வியர், நடிகர், பேச்சாளர் நூலாசிரியர் என்று ஈடுபட்ட எல்லாவற்றிலும் முத்திரை பதித்தவர் திரையுலக மார்க்கண்டேயன் நடிகர் சிவகுமார் .

அவரது ஒவ்வொரு செயலிலும் தெரிவது அவரது ஆரோக்கியம் என்பதை மறுக்க முடியாது.அவர் தனது வாழ்க்கை அனுபவத்தின் அடிப்படையில் கூறும் அறிவுரைகள்
10 கட்டளைகளாக எண்ணி பின்பற்றத் தக்கவை. இதோ அவை!

1.அதிகாலை எழுவது ஆரோக்கியத்தின் முதல் படி!

காலையில் எழுவது எனது ஆரோக்கிய ரகசியங்களில் ஒன்று என்பேன்.
காலையில் 5 மணிக்கு எழுந்து சூரியன் காணாத காலைப் பொழுதை அனுபவிப்பது ஒரு மகிழ்ச்சிகரமான சுகமான அனுபவமாகும். காலையில் எழும் பழக்கத்தைக் கடைப்பிடித்தால் அந்த நாளே உற்சாகமாகத் தொடங்கும். உடலும் நாம் சொன்னதைக் கேட்கும். காலையில் செல்லும் நடைப் பயிற்சியில் சூரியன் இல்லாத மாசு கலப்பற்ற அந்தக் காற்றைச் சுவாசிப்பது உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடியது.
நம் செல்களை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவுகிறது.

2. நல்லவை தரும் நடைப்பயிற்சி !

சூரிய உதயத்திற்கு முன்பான காலையில் நடைப்பயிற்சி செல்வது மிகவும் நல்லது. காலை 5:30 மணிக்குள் எழுந்து நடைப்பயிற்சி செல்பவர்களுக்குப் பத்தாண்டுகள் ஆயுள் போனஸ் . ஆனால் பலருக்கும் இது புரிவதில்லை. காலை நடை உங்கள் ஆரோக்கியத்திற்கான முதலீடு என்றே சொல்லலாம்.

50 வயதில் சுகர் பிபி இல்லை என்றால் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் .சூப்பர் பிபி இல்லாமல் இருக்க வழிவகுப்பதுதான் காலை நடைப்பயிற்சி.

3.காலை உணவில் கவனம் வையுங்கள்!

அலட்சியத்தினாலும் சோம்பலினாலும் நேரம் தாழ்ந்து கண்விழித்து எழுவதாலும் காலை உணவை பலரும் தவிர்ப்பதுண்டு .அது மிக மிகத் தவறானது மட்டுமல்ல, நம் உடல் ஆரோக்கியத்திற்கு எதிரானதும் கூட .இரவு உணவிற்குப் பின் நீண்ட நேரம் வயிறு காலியாக இருப்பதால் காலை உணவை யாரும் தவற விட வேண்டாம்.தாமதமாக இருந்து ஒரே நேரத்தில் நண்பகல் 12 மணிக்கு சாப்பிடுவது பலருக்கும் வழக்கமாக இருக்கிறது .இது மிகவும் தவறான உணவுப் பழக்கமாகும். அதற்கு நம் உடலினைப் பழக்கப்படுத்தினால் அதனால் தீய விளைவுகளே ஏற்படும்.அதற்கான விலையை நாம் கொடுத்தாக வேண்டி இருக்கும்.எப்போதும் சாப்பாட்டைக் குறிப்பிட்ட ஒரே நேரத்தில் சாப்பிடுவது நல்லது.

நான் எங்கே காலையிலே எந்த நிகழ்ச்சிக்குச் சென்றாலும் வீட்டில் உணவு உண்ணாமல் வெளியே செல்வதில்லை. நீரில் ஊறவைத்த பழைய சோறும் சில வெங்காயங்களும் சேர்த்து உண்பது என் வழக்கம். என் ஆரோக்கிய ரகசியங்களில் இதுவும் ஒன்றாகும்.

4. மூச்சுப்பயிற்சியின் முக்கியம்!

நிலையில்லாதது இந்த உயிர்…நிலவும் வானமும் போல, நகமும் சதையும் போல, உடலும் உயிரும் போல என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால் அது பொய். உடல் வேறு. உயிர் வேறு…உடம்பைக் காப்பாற்றாவிட்டால் உயிர் சொல்லாமல் போய்விடும்.

உடம்பைக் காப்பாற்றுவது தான் யோகா,பிராணாயாமம்.
இந்த மூச்சுப் பயிற்சியை நான் என் 16 வயதிலிருந்து செய்து வருகிறேன். பிராணாயாமத்தில் மூச்சு இழுப்பது,நிறுத்துவது விடுவது 2:8:4 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும்.

அதாவது மூச்சை உள் வாங்குவது இரண்டு வினாடி, உள்ளே நிறுத்தி வைப்பது எட்டு வினாடி, வெளியே விடுவது நாலு வினாடி, இப்படி இந்த மூச்சுப் பயிற்சியை 16 வயதிலிருந்து செய்து கொண்டு வருகிறேன்.

கிருஷ்ணமாச்சாரி நூறு வயது வாழ்ந்தவர். ஒரு முறை மூச்சை இழுத்து உள்ளே அறுபது வினாடி நிறுத்துவாராம். நான் எழுபது வினாடி நிறுத்துவேன்.

166 ஆண்டுகள் வாழ வேண்டுமா ? இதே முறையில் இடது நாசியில் ஆரம்பித்து வலது நாசியில் விடுவது, வலது நாசியில் ஆரம்பித்து இடது நாசியில் விடுவது என்று இப்படி 166 முறை செய்தால் 166 ஆண்டுகள் வாழலாமாம். இடையில் இரண்டு வினாடிகள் இடைவெளி விட வேண்டும்.

5.யோகா மகிமை!

1958 ல் யோகாவுக்கு மாஸ்டர் எல்லாம் கிடையாது.கன்னிமாரா நூலகத்தில் உறுப்பினராகி புத்தகங்கள் படித்து வந்தேன்.

உறுப்பினராகச் சேர்வதற்கு மூன்று ரூபாய் கட்டணம். அப்போதுதான் ஒரு யோகா புத்தகத்தைப் பார்த்தேன் -அது வாரப் பத்திரிகையில் தொடராக வந்து பைண்ட் செய்த தொகுப்பு.
அதன் ஆசிரியர் வி.என். குமாரசாமி.
அதை வாங்கி வந்து விடியற்காலை ஐந்தரை மணிக்கு ஆரம்பித்து முதலில் பத்மாசனம், யோக முத்ராசனம், மத்யாசனம், சர்வாங்காசனம், புஜங்காசனம் தனுராசனம் சிரசாசனம் என்று 38 ஆசனங்களைச் செய்வேன்.இப்படிச் செய்த ஆறு மாதத்தில் ஆசனவாய் என் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. மூச்சு விடுவது போல் என்னால் ஆசனவாய் வழியாக காற்றை இழுத்து விட முடியும்.இந்த பயிற்சி எனக்கு 16 வயதிலேயே வந்துவிட்டது.
எனது நினைவாற்றல், நீண்ட நேரம் அமர்ந்து ஓவியம் வரையும் பொறுமை, நிதானம்,நீண்ட தூரம் சைக்கிள் பயணம் போன்றவற்றிற்கு சக்தி அளித்தது எல்லாமே யோகா தான்.
யோகா மீதுள்ள பற்றினால் விரைவிலேயே நான் சைவமாகி விட்டேன்.

192 படங்களில் நடித்த பிறகு இனிமேல் நடிப்பதில்லை என்று முடிவு கட்டி விட்டேன். மேடைப்பேச்சு பக்கம் கவனத்தை திருப்பினேன்..

கம்பராமாயணத்தைப் படிக்கலாம், பேசலாம் என்று முடிவெடுத்தேன் . அது 10 ஆயிரத்து 520 பாடல்கள் கொண்டது. பிரமிப்பாக இருந்தது, பெரிய கடல் போல் தோன்றியது.நான் கம்பராமாயணத்தின் 10 ஆயிரம் பாடல்களைச் சுருக்கி ஆயிரம் பாடல்கள் ஆக்கி அதிலும் தேர்ந்தெடுத்து 100 பாடல்கள் ஆக்கி அதற்குள் முழு ராமாயணமும் வருவது மாதிரி உரை தயாரித்தேன்.

கம்பராமாயணத்தில் கரை கண்ட இளம்பிறை மணிமாறன் ஆச்சரியப்பட்டு என்னைப் பாராட்டினார். அப்படி என்னால் பேச முடிந்ததற்குக் காரணம் அந்த கவனம் சிதறாத நினைவாற்றலின் பின்னணியில் இருந்த யோகா தான்.

அதேபோல மகாபாரத உரையை, நான்காண்டு காலம் ஆய்வு செய்து உரையாக்கினேன்.அதை இடைவெளி இல்லாமல் பல ஆயிரம் பேர் மத்தியில் உரையாற்றினேன். அதேபோல திருக்குறள் பற்றி ஆய்வு செய்து 100 குறள்களை எடுத்து அதற்குப் பொருத்தமான மனிதர்களின் வாழ்க்கையுடன் இணைத்து 100குறள்களுக்கு 100 கதைகள் என்று இணைத்து நூலாக உருவாக்கினேன். அதை அப்படியே ஈரோடு புத்தக கண்காட்சியில் நான்கு மணி நேரம் எந்த இடைவெளியும் இல்லாமல் உரையாற்றினேன்.

இவையெல்லாம் எப்படி சாத்தியமாயிற்று என்றால் யோகா தந்த மனப் பயிற்சியும் உடற்பயிற்சியும் தான்.

6. காபி டீயை கட் பண்ணுங்க!

பயனில்லை என்று தெரிந்தும் நாம் பழக்கி வைத்திருக்கும் பழக்கம் இந்த காபி, டீ குடிப்பதுதான்.என் நாக்கில் காபி ,டீ பட்டு 60 ஆண்டுகள் ஆகின்றன. எதற்கு காபி டீ சாப்பிட வேண்டும்?
அந்தப் பழக்கத்தை விட்டு ஒழியுங்கள்.அதனால் ஒரு பயனும் இல்லை.

ஒரு மசால் தோசை சாப்பிட்டால் இங்கிருந்து மகாபலிபுரம் சைக்கிளில் போய் விட்டு வரலாம். காபி சாப்பிட்டு விட்டுப் போகமுடியுமா ? .

7. நீரதிகாரம்!

தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடிப்பது மிக அவசியம்.மலரும் இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டுகின்றனர். நீரும் உடலுக்குத் தேவையான ஒரு மருந்து போல் தான் உதவுகிறது.தினசரி 8 டம்ளர் நீர் குடிப்பது பல்வேறு உடல் பிரச்சினைகளைத் தீர்க்கிறது.

நம் உடம்பு நாம் சொல்வதைக் கேட்க வேண்டும் ,நம் மூக்கால் சுவாசிக்க வேண்டும், நம் காதால் கேட்க வேண்டும், நம் வாயால் பேச வேண்டும், நம் காலால் நடக்க வேண்டும், இப்படி நம் உடல் நாம் சொல்வதைக் கேட்க வேண்டும் .நம் உடல் இயங்க கருவிகளையோ அடுத்தவர்களையோ சார்ந்து இருந்தால் அதைவிட நரகம் வேறில்லை.

8. கெட்டதாயின் வெட்டென மற!

எனக்கு காபி,டீ போலவே புகை, மது, மாது பழக்கங்களும் கிடையாது. எந்தக் காலத்திலும் மதுவிற்கு அடிமையாகாதீர்கள். அதற்கு உங்களை அடிமைப்படுத்தினால் உங்கள் வாழ்க்கையைத் திசை மாற்றிவிடும். நீங்களே எதிர்பாராத எல்லா தீய சக்திகளும் உங்களிடம் வந்து சேரும்.பெரிய பெரிய திறமைசாலிகள் எல்லாம் இந்த பழக்கத்திற்கு அடிமையாகி வீழ்ந்திருக்கிறார்கள் எச்சரிக்கை.

9. தூக்கம் முக்கியம்!

உண்டது செரிக்க வேண்டும் படுத்தவுடன் உறங்கிவிட வேண்டும் .இதுதான் நல்ல ஆரோக்கியமான உடலின் அடையாளம்.
இரவில் 7 மணி நேரத் தூக்கம் அவசியம்.இத்தனை ஆண்டுகால திரை உலக வாழ்க்கையில் நான் இரவு பகல் 24 மணிநேரம் படப்பிடிப்புக்குச் சென்ற நாட்களை விரல் விட்டு எண்ணி விடலாம். எனவே தினமும் 7 மணி நேரத் தூக்கம் மிக மிக அவசியம். இதில் அலட்சியம் வேண்டாம்.

10. உறவுகளின் உன்னதம் உணருங்கள்!

உடல் நலம் மனநலம் போலவே குடும்ப நலம், நல்ல மனித உறவுகளும் நமக்குத் தேவை.

நான் காலையிலிருந்து யோகாசனம் செய்து நடை பயிற்சி முடித்து என் பேரப்பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வேன் .அது என் அன்றாடப் பணிகளில் ஒன்றாகிவிட்டது. அவர்கள் கல்லூரி செல்லும் வரை அதை செய்து கொண்டிருப்பேன். இதை ஒரு வேலையாகச் செய்யவில்லை விருப்பமாகச் செய்கிறேன். ஏனென்றால் அங்கே ஐந்து வயது ஆறு வயது என்று குழந்தைகளைப் பார்க்கும்போது எனக்கு எனது பால்ய காலம் நினைவுக்கு வருகிறது,நாமும் இப்படி இருந்தவன் தானே என்று. மீண்டும் என்னை அங்கே பார்ப்பதாக உணர்கிறேன். நான் எனது உணர்வுகளைப் புதுப்பித்துக் கொள்கிறேன் என் உடல் இளமையாக ஆவதை உணர்கிறேன்.
எனக்கு புத்துணர்ச்சி கிடைத்த உணர்வும் உற்சாகமும் கிடைக்கிறது.

மனைவியை நேசியுங்கள். ஆண்கள் மனைவி இல்லாமல் வாழ முடியாது. உங்கள் 50 வயதில் மனைவி இருந்தால் மகிழ்ச்சியாக இருங்கள் ,..60 வயதில் மனைவியுடன் இருந்தால் அவர்களைப் போற்றுங்கள், உங்கள் 70 வயதில் மனைவி இருந்தால் அவர்களைப் பூஜியுங்கள் , உங்கள் 80 வயதில் மனைவி உடன் இருந்தால் நீங்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் .

இறுதியில் சொல்கிறேன் நமது உடல் நலம் முக்கியம். அதுவே நமது வளம்.

– அபூர்வன்