ஸ்மார்ட் போன்,டேப்லட் வருகைக்குப் பிறகு நாளொன்றுக்கு ஒருவர் 2 – 4 மணி நேரம்(சில பேர் 10-14 மணி நேரம்)அதை நோண்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இதன்படி வருடத்துக்கு 700 -2000 மணி நேரத்தை நவீன வாழ்வியல் நம்மிடமிருந்து பறித்துக்கொள்கிறது. அது ஒரு பக்கம் இருக்கட்டும்.பார்க்கும் தோரணையாவது சரியாக இருக்கிறதா? ஸ்மார்ட்போனைப் பார்க்கிற சுவாரசியத்தில் கழுத்தின் நிலையை யாரும் கவனிப்பதில்லை. சாய்ந்துகொண்டும் படுத்துக்கொண்டும் குனிந்துகொண்டும்தான் பெரும்பாலானவர்கள் ஸ்மார்ட்போனைப் பார்க்கின்றனர்.ஷேர் ஆட்டோ போன்ற குலுங்கலான பயணத்தின்போதுகூட பலருக்கும் ஸ்மார்ட்போனைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.சாப்பிடும்போதும்,பள்ளி கல்லூரி வகுப்புகளின் போதும், கல்யாணம் குடும்ப நிகழ்வுகளின் போதும் போன் பார்க்காமல் இருப்பதில்லை.இந்த நவீன மோகம் கண்ணைக் கெடுக்கிறது; கழுத்துவலியைக் கொண்டுவருகிறது.இது என்னுடைய புலம்பல் மட்டுமல்ல. ‘சர்ஜிக்கல் டெக்னாலஜி இன்டர்னேஷனல்’ எனும் மருத்துவ இதழின் புலம்பலும் இதுதான்! கழுத்தை நேராக வைத்துக்கொண்டு கண்ணுக்கு முன்னால் ஸ்மார்ட் போனைப் பிடித்துக்கொண்டு, அளவோடு பார்த்தால் கண்ணுக்கும் கழுத்துக்கும் பிரச்சினை இல்லை.