
முதுமையில் மாரடைப்பு வருவதை பார்த்திருக்கிறோம்.சமீபகாலமாக, 25 வயது முதல் 45 வயது வரை உள்ள இளம் வயதினர் மாரடைப்பால் மரணம் அடைவது கொடூரத்தின் உச்சம்.2019 ம் ஆண்டுக்குப் பிறகுதான் இளம் வயது மாரடைப்பு அதிகரித்து உள்ளது.
உடலின் அனைத்து பாகங்களுக்கும் சுத்திகரிக்கப்பட்ட ரத்தத்தை கொண்டு செல்வது இதயத்தின் பிரதான பணி. இப்படி ரத்தத்தை உடல் எங்கும் கொண்டு செல்லும் வேலையை ரத்தக் குழாய்கள் செய்கின்றன.
இந்த ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பு காரணமாக இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். அதனால் இதயத்தில் இருந்து உடலில் பிற பாகங்களுக்கு ரத்தத்துடன் செல்லும் ஆக்சிஜன் தடைபடுவதால் ஏற்படும் விளைவே மாரடைப்பு எனப்படுகிறது.

மாரடைப்பு ஏற்படும்போது இதயத்தில் கடினமான வலி உருவாகும்.சில நேரங்களில் வாயு தொல்லையால் ஏற்படும் வலியும்,மாரடைப்பு வலியும் ஒத்திருக்கும்.
மனிதர்களின் வாழ்வியல், உணவுப் பழக்கம், மன அழுத்தம் என பல காரணிகளின் விளைவால் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரிக்கிறது. இப்படி அதிகரிக்கும் கெட்ட கொழுப்பு,ரத்தக்குழாயில் சென்று படிகிறது. இதனால் ரத்த ஓட்டம் தடைபட்டு மாரடைப்பு ஏற்படுகிறது.
இது மட்டுமின்றி, நமது பரம்பரை மரபணு காரணமாகவும் குடும்ப உறுப்பினர்களுக்கு மாரடைப்பு ஏற்படலாம்.
சமீப காலமாக இளம் வயதினர் அளவுக்கு அதிகமான கொழுப்பு மிகுந்த உணவுகளை சாப்பிடுகிறார்கள். ஆனால், உடல் உழைப்பு மிகவும் குறைந்துவிட்டது.
பக்கத்தில் உள்ள கடைகளுக்கு செல்வதற்கு கூட வண்டி, வாகனங்களில் தான் போகிறார்கள். நடப்பதே கிடையாது.உடற்பயிற்சி செய்வதிலும் ஆர்வம் இல்லை.
எப்படி தடுக்கலாம்?
1.சத்தான உணவு அவசியம்.அதிக கொழுப்பு உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.
2.வாரத்திற்கு 4,5 நாட்கள் குறைந்தது 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.நடைப்பயிற்சியும் செய்யலாம்.
3.வேலை வேலை என்று அலையாமல் அமைதியான வாழ்வியல் முறைகளை பின்பற்ற வேண்டும்.
4.மன அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ பழகிக் கொள்ள வேண்டும்.
5.உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிக்கிறதா என்பதை அவ்வப்போது பரிசோதனை செய்து பார்ப்பது அவசியம்.தேவைப்பட்டால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
6.காய்கறி, பழங்களை அதிகளவில் எடுத்துக் கொள்ளலாம்.
7.மது, புகையிலை பழக்கம் கூடாது.

