
வெற்றிலை வீட்டில் அவசியம் இருக்க வேண்டிய பயிர். தண்டு மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது. கணுக்கள், வேர்கள் உள்ள தண்டை நடவு செய்தால் போதும். இது கொடி வகை தாவரம். வீட்டில் வெற்றிலைக் கொடி வளர இடம் இல்லை என நினைப்பவர்கள், ஒரு பிவிசி குழாய் அல்லது கம்பு ஊன்றி, அதில் சணல் கயிற்றைச் சுற்றிவிடலாம். வெற்றிலை பற்றிப் படர இந்தக் கயிறு தேவை.
வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து அதிகம் உள்ளன. வீரியம் மிக்க நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட சவிக்கால் (Chavicol) என்னும் பினைல்புரோபின் (Phen- ylpropene) உள்ளது.வெற்றிலை, உமிழ்நீரைப் பெருக்கும்; பசியை உண்டாக்கும்; பால் சுரக்க வைக்கும்; நாடி நரம்புகளை உரமாக்குவதுடன் காமத்தையும் தூண்டும். கடுகு எண்ணெயில் வெற்றிலையைப் போட்டு சூடுபடுத்தி ஒரு துணியில் வைத்து மார்பில் கட்டினால், மூச்சுத்திணறல் மற்றும் இருமல் கட்டுப்படும். கிராமங்களில் இன்றும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. வெற்றிலையோடு புகையிலை பயன் படுத்துவது நல்லதல்ல.

