
டாக்டர் ஜி.ராஜமோகன்.
ஒரு மனிதனுடைய வாழ்நாளில் இருண்ட காலம் எது தெரியுமா? உடல் நலம் இல்லாமல், நடக்க முடியாமல்,பேச முடியாமல், படுக்கையில் விழும் காலம்தான் இருண்ட காலம்!
‘டாக்டர் கடவுள் மாதிரி’என்று சொல்வது இன்றும் நம் மக்கள் மத்தியில் உள்ள பழக்கம். 24 மணி நேரமும் நம்மைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கக் கூடியவர்கள்.நமக்காக புதிய மருத்துவ வரவுகளை,சதா கற்றுக்கொண்டே இருப்பவர்கள். கடவுளையும் மருத்துவரையும் கஷ்டம் வரும்போது மட்டும் நினைத்து, பின் காணிக்கை கேட்கும் போது கண்ணை மூடிக்கொண்டு பலரும் ஒதுங்கிப் போவார்கள்.
கொரோனா அலை அலையாய் பரவிக் கொண்டிருந்தபோது… தன் உயிரையும் பார்க்காமல் எத்தனையோ உயிர்களை காப்பாற்றியவர்கள் மருத்துவர்கள்.
உயிர் காக்கும் மருத்துவர்களுக்கு நாம் நன்றி சொல்லி இருக்கிறோமா…?
ஒருவரால் பெற்ற நன்மைக்காக அவருக்கு தெரிவிக்கிற மரியாதை தான் நன்றி.நன்றி என்பது நேர்மறையான உணர்வு.
ஒரு நோய்க்கான சிகிச்சை பொதுவானதாக இருக்கலாம்.ஆனால் நோயாளியை கவனித்துக் கொள்வது என்பது முழுவதும் தனித்தன்மை வாய்ந்ததுதான்.
மருத்துவர் – நோயாளி உறவு என்பது தனித்தன்மை வாய்ந்தது. இருவருக்கும் இடையிலான உறவு, முழு நம்பிக்கையினாலானது, வாழ்க்கை முழுவதும் தொடரக் கூடியது என்பதால் மருத்துவர் நம் வாழ்க்கையின் ஒரு துணைவர் என்ற மனப்பாங்குடன் ஒவ்வொரு நோயாளியும் செயல்படக் கற்றுக்கொள்ள வேண்டும்.
மருத்துவருடனான உறவை வளர்க்கவும், பேணிக் காக்கவும், அந்த உறவை மிகுந்த அக்கறையுடனும், மரியாதையுடனும் அணு குங்கள்.அவர் அளித்த சிகிச்சையால் நீங்கள் உடல் நலம் பெற்றால், அவருக்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள். நாள்தோறும் ஏராளமான நோயாளிகளுடன், விதவிதமான நோய் களுடன் அல்லாடும் மருத்துவருக்கு,
மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒரு விஷயம் என்றால், அது அவரின் முயற்சிகளுக்கு நீங்கள் அளிக்கும் பாராட்டுதான். துரதிர்ஷ்டவசமாக, இந்த இனிய பண்பை நாம் அனைவரும் மறந்து விடுகிறோம்.
நோயில் விழும்போது மட்டுமே நமக்கு மருத்துவர் ஞாபகம் வரும். அவருக்கு நீங்கள் நன்றி சொன்னால், இன்னொரு நோயாளியாக உங்களை நினைக்காமல், ஒரு தனிப்பட்ட மனிதர் என்று அவர் எண்ணுவார். இவ்வாறு அவருக்கு நீங்கள் நன்றி கூறும்பட்சத்தில், அடுத்த முறை அவரை சந்திக்கச் செல்லும்போது, உங்களுக்கு வி.ஐ.பி. அந்தஸ்திலான சிகிச்சை கிடைக்கும். உங்களின் பிரச்னைக்குத் தீர்வும் சரியானபடி கிடைக்கும். பரஸ்பர நம்பிக்கை, உண்மை பேசுதல், நல்ல தகவல் தொடர்பு போன்றவை இருந்தால் மட்டுமே, இருவருக்கும் இடையே யான உறவு சிறப்பானதாக அமையும்.
“தினை அளவு உதவி செய்தாலும் அதன் பயனை உணர்ந்தவர்கள், மலை அளவு பெரிதாக எண்ணுவார்கள்” என்பது வள்ளுவரின் வாக்கு!.

