
பிரசவம் என்பது மறுபிறவி எடுப்பதற்கு சமம்.கர்ப்பவதிகளை ஏன் தாய் வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார்கள் தெரியுமா?
நம் கலாச்சாரத்தில் தொன்றுதொட்டு இந்த வழக்கம் இருக்கிறது. கர்ப்பிணிக்கு ஓய்வு கொடுக்க மட்டுமல்லாமல், அவருக்கு உடல்,மனம் இரண்டையும் வலிமையாக்கி,பிரசவத்தை எளிதாக எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை ஏற்படுத்துவதற்குத் தாய்தான் சிறந்தவள் என்பதை நம் முன்னோர் தெரிந்து வைத்திருந்த காரணத்தால், இந்த வழக்கம் ஏற்பட்டிருக்க வேண்டும்.
அடுத்து வளைகாப்பு என்று ஒரு சடங்கு நடத்தப்படுவதற்கும் காரணம் இருக்கிறது. ‘எங்களை எல்லாம் பார்… நாங்கள் எத்தனை பிள்ளைகளைப் பெற்று உன் முன் நிற்கிறோம்? நீயும் உன் பிரசவத்தை சுலபமாக கடப்பாய்… தைரியமாக இரு!’ என்று கர்ப்பிணிக்கு மனதளவில் உறுதியை அதிகப்படுத்தவும், பிரசவ பயத்தைப் போக்கவும் இது உதவுகிறது.
இப்போதைய சூழலில் இம்மாதிரியாக கர்ப்பிணியை மனதளவில் தயார் படுத்தும் உறவுமுறைகளும் உறவினர்களும் குறைந்து வருவதைக் காண்கிறோம். இன்றைய இளைய சமுதாயம் இது குறித்து யோசிக்க வேண்டும். எதிர்கால சமூகத்தின் ஆரோக்கியத்தைக் கருதி, நம் பாரம்பரிய கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறைக்குத் திரும்ப வேண்டும்.

