கலைமாமணி டாக்டர் எஸ்.அமுதகுமார், MBBS,MCIP,PG.Dip.Diabetology.FCGP.

சிறுநீரக செயல் இழப்பு (கிட்னி ஃபெயிலியர்) சிலருக்குத் திடீரென்று ஏற்பட்டுவிடும்.சில நேரங்களில் சிலருக்கு நாள்பட்ட நோயின் விளைவால் இந்தப் பாதிப்பு வருவதுண்டு.

1.அதிகமான ரத்த இழப்பு, 2.வாந்திபேதி போன்ற வற்றினால் உடலில் அதிகமான நீர் இழப்பு,3. தேவையான தண்ணீர் குடிக்காதது, 4.மருந்துகள் சாப்பிடுவதன் மூலம் உடலில் இருந்து தண்ணீர் அதிக அளவில் வெளியாவது,5. சிறுநீரகங்களுக்குத் தேவையான ரத்த சப்ளை,சரிவரக் கிடைக்காமல் போவது, 6.சிறுநீர்க்குழாய் (யூரிடர்),சிறுநீர்ப்பை ஆகியவைகளில் ஏற்படும் அடைப்பு,7. வயிற்றில் உண்டாகும் கட்டி, சிறுநீரகத்தையும் யூரிடரையும் அமுக்குவதால் ஏற்படும் அடைப்பு ஆகிய காரணங்களால் சிறுநீரகம் செயல் இழக்க தொடங்கலாம்.

ஒரு மடக்கு தண்ணீர் கூடக் குடிக்காமல், அதிக நாட்கள் படுக்கையில் இருப்பவர்களுக்குச் சிறுநீரகம்,செயல் இழந்து போகும். அதனால்தான்,அதிக நாட்கள் உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு முதலில் கிட்னி ஒழுங்காக வேலை செய்கிறதா, இல்லையா? என்று சோதனை செய்து பார்ப்பார்கள்.

பயங்கர விபத்தினால் உடல் பாகங்கள் நசுங்கி, சிதைந்து போகுதல் மற்றும் அதிகமான தீக்காயம் ஏற்படுதல் முதலிய சமயங்களில் உடல் தசைகள் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டு, தசைநார்கள் கூழாகி, சிறுநீரகங்களிலுள்ள ஃபில்டர்களை அடைத்து விடுவதால், சிறுநீரகங்கள் செயல் இழந்து விடுவதும் உண்டு.

இதே மாதிரி,சில நேரங்களில், சிறுநீரகக் கற்களால் கூட பாதை அடைப்பட்டுக் கொண்டு,கிட்னி ஃபெயிலியர் ஏற்படுவதுமுண்டு. ஆனால்,எந்தப்பக்கம் கற்கள் இருக்கிறதோ, அந்தப் பக்கம் உள்ள சிறுநீரகம் மட்டும்தான் பாதிப்படையும். மற்றொரு பக்கத்தில் இருக்கும் சிறுநீரகத்தில் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது.ஒரே ஒரு சிறுநீரகம் உள்ளவர்களுக்கு, இந்தச் சிறுநீரகக் கற்கள் அடைத்தால், ஆபத்துதான்.

கட்டுப்பாட்டில் இல்லாத சர்க்கரை நோய்,கட்டுப்பாட்டில் இல்லாத ரத்த அழுத்தம் இவைகளும் கிட்னி ஃபெயிலியர் ஏற்படக் காரணங்களாகும்.

சிறுநீரகம் சரியாக வேலை செய்யாவிட்டால், ஒருநாள் கூட, நம்மால் ஆரோக்கியமாக இருக்க முடியாது. உடலில்,சொல்ல முடியாத,எதிர் பார்க்காத தொந்தரவுகளெல்லாம் வர ஆரம்பித்துவிடும். சிறுநீரகப் பாதிப்பை, மருந்து, மாத்திரைகளால் சரிபண்ண முடியவில்லையென்றால்,உடலில் இருந்து வெளியே போகவேண்டிய கழிவுப் பொருள்கள் உடலில் உள்ள ரத்தத்தில் சேர ஆரம்பித்துவிடும். இந்தக் கழிவுப் பொருள்களை எப்படி வெளியே அனுப்புவது? இந்தக் கழிவுப் பொருள்கள் கலந்த ரத்தத்தை எப்படிச் சுத்தம் பண்ணுவது? இதற்கான அடுத்த நடவடிக்கைதான் ‘டயாலிசிஸ்’ என்பதாகும்.

டயாலிசிஸ் என்பது மிகவும் செலவு மிக்கது‌.ஒருவருக்கு வாரத்தில் இரண்டு முறை செய்தாக வேண்டும்‌.இந்த முறை உயிர் காக்கும்‌.ஆனால் வாழ்நாள் முழுவதும் டயாலிசிஸ் செய்ய முடியாது‌.சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை கட்டாயம்.

சிறுநீரக செயல் இழப்பு இல்லாமல் வாழ பழகிக் கொள்ள வேண்டும்‌.

24 மணி நேரமும் வேலை செய்து கொண்டிருக்கும் சிறுநீரகங்களைப் பத்திரமாக, பாதுகாக்க வேண்டியது நமது கடமை.சர்க்கரை நோயாளிகளே, சர்க்கரையை எப்பொழுதும் கட்டுப்பாட்டில் வையுங்கள்.ரத்த அழுத்தமுள்ளவர்களே,ரத்த அழுத்தத்தை எப்பொழுதும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள். கொழுப்பைக் குறையுங்கள். சர்க்கரையைக் குறையுங்கள். டென்ஷனைக் குறையுங்கள்.

கண்ட இடத்தில் சுத்தமில்லாத தண்ணீரைக் குடிக்காதீர்கள்.கண்ட இடத்தில் சுகாதாரமற்ற உணவைச் சாப்பிடாதீர்கள். உணவில் உப்பை அளவோடு சேர்த்துக் கொள்ளுங்கள். போதுமான அளவு தண்ணீரைக் குடியுங்கள். கெமிக்கல் உபயோகித்து தயாரிக்கும் உணவுப் பொருள்களைச் சாப்பிடாதீர்கள். விளம்பரப்படுத்தப்படும் கண்ட கண்ட, மருந்து மாத்திரைகளை கண்டிப்பாகச் சாப்பிடாதீர்கள். இவைகளையெல்லாம் ஒழுங்காகச் செய்து கொண்டிருந்தால், ‘கிட்னி ப்ராப்ளம்’ உங்கள் பக்கமே வராது.