டாக்டர்.வை.சிங்காரவேலு பேட்டி.

சென்னையின் அடையாளங்களில் ஒன்று ஜி.எச்.என்று அழைக்கப்படும் ராஜீவ் காந்தி மருத்துவமனை. சென்னை மக்கள் மட்டுமல்ல,தமிழ்நாடு,ஆந்திரா,தெலுங்கானா மக்களின் உயிர்காக்கும் உயர்ந்த மருத்துவ மையம்.ஆர்த்தோ துறையின் இயக்குனர் மற்றும் பேராசிரியர்(பொறுப்பு) டாக்டர்.வை.சிங்காரவேலுவை நமது இதழ் சார்பாக சந்தித்து பேசினோம். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் சாலை விபத்துகளில் அதிகம் பேர் மரணம் அடைவதாக சொல்லப்படுகிறது.காரணம் என்ன?என்று கேட்டோம்.அவரது பேட்டியில் இருந்து…

நமது மாநிலத்தில் விபத்துகளை தவறாமல் பதிவு செய்கிறோம்.ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஏன் விபத்து நடந்தது?விபத்து நடக்காமல் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? என்று ஆய்வு செய்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.அதனால் அதிக மரணம் என்பது போன்ற தோற்றம் ஏற்படலாம்.உண்மை இல்லை.

மக்கள்,கொரோனாவுக்கு அஞ்சி கட்டுப்பாட்டோடு மாஸ்க் போட்டுக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வராமல் தவித்தார்கள்.கொரோனாவை விட தினசரி விபத்துகளில் மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகம். உலகப் போர்களில் இறந்தவர்களை விட சாலை விபத்துகளில் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகம்.

விபத்துகளை தவிர்க்க முடியும்.அதற்கு பெரிய அளவில் பயிற்சி தேவைப்படுகிறது.இருசக்கர வாகனங்களில்  போகிறவர்கள் கட்டாயமாக ஹெல்மெட் அணிந்து கொள்ள வேண்டும்.காவல்துறைக்கு பயந்து சிறிது நேரம் போடுவது,காவலர் கண்காணிப்பு இல்லாவிட்டால் ஹெல்மெட் போடாமல் தவிர்ப்பது என்பது தவறாகும்.வண்டி ஓட்டினால் ஹெல்மெட் அணிவது நல்லது, இது நம்மை பாதுகாக்கும் என்று உயர்ந்த பொறுப்பான பழக்கம் வழக்கமாக மாற வேண்டும்.

எனக்கு 25,30 ஆண்டுகால அனுபவம் இருக்கிறது…விபத்து எல்லாம் ஏற்படாது என்று அலட்சியமாக நடந்து கொள்ளக் கூடாது. எதிர்பாராமல் நடப்பது தான் விபத்து.அதை எதிர்பார்த்து முன்னெச்சரிக்கையோடு நடந்துகோண்டால் விபத்துகளை தவிர்க்கலாம்.

சாலை விதிகளை ஒழுங்காக,முறையாக கடைபிடித்தாலே பெரும்பாலான விபத்துகளை தவிர்க்க முடியும்.நோ என்ட்றியில் பயணம் செய்வது எந்த நேரத்திலும் விபத்துக்கு காரணமாக அமையலாம்.வாகனங்களை முந்தி செல்லும்போது இடது பக்கமாக முந்திச் செல்லும் போதுதான் நிறைய விபத்துகள் நடக்கின்றன.

விபத்துகளில் சிக்குபவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள். சிறு வயதிலேயே பெற்றோர்கள் அளவுக்கு அதிகமாக,வேகமாக செல்லும் வண்டிகளை வாங்கிக் கொடுப்பது, ஊக்கப்படுத்துவது ஏற்புடையது அல்ல.

பள்ளிகளிலேயே சாலை விதிகளை சொல்லித் தர வேண்டும். நல்ல ஒழுக்கம், நீதி நெறிகள் பற்றிய அறநெறி கல்வியும் தேவைப்படுகிறது.

சாலை விதிகளை மீறுபவர்களுக்கு விழிப்புணர்வு தரும் வகையில் ஒரு தண்டனை தரலாம். மருத்துவமனையில் விபத்தில் சிக்கி நடக்க முடியாமல் படுக்கையில் இருப்பவர்களுக்கு,ஒரு வாரம் உதவி செய்யும்படி தண்டனை கொடுத்தால் நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்பட நல்லதொரு வாய்ப்பு உண்டு.விபத்தில் சிக்கி எலும்பு முறிவு ஏற்பட்டவர்களின் துயரத்தை துடைக்க மாநில அரசும் மருத்துவ துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழ் நாட்டில் அவசர சிகிச்சைக்கான முதுகலை படிப்பை அறிமுகம் செய்திருக்கிறார்கள். விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற சிறப்பு மருத்துவ படிப்பாகும்.

அவசர சிகிச்சை முதுகலை பட்டம் பெற்றவர்கள்,விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவதில் நல்ல தேர்ச்சி பெற்றவர்களாக செயல்படுகிறார்கள்.

விபத்து பற்றிய தகவல் வந்தவுடன் 10 நிமிடங்களுக்குள் அதிவிரைவாக 108 ஆம்புலன்ஸ் சென்றுவிடும். அடிபட்டவரின் பாதிப்பு பற்றிய விவரங்கள் மின்னல் வேகத்தில் சேகரிக்கப்பட்டு அந்த இடத்திலேயே சிகிச்சை ஆரம்பமாகும்.

விபத்தில் மரணம் ஏற்படுவதை விட, காயம்பட்டவரை தவறாக கையாளுவதால் ஏற்படும் மரணங்கள் அதிகம்.அந்த நிலை இப்போது மாற்றப்பட்டு விட்டது.இப்போது கவனமாக கையாள சிறப்பு பயிற்சி தரப்பட்டுள்ளது.விபத்து நடந்த இடத்திலேயே பாதிப்புக்கு ஏற்ப எந்த மருத்துவமனையில் சிகிச்சை தரவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு அது தொடர்பான மருத்துவமனைக்கு முன்கூட்டியே தகவல் தரப்படும்.இதனால் மருத்துவ வசதிகள் தயார் நிலையில் வைக்கப்படும்.

மருத்துவமனைக்கு கொண்டு வந்தவுடன் ரத்த இழப்பை ஆய்வு செய்வார்கள். தேவைப்பட்டால் ரத்தம் ஏற்றுவார்கள்.பிறகு எலும்பு முறிவு சிகிச்சை, மூளை பாதிப்பு,கண் பாதிப்பு பற்றி அறிந்து முறையான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு காப்பாற்றப்படுவார்கள்.

எங்களது பணி விபத்தில் சிக்கியவரை உயிர் காப்பது மட்டுமல்ல …பழையபடி உழைத்து வாழ்வதற்கு ஏற்ற மாதிரி நல்ல வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்ய வேண்டும். அது தான் உண்மையான மக்கள் சேவையாகும்.

முன்பு எலும்பு முறிவு சிகிச்சை என்று மட்டுமே இருந்தது.இப்போது இதிலும் பல்வேறு சிறப்பு பிரிவுகள் வந்துவிட்டன.குழந்தைகள் ஆர்த்தோ,ஸ்பைனல் ஆர்த்தோ,மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, ஆர்த்ராஸ் கோபி நிபுணர்,கைகால் சிறப்பு நிபுணர் என பல்வேறு பிரிவுகள் வந்துவிட்டன.

எலும்புகளின் வளர்ச்சி 30 வயது வரை தான் எலும்பு தனக்குத் தேவையான சத்துகளை எடுத்துக் கொண்டு பலமாக இருக்கும். வயது ஏற ஏற எலும்புகள் பலவீனம் ஆகலாம் .கால்சியம் உள்ள உணவுகளை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.அந்த சத்துகளை எலும்புகள் எடுத்துக் கொள்ள நாம் சுறுசுறுப்பாக நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்வது அவசியம்.

வைட்டமின் டி முக்கியம். இதற்கு சூரிய வெளிச்சம் நமது உடம்பில் படும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரையிலான சூரிய ஒளியி 10 நிமிட நேரம் உடம்பில் பட்டால் நமக்குத் தேவையான விட்டமின்கள் கிடைத்துவிடும்.

குழந்தைகளுக்கு நல்ல கல்வியை மட்டும் கொடுத்தால் போதாது.அந்த கல்வியின் வளர்ச்சியை அனுபவிக்கும் அளவுக்கு அவர்கள் ஆரோக்கியமாக வாழ வழி காட்ட வேண்டும். குழந்தைகள் ஓடி ஆடி விளையாட அனுமதிக்க வேண்டும்.பெற்றோர்கள் அதை ஊக்கப்படுத்த வேண்டும்.சுறுசுறுப்பான இயக்கம் தான் உடலுக்கும் பலம்,எலும்புக்கும் வலு சேர்க்கும்.

நமது அன்றாட உணவில் பழங்கள் காய்கறிகள் அதிக அளவில் இடம்பெற வேண்டும்.65 வயதிற்கு மேல் வீட்டில் முடங்கி விடக்கூடாது.தொடர்ந்து நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்து வர வேண்டும்.உணவில் சிறுதானியங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் . இதன் படி நடந்து கொண்டால்  முதுமையில் ஏற்படக்கூடிய எலும்பு முறிவை தடுக்கலாம் என்றார் டாக்டர்.வை சிங்காரவேலு.அவரது மருத்துவ சேவைகளை பாராட்டி வாழ்த்து சொல்லி விடைபெற்றோம்

 சந்திப்பு:பவித்ரன்