்ட திறன் கண்ணாடிகளும் இப்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
பார்வை குறைபாடு இல்லாத மாணவ மாணவியர்கள் கூட திறன் இல்லா கதிர் தடுப்பு பூச்சு உள்ள கண்ணாடிகளை அணிந்து இணையவழி கல்வி கற்க ஸ்மார்ட் போன் அல்லது கம்ப்யூட்டரை பயன்படுத்தலாம்.இதன் மூலம் கண்களை பாதுகாக்க முடியும்.
தற்போது மிகக்குறைந்த விலைகளில் எல்லோராலும் வாங்கக்கூடியதாகவும் எளிதில் கிடைக்கக்கூடியதாகவும் இருப்பதால் தேவை இருப்பவர்கள் பயன்படுத்தி கண்களை பாதுகாத்துக்கொள்ளலாம்.
இவைகளெல்லாம் ஒருபுறம் இருக்க…அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே கம்ப்யூட்டரையும் போனையும் பயன்படுத்த வேண்டும்.கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகம் உள்ளவர்கள் போதிய இடைவெளியில் கண்களுக்கு ஓய்வு தர வேண்டும்.பொழுதுபோக்கிற்கு கம்ப்யூட்டரை பயன்படுத்தக்கூடாது.இளம் வயதினர் இணையதள விளையாட்டுக்களை தவிர்த்து விளையாட்டு மைதானங்களுக்கு நேரடியாகப் போய் வேர்வை சிந்த விளையாடுவதே நல்லது.தவறினால் பாதிப்பது கண்கள் மட்டுமல்ல…வாழ்க்கையும் தான்.

