டாக்டர் எஸ்.அமுதகுமார். MBBS,MCIP,PG.DIp.Diabetology,F.C.G.P

த்தசோகை பெண்களை மிக மோசமாக பாதிக்கிறது.”சுறுசுறுப்பே இல்லாம அவ ரொம்ப சோர்ந்து போயிருக்கா. அவ பொண்ணும் ரொம்ப சோர்வாதான் இருக்கா. அம்மா, பொண்ணு அவங்க ரெண்டு பேர் உடம்பிலேயும் ரத்தமே இல்லையாம்.”

அக்கம்பக்கத்தில், நாம் அடிக்கடி கேட்கும் வார்த்தைகள்தான் இவை. அதிகமான உடல் சோர்வு என்று அடிக்கடி சொல்லக்கூடிய பெரும்பாலானவர்கள், அநேகமாக ரத்தசோகை (அனீமியா)என்று சொல்லக்கூடிய கோளாறு உள்ளவர்களாக இருப்பார்கள்.சோர்வாய் இருத்தல், சோர்ந்து போதல்… சோகை என்ற வார்த்தைகூட இந்த வார்த்தைகளிலிருந்து பிறந்ததாகத்தான் இருக்கக்கூடும்.

ரத்தசோகை ஆண், பெண், குழந்தைகள் என யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். உலக மொத்த ஜனத் தொகையில் சுமார் 33 சதவீதம் பேர் ரத்தசோகையினால் அவதிப்படுகிறார்கள். உலக சுகாதார நிறுவன கணக்குப்படி ஐந்து வயதுக்குக் கீழுள்ள குழந்தைகள் சுமார் 42 சதவீதம் பேரும், கர்ப்பிணிப் பெண்களில் சுமார் 40 சதவீதம் பேரும், ரத்தசோகையினால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டிருக்கி றார்கள்.குறிப்பாக சிறு குழந்தைகளுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும்தான் ரத்தசோகை அதிகமாக இருக்கிறது.ஒரு மாநிலம் கூட விடாமல், இந்தியா முழுவதுமே ரத்தசோகை பரவலாக இருக்கிறது.

வீட்டுக்கு வீடு வாசற்படி என்பதுபோல, ஒரு வீட்டில் ஒருவருக்காவது ரத்தசோகை இருக்கத்தான் செய்கிறது. பெண்களைப் பொறுத்தவரை அதிக ரத்தக் கசிவு,ரத்த இழப்பு, தைராய்டு ஹார்மோன் குறைவு,மரபுவழி நோய்கள், சில மருந்துகளின் பக்க விளைவுகள் முதலியவைகள் ரத்தசோகையை உண்டு பண்ணலாம். குழந்தைகளைப் பொறுத்தவரை சரியான, சத்தான உணவு இல்லாததே ரத்தசோகை ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணமாக அமைகிறது. குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் வயிற்றில் குடற்புழுக்கள் அதிகமாக இருந்தால் ரத்தசோகை கண்டிப்பாக ஏற்படும்.

மிகச்சிறிய வயதிலேயே பெண்கள் பூப்பெய்துவது, மிகச் சிறிய வயதிலேயே  திருமணம் செய்து கொடுப்பது, மிகச் சிறிய வயதிலேயே குழந்தை பெற்றுக்கொள்வது, போன்றவற்றால் சமுதாயத்தில் ரத்தசோகை நோயாளிப் பெண்களும் மஅதிகமாகிக் கொண்டே வருகின்றனர்.

உடம்பில் ரத்தமே இல்லை, அதுதான் ரத்தசோகை என்று எல்லோரும் நினைத்துக் கொள்கிறார்கள். அது சரியல்ல.ரத்தத்தில் சிவப்பணுக்கள் அதிகமாக இல்லை, ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகமாக இல்லை என்பதுதான் சரியான விளக்கம்.ஒருவருடைய ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறையும்போது, ரத்தசோகை ஏற்படுகிறது. சாதாரணமாக, பெண்களுக்கு நூறு மில்லி லிட்டர் ரத்தத்தில் 12 கிராமுக்கு மேல் ஹீமோகுளோபின் இருக்க வேண்டும். அதேமாதிரி, ஆண்களுக்கு நூறு மில்லி லிட்டர் ரத்தத்தில் 13 கிராமுக்கு மேல் இருக்க வேண்டும்.குடும்ப டாக்டரிடம் ரத்த டெஸ்ட் ரிஸல்ட்டை காண்பிக்கும் எல்லோரும் முதலில் கேட்கும் கேள்வி, ‘டாக்டர், எனக்கு ஹீமோகுளோபின் கரெக்டா இருக்கா?’ என்பதுதான்.

ரத்தசோகையில் பல வகைகள் இருக்கின்றன.  (1) ஊட்டச்சத்து குறைவு ரத்தசோகை (2) நோயினால் ஏற்படும் ரத்தசோகை இவையிரண்டும்தான் அதிக அளவில் இருக்கின்றன.இதுபோக சிறுநீரக செயலிழப்பு, புற்றுநோய்,எலும்பு மஜ்ஜை நோய், லூபஸ்நோய், க்ரோன்ஸ் நோய் முதலியவைகளினால் ஏற்படும் ரத்த சோகையும் சற்று அதிகமாகவே இருக்கின்றன. ரத்தசோகையில் பல வகைகள் இருந்தாலும் இரும்புச்சத்து குறைவினால் ஏற்படும்ரத்தசோகைதான் மிக அதிகமாக பொதுமக்களிடம் இருக்கிறது.இது ஒரு பொது சுகாதார பிரச்னையாகக் கருதப்படுகிறது.

உலகம் முழுவதும் இரும்புச்சத்து குறைபாடு ரத்தசோகை இருக்கத்தான் செய்கிறது. ஆனால், குறிப்பாக ஆப்ரிக்காவிலும், ஆசியாவிலும்தான் மிக அதிகமாக இருக்கின்றது. மற்ற சத்துக் குறைவு காரணங்களினாலும் ரத்தசோகை ஏற்படத்தான் செய்கிறது. ஆனால் இரும்புச்சத்து குறைபாட்டினால் எற்படும் ரத்தசோகைதான் மிக அதிகம். உடலில் இரும்புச்சத்து இருப்பு இல்லாமற்போதல், இரும்புச்சத்து இழப்பு

ஏற்படுதல், ரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாக முடியாமற்போதல், இவைகளெல்லாம் கூட ரத்தசோகை ஏற்பட சில காரணங்கள் ஆகங.இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் ரத்தசோகை, உயிர் இழப்பைக் இருக்க கூட உண்டுபண்ணிவிடும். எனவே, ரத்தசோகைதானே என்று மெத்தனமாக இருக்காதீர்கள்.

பொதுவாக ஆண்களைவிட பெண்களுக்குத்தான் ரத்தசோகை அதிகமாக இருக்கும்.பெண்களைப் பொறுத்தவரை, மாதவிடாய் ஆரம்பித்த காலத்திலிருந்து மாதவிடாய் நிற்கின்ற காலம் வரைக்கும் ரத்த இழப்பு இருப்பதால் அவர்கள் ஒழுங்கான, சத்தான உணவுகளை சரியாக சாப்பிட்டு, உடலை ஒழுங்காக வைத்துக் கொள்ளவில்லை என் றால், ரத்தசோகை ஆயுள் முழுக்க தொடர்ந்து வந்து கொண்டேதான் இருக்கும். அதோடு கர்ப்பமாதல், குழந்தை பிறப்பு போன்ற காலங்களிலும் ரத்தசோகை ஏற்படும். எனவே அதிக அளவு இரும்புச் சத்துள்ள உணவுகளைச் சாப்பிட்டு, உடலில் இரும்புச்சத்தை அதிகப்படுத்தி, ரத்தசோகை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

இரும்புச்சத்து குறைவு ரத்தசோகை இருப்பவர்களை எப்படிக் கண்டுபிடிப்பது? 

குழந்தையாக இருந்தால்

 (1) குழந்தையின் அன்றாட நடவடிக்கையில் மாறுபாடு.

 (2) அடிக்கடி சின்னச் சின்ன நோய்கள் வந்து போவது.

 (3) பெருந்தீனி தின்ன வேண்டும் என்ற ஆசை இருக்கும் ஆனால் பசியிருக்காது.

(4) வளர வேண்டிய காலத்தில் சரியான, முறையான வளர்ச்சி இல்லாமை.

 (5) லேசான மூச்சுத்திணறல்.

 (6) அதிக சோம்பேறித்த னம்.

 (7) உடல் வெளிறிப் போதல்.

 (8) கன்னங்களில் லேசான வீக்கம் ஆகியவை இருக்கலாம். 

பெரியவர்களைப் பொறுத்தவரை, மேற்கூறிய அறிகுறிகள் அவர்களுக்கும் இருக்கும்.ஆனால் கண்டுபிடிப்பது கடினம்.குண்டாக, நல்லா செழிப்பா இருப்பாங்க. அவங்களுக்கெல்லாம் இரும்புச்சத்து குறைவு ரத்தசோகை எல்லாம் இருக்கவே இருக்காது என்று நாம் பார்த்தவுடன் சொல்வோம். ஆனால் ரத்தடெஸ்ட் பண்ணிப்பார்த்தால்,ஹீமோகுளோபின் ரொம்பக்குறைவாக இருக்கும்.எனவே, ஆளையும் உருவத்தையும் வைத்து ஹீமோகுளோபின் அளவை எடை போட முடியாது.

வளர்ச்சி அடைந்த நாடுகளில், இரும்புச்சத்து குறைபாடு மிகச் சுலபமாக கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாக சிகிச்சை அளித்து குணமாக்கப்படுகிறது. ஆனால் வளர்ச்சியடையாத நாடுகளில் இந்த இரும்புச்சத்து குறைபாடு ரத்தசோகை ஒரு சுகாதார பிரச்னை யாக பூதாகாரமாக உருவெடுத்து, மிக அதிகமான ஜனத்தொகையை பாதிப்படையச் செய்கிறது.

ஓட்ஸ், முட்டை, முருங்கைக்கீரை, இறைச்சி, ஆட்டு ஈரல், பால், கோழியின் ஈரல், மீன், பிஸ்தா, பாதாம், முந்திரி, பருப்பு வகைகள், வான்கோழி, ப்ரூன்ஸ் பழங்கள், கிளிஞ்சல், அனைத்து கீரைகள், பூசணி விதை, சோயா பீன்ஸ், சாக்லேட், பயறு வகைகள், வேர்க்கடலை வெண்ணெய் பேஸ்ட், ஆப்பிள், வாழைப்பழம், மாதுளை, காய்ந்த கருப்புத் திராட்சை, கொடிமுந்திரிப்பழம் இன்னும் நிறைய உணவுப்பொள்ருகளில்

இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது.ரத்த சோகையினால் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள், மேற்கூறிய இரும்புச்சத்து நிறைந்த உணவுகளையும் மருந்து, மாத்திரைகளையும் நன்றாக சாப்பிட ஆரம்பித்தால், ஒரு சில வாரங்களிலேயே, ‘உடம்பு நல்லாயிருக்கு’ என்று அவர்களே சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். இப்படி சொல்வதற்கு வாரங்கள் என்ன மாதங்கள் கூட ஆகும். பொறுமை அவசியம்.