
எனக்கு நன்கு அறிமுகமான வியாபாரி ஒருவர் குடும்பத்தில் பிரச்சனை.சூடான, கொந்தளிப்பான வாக்குவாதத்தின் போது, உணர்ச்சிவசப்பட்டு விலை உயர்ந்த செல்போனை தூக்கி எறிந்தார்.குடும்பப் பிரச்சனை ஒரே நாளில் சரியாகி விட்டது.உடைந்த செல்போனை சரி செய்யவே முடியவில்லை. அதை நினைத்து நினைத்து அந்த வியாபாரி மனம் கலங்கினார்.கொஞ்சம் பொறுமையாக இருந்திருக்கலாம்; முட்டாள்தனமாக நடந்து கொண்டது தவறு என்று தன்னைத்தானே வருத்திக் கொண்டார்.
மனம் என்பது இது போன்ற உணர்ச்சிகளால் (எமோஷன்ஸ்)நிரம்பியது. மனதின் உணர்ச்சிகள் என்பது நமது அன்றாட வாழ்வில் ஒவ்வொரு கணத்திலும் நிகழக்கூடியது.நமது தேவைகள் சார்ந்தும், சில நேரங்களில் நமது தேவைகளை முடிவு செய்வதும் கூட இந்த உணர்ச்சிகள் தான்.
நமது உணர்ச்சிகள் எப்போதும் நமது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.அப்படி இருக்கும் வரை அவை அத்தனை அழகானது. உணர்ச்சிகள் கட்டுப்பாட்டில் நாம் வரும் போது தான் ஆபத்து தொடங்குகிறது.அது ஒரு ஆக்டோபஸ் போல நமது எண்ணங்கள், சிந்தனைகள், நடவடிக்கைகள் என அத்தனையையும் கபளீகரம் செய்து விடும்.
மனம் என்று இருந்தால் உணர்ச்சிவசப்படக் கூடியது தவிர்க்க இயலாது தான். உணர்ச்சிவசப்படுவது நமது இயலாமையோ அல்லது பலவீனமோ கிடையாது.இது நம்மோடு நமது மனதோடு பின்னிப் பிணைந்தது.
ஆனால்,நமது உணர்ச்சிகளை நாம் உணர வேண்டும்.பிறகு தெரிந்துகொள்ள
வேண்டும்.
உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நமது நடவடிக்கைகளை முன்பே அனுமானிக்க வேண்டும். பெரும்பாலான நேரங்களில் உணர்ச்சிவசத்தால் நிகழும் நமது செயல்கள் அப்போதைய நமது மனநிலையைப் பொறுத்தே அமையும்.
அது ஒரு நிரந்தர பாதிப்பை நமக்கோ அல்லது நம்மைச் சார்ந்தவர்களுக்கோ ஏற்படுத்திவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளும் நமது தேவைகளும் மாறக்கூடியன.அப்போது அதைச் சார்ந்த உணர்ச்சிகளும் மறைந்துவிடும்.
ஆனால்,அப்படி மாறக்கூடிய நமது மனநிலையைச் சார்ந்து, நாம் எடுக்கும் முடிவுகள் சில நேரங்களில் ஒரு நிரந்த பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
“எமோஷனல் இண்டலிஜன்ஸ் (Emotinal Intelligence)” என்பதுதான் இப்போது உளவியலில் அதிகம் விவாதிக்கப்படும் தலைப்பு.
ஒருவர் தனது உணர்ச்சிகளை எந்த அளவுக்கு அறிவுப்பூர்வமாகக் கையாளுகிறார்,அதனை எப்படி வெளிப்படுத்துகிறார் என்பதைப் பொறுத்து எமோஷன் இன்டலிஜன்ஸ் அமையும்.
நமது வாழ்க்கையில் அத்தனை சுவாரசியங்களையும் நாம் நமது உணர்ச்சியின் மூலமாகத்தான் பெற முடியும்.மனதின் உணர்ச்சிகள் அத்தனை சுவாரசியமானது.
மன நிலையை,உணர்ச்சிவசப்படுதலை கவனமாக கையாளவும் முடியும்; கட்டுப்படுத்தவும் முடியும்.இதன் மூலம் மகிழ்ச்சியாக வாழவும் முடியும்.
வாழ்த்துகள்
-டாக்டர் ஜி.ராஜமோகன்

