
– டாக்டர் கு.கணேசன், ராஜபாளையம்
இன்றைய நாகரிக உலகில் நீளமான, அடர்த்தியான, பொலிவான கூந்தல் வேண்டும் என்று ஆசைப்படாத பெண்கள் இல்லை! இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை கருமையான கூந்தலுக்குக் கரிசலாங்கண்ணிச் சாறு, சிகைக்காய், காய்ந்த செம்பருத்திப் பூ என்று இயற்கையான பொருட்களையே பயன்படுத்துவார்கள். தற்போதைய அவசர யுகத்தில் இவற்றையெல்லாம் தேட பெண்களுக்கு நேரம் ஏது? தலைமுடிக்கான தேடல் சூப்பர் மார்க்கெட் ரேக்குகளில் முடிந்துவிடுகிறது.அங்கே குன்றுபோல் குவிந்திருக்கும் ஷாம்பு/ கண்டிஷனர்கள்தான் இவர்களுக்கு முடி காக்கும் தோழிகள்.உண்மையில், இவை இரண்டுமே தலைமுடிக்கு ஆகாத வில்லன்கள்.இது தெரியாமல்,இவற்றைக் குளியலறையில் அடுக்கிக்கொள்வதும் பயன்படுத்துவதும் எரிகிற கொள்ளியால் சொரிகிற விநோதம்.
டிடர்ஜென்ட், எண்ணெய், புரதம் எனப் பலவற்றைக் கலந்து தயாரிக்கும் திரவ நிலை சோப்புதான் ஷாம்பு.கண்ணைக் கவரும் நிறத்துக்காகவும், வசீகர மணத்துக்காகவும், நுரைதள்ளும் குணத்துக்காகவும் வீரியமிக்க ரசாயனங்களையும் ‘அறம் பார்க்காமல்’ சில நிறுவனங்கள் கலந்து விற்கின்றன.இவற்றில் காணப்படும் வேதிக்கலப்புகள் பல்வேறு புற்றுநோய்களை அழைத்து வரும் எமதூதுவர்கள் என்பதைப் பயனாளிகளும் புரிந்துகொள்வதில்லை.
ஆளுக்கு ஆள் தலைமுடியின் தன்மை மாறும்.அதுபோல் ஒவ்வொரு வகை தலைமுடிக்கும் ஒவ்வொரு வகை ஷாம்பு இருக்கிறது. எனவே,அவரவர் தலைமுடியின் தன்மையை முதலில் தெரிந்திருக்க வேண்டும். ஷாம்பு நம் தலையில் உள்ள அழுக்கு, தூசு, எண்ணெய்ப் பிசுக்கு ஆகியவற்றை அகற்றுகிறது.ஹேர் கண்டிஷனர் தலைமுடிக்கு ஈரப்பதம் கொடுத்து மினுமினுப்பு ஆக்குகிறது. இதிலும் பலவிதம் உண்டு.அவரவர் முடிக்குப் பொருத்தமாகத்தான் தேர்வு செய்ய வேண்டும். ஆனால், எத்தனை பேருக்குத் தெரியும் இந்த அறிவியல் விதிகள்? மக்களின் இந்த அறியாமையைப் பயன்படுத்திக்கொண்டு பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியச் சந்தையில் கோடி கோடியாகக் கொள்ளையடிக்கின்றன. இவற்றின் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு இல்லாத சாமானிய மனிதர்கள் நோயாளிகளாக ஆவதுதான் நவீன வாழ்வியல் கொடுத்திருக்கும் சாபம்! அதிலிருந்து மீள வேண்டும்.

