விடுமுறையில், அனைவரும் குடும்பத்துடன் சொந்த ஊருக்கோ அல்லது சுற்றுலாத் இடங்களுக்கோ செல்வதற்கான முன்னேற்பாடுகளில் பலரும் தீவிரமாக இருப்பார்கள். கூடவே, சரும விஷயத்திலும் பயணங்களுக்கு ஏற்ப திட்டமிடுவது முக்கியம்!

விமானம், ரயில், பஸ்… பயணக் களைப்பு, கோடையின் வெயில், மலைப் பிரதேசங்களின் குளிர்… என நம் உடலும் கேசமும் எந்தச் சூழல்களிலும் பாதிப்பு அடையாமல் தடுக்க முடியும்.

*தேங்காய் எண்ணெய், புங்கங்காய் பவுடர், வேப்பம் பூ பவுடர், வெந்தயப் பவுடர், எலுமிச்சை சாறு, விளக்கெண்ணெய், தேன், யூக்கலிப்டஸ் ஆயில் போன்றவற்றை எங்குச் சென்றாலும்

கையோடு எடுத்துச் செல்லுங்கள். இவைதான் உங்களின் அழகையும் ஆரோக்கியத்தையும் தக்க வைக்கும் ‘பியூட்டி கிட்’!

*பஸ், ரயில், விமானம் என்று எதில் சென்றாலும் பயணத்துக்குக் கிளம்பும் முன் தேங்காய் எண்ணெயைத் தலையில் தடவி, நன்றாக வாரி பின்னல் போட்டுக்கொள்ளுங்கள். இதனால் பயணத்தின்போது தலைமுடி எதிர்க்காற்றில் பறந்து, தூசி படர்ந்து, வறண்டு போகாமல் தடுக்கலாம்.

*தங்கும் இடத்துக்கு வந்ததும், உடனடியாக புங்கங்காய் பவுடரை வெந்நீரில் கலந்து, தலையில் தேய்த்துக் குளித்துவிடுங்கள். பயணத்தால் கேசத்தில் படர்ந்திருக்கும் அழுக்கு மற்றும் வியர்வையால் ஏற்பட்ட பிசுபிசுப்பு நீங்கும். கேசம் சுத்தமாகும்.

*கால் டீஸ்பூன் புங்கங்காய் பவுடரை மிதமான வெந்நீரில் பேஸ்ட்டாக்கி, கை, கால் நகம், பாதங்களையும் சுத்தம் செய்யலாம். அழுக்குகள் நீங்கும்.

* பலருடன் பயணம் செய்யும்போதும், தங்கும்போதும் குழந்தைகளுக்குத் தலையில் பேன் வரலாம். அரை டீஸ்பூன் வேப்பம் பூ பவுடரை தண்ணீரில் கரைத்து, தலையை அலசுங்கள். பேன், பொடுகு எதுவும் நெருங்காது.

*100 மில்லி தேங்காய் எண்ணெயில் 10 துளி எலுமிச்சைச் சாறை விட்டு, ஒரு பாட்டிலில் எடுத்துச் செல்லுங்கள். இந்த எண்ணெயைத் தலையில் தடவி வாரி, பத்து நிமிடம் கழித்து மிதமான சுடுநீரில் தலையை அலச, முடி பளபளப்பாக ஜொலிக்கும்.

*சிறிது விளக்கெண்ணெயை கண்களைச் சுற்றி தடவி, அரை மணி நேரம் கழித்து மிதமான சுடு நீரில் கழுவுங்கள். அலைச்சலால் ஏற்பட்ட கண் எரிச்சல் நீங்கி, விழிகள் ‘பளிச்’ என்று குளிர்ச்சியாகும்.

*மலைப் பிரதேசங்களுக்குப் போகும்போது தண்ணீரில் நான்கு சொட்டு யூக்கலிப்டஸ் ஆயிலை கலந்து குளித்தால், சளி பிடிக்காமல் இருக்கும்.

*அலைச்சலால் உடம்பை உஷ்ணம் தாக்காமல் இருக்க, வெந்தய பவுடரால் கூந்தலை அலசுங்கள். இது குளிர்ச்சியைத் தருவதுடன், நுனி முடி பிளவுகளையும் நீக்கி, நல்ல கண்டிஷனராகவும் இருக்கும். சுற்றுலா முடித்து வாடி வதங்கிய கத்திரிக்காயாக வீடு திரும்பாமல், புத்துணர்ச்சியுடன் திரும்பலாம்.

-எம்.ஜெயா.