டாக்டர் எஸ்.வெங்கடாசலம், ஹோமியோபதி நிபுணர்,சாத்தூர்.

நான் மனமார ஓர் உண்மையைத் தேடினேன்.அதைக் கண்டுகொண்டேன் (I Searched for truth earnestly and found it)… தான் இறப்பதற்கு முன்பு டாக்டர் ஹானிமன் Madem Melony – யிடம் எழுதிக் கொடுத்த செய்தி இது.

“எனக்கு ஒருவித மனக்குறையுமில்லை. துன்பப்படும் மக்களுக்கு நன்மை அளிப்பதை நோக்கமாகக் கொண்டு எனக்கு நல்லது என்று தோன்றியதைச் செய்து விட்டேன்” இது டாக்டர். ஹானிமனின் வாக்குமூலம்.

உலகில் வேறெந்த ஒன்றை விடவும் உயர்வானது,விலை மதிப்பில்லாதது மனித உயிர். அத்தகைய உயிரைக் கையாள்கிற மருத்துவத் துறை மிகுந்த பொறுப்போடு, மனசாட்சியோடு செயல்பட வேண்டும்” இது ஆர்கனான் முதற்பதிப்பு முன்னுரையில் டாக்டர் ஹானிமனின் அறைகூவல். அனைத்து மருத்துவமுறைகளுக்கும் பொருத்தமான கொள்கை அறிவிப்பு.

இத்தகைய உன்னத நோக்கங்களோடு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் மருத்துவ வரலாற்றின் மாபெரும் புரட்சியாளர் மனித நேய மாமேதை டாக்டர் ஹானிமன், கண்டறிந்த மருத்துவ முறை தான் ஹோமியோபதி. இயற்கை விதிகளை அடிப்படையாகக் கொண்ட இயற்கை முறை மருத்துவங்களில் ஹோமியோபதி தலைசிறந்த மருத்துவ முறையாகத் திகழ்வதற்குக் காரணம்,அதன் மாறுபட்ட நோயியல், மருந்தியல், சிகிச்சையியல் கோட்பாடு மற்றும் நடைமுறைகளே!

இன்று உலகின் 2வது மிகப்பெரிய மருத்துவமுறை என உலகநல நிறுவனத்தால் ஹோமியோபதி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட உலகின் பெரும்பாலான நாடுகளில் ஹோமியோபதி அரசு அங்கீகாரம் பெற்ற மருத்துவ முறையாகத் திகழ்கிறது. ஹோமியோபதியைப் பின்பற்றும் மக்கள் கோடிக்கணக்கில் அதிகரித்து வருகின்றனர். இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தின் ஓர் ஆய்வறிக்கையின்படி இந்தியாவில் மூன்றில் ஒரு பங்குக் குடும்பங்கள் ஹோமியோபதியையும் சித்தா, ஆயுர்வேதம்,மற்றும் இயற்கை மருத்துவ முறைகளையும் பின்பற்றுகின்றனர்.

மனிதனுக்கு நோய்கள் ஏற்பட எண்ணற்ற அக,புறக் காரணிகள் உள்ளன. கிருமிகள் மட்டுமே நோய்களின் பிரதானக் காரணம் என்ற ஆங்கில மருத்துவத்தின் யூகக் கோட்பாட்டிலிருந்து ஹோமியோபதி முரண்படுகிறது. உடலும்,மனமும், உணர்ச்சிகளும் இணைந்த முழுமையாக மனிதனை ஆய்வு செய்கிற (Holistic Approach) அணுகுமுறையை ஹோமியோபதி கடைப்பிடிக்கிறது.

“நோய்க்கு அல்ல.. நோயுற்ற மனிதனுக்கே சிகிச்சை (Treat the Patient not the Disease)” எனும் புதிய சிகிச்சை நடைமுறை நீண்ட நெடிய மருத்துவ சரித்திரத்தில் புரட்சிகரமான திருப்புமுனையாகும். இதனால் ஹோமியோபதி சிகிச்சை மூலம் மனிதனின் நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பலப்படுத்த முடிகிறது.நோய்கள் மீண்டும் வராமல் தடுக்க முடிகிறது. முழு நலத்தை மீட்க முடிகிறது.