
சிட்ரஸ் பழங்கள் என்று அறிமுகமாகியிருக்கும் 16க்கும் மேற்பட்ட பழ வகைகளில் முதன்மையானது ஆரஞ்சு. நலம் தரும் பல சத்துகளும் தாகம் தணிக்கும் நீர்ச்சத்தும் இதில் உள்ளன.பல நூற்றாண்டுகளாக முதியவர்களுக்கும்
நோயாளிகளுக்கும் நோயிலிருந்து மீண்டு வருபவர்களுக்கும் பொதுவாகக் கொடுக்கப்படும் பழமாகவும் இதுதான் உள்ளது.100 கிராம் ஆரஞ்சுப் பழத்தில் 80 மிகி வைட்டமின் – சி உள்ளது. இந்த வைட்டமின் குறைவால் ஏற்படும் ‘ஸ்கர்வி’ எனும் எலும்பு தொடர்பான நோயைத் தடுப்பதில் இது முன்னணியில் நிற்கிறது. முன்பு கடல் பயணம் செய்தவர்கள் பலரும் ‘ஸ்கர்வி’ நோயால் பாதிக்கப்பட்டனர். அப்போது ஆரஞ்சுப் பழச்சாற்றைக் கடல் பயணம் செய்வோருக்குக் கொடுக்க வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டது. அதன் பிறகு, இந்த நோய் வருவது முற்றிலும் தடுக்கப்பட்டது.இப்படி வரலாற்றிலும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது ஆரஞ்சு.
ஆரஞ்சுப் பழத்தில் மூன்று வகையான சர்க்கரைகள் உள்ளன. சுக்ரோஸ், குளுக்கோஸ், ஃபிரக்டோஸ். இந்த மூன்றும் 2:1:1 எனும் விகிதத்தில் கலந்துள்ளன.குறைந்த அளவில் இதைச் சாப்பிட்டாலும் மிகுந்த ஆற்றலை உடனடியாகத் தரக்கூடியது.கடின உழைப்புக்குப் பிறகு இதைச் சாப்பிட்டால் உடனே சக்தி கிடைக்கும்.
இதை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சருமம் பொலிவடையும்; சளி பிடிக்காது; நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்; ருபெல்லா எனப்படும் ஜெர்மன் தட்டம்மை நோயைத் தடுக்கலாம்; எலும்புகளும், நரம்புகளும் வலுவடையும்; இதன் பலனால், ரத்தக்குழாயின் உட்சுவரில் கொழுப்பு அடைப்பது தடுக்கப்படும். இதில் கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து ஆகியவையும் மிகுந்துள்ளன.இதில் கலோரி அளவு குறைவு என்பதால் உடல் எடையைக் குறைக்க விரும்புகிறவர்கள் இதைத் தினமும் பழமாகவோ, பழச்சாறாகவோ பயன்படுத்தலாம். தாய்ப்பால் கிடைக்காத அல்லது குறைவாக உள்ள குழந்தைகளுக்கு இதன் பழச்சாற்றை ஒரு மாற்று உணவாகக் கொடுக்கலாம்.
ஆரஞ்சுப் பழமும் எலுமிச்சைப் பழமும் கொண்டுள்ள சத்துகளின் அளவுகள் ஏறக்குறைய ஒன்றுபோலவே உள்ளன.எனவே எப்போதும் ஒரே பழமாக சாப்பிடாமல் ஒன்று மாற்றி ஒன்றைப் பருவத்துக்கு ஏற்ப விலை மலிவைப் பொறுத்துப் பயன்படுத்தலாம்.

