
DR. G. RAJAMOHAN
முன்பெல்லாம் கடிதம் எழுதும்போது நலம். நலம் அறிய ஆவல்! என்று குறிப்பிட்டு எழுதுவது வழக்கம்.நலம் என்ற சொல் உடல் நலத்தையே குறிக்கும் என்பது எழுதப்படாத ஒரு விதி.
எவரும் மனநலத்தை பற்றி விசாரிப்பது இல்லை.ஆரோக்கியம் என்பது உடல் நலத்தை மட்டுமே சார்ந்தது என்ற தவறான எண்ணம் பரவலாக எங்கும் உள்ளது. ஆனால் மனிதன் மகிழ்ச்சியான நிம்மதியான நிறைவான வாழ்க்கையை வாழவே விரும்புகிறான்.
ஆரோக்கியம் என்பது உடல் நலத்தையும் மனநலத்தையும் உள்ளடக்கியது. இவ்விரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை.ஒன்று இல்லாமல் மற்றது இல்லை.மனநலத்தை புறக்கணிக்கும் மனப்பாங்கு நம்மிடம் வேரூன்றிப் போய் உள்ளது.
உடல் கோளாறுகள் உள்ளவர்களுக்கு கூடுதல் அளவில் மனச் சோர்வு போன்ற மனநல பிரச்சினைகள் உண்டாகின்றன. அதேபோல் மனநல பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
சரி மனநலம் என்றால் என்ன?
மனக் கோளாறுகள் மன நோய்கள் இல்லாதிருப்பது மட்டுமல்ல…
* தன்னுடைய முழுமையான ஆற்றலை வெளிப்படுத்துதல்.
*அன்றாட வாழ்வில் போராட்டங்களை தாங்கி முன்னேறுதல்.
* திறம்பட பணியாற்றுதல் .
*சமுதாயத்துக்கு தன்னாலான பங்களிப்பை செய்தல்.
இக்கருத்தையே உளப்பகுப்பாய்வின் தந்தை என்று அழைக்கப்படும் சிக்மென்ட் ஃப்ராய்ட், ‘மனித வாழ்க்கையின் நோக்கம் அன்பு செலுத்துவதும் பணி செய்வதுமே ‘என்று ரத்தினச் சுருக்கமாக கூறினார்.
வறுமை மிகுந்த நமது நாட்டில் அனைவருக்கும் மனநலம் கிடைப்பது இல்லை.மன அழுத்தங்கள் வறுமையோடு நெருங்கிய தொடர்புடையவை;வறுமையால் உருவாகுபவை.வறுமையுற்ற சூழலில் வசிப்பவர்களுக்கு மனநலம் பாதிக்கப்படும் சாத்தியக்கூறுகள் அதிகம்.
ஏழைகளுக்கு போதிய வருமானம் இல்லை; சுகாதாரமான இருப்பிடம் இல்லை;சத்தான உணவு இல்லை;கல்வி வேலைவாய்ப்பில் பாதிப்பு… போதைக்கு அடிமையாகும் சூழல்.
வறுமை,ஏழ்மை, அறியாமை ஒழிக்கப்பட வேண்டும்.
அனைவருக்கும் கல்வி,வேலை வாய்ப்புகள் கிடைக்க வேண்டும்.நாம் அனைவரும் மனித சமுதாயம் உடல் நலம்,மனநலத்துடன் வாழ பாடுபட வேண்டும்.
மனநலத்தை மக்கள் மத்தியில் உருவாக்க மனநல ஆதரவு குழுக்களை அமைத்து செயல்படுத்த வேண்டும்.இதற்கு மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

