
டாக்டர் கு.கணேசன்,பொது
நல மருத்துவர்.
படித்து முடித்து வேலைக்குச் செல்வது எல்லோருக்கும் ஒரு சுகமான அனுபவம். இதை நம் வாழ்க்கையின் திருப்புமுனை என்றுகூடச் சொல்லலாம்.பல கனவுகளோடும் கற்பனைகளோடும் வேலைக்குச் செல்லும்போது, அங்குள்ள சூழல் உடலுக்கு ஒத்துப்போகவில்லை என்றால்,அதுவே பல வழிகளில் நம் ஆரோக்கியத்தைக் கெடுத்து விடும்.
வேலை பார்க்கும் இடத்தில் நிலவும் அதிக வெப்பம்,அதிக குளிர்,அதிக காற்று அழுத்தம்,மாசுபட்ட சூழல்,வாகனப் புகை, இயந்திரப் புகை, தொழிற் சாலைக் கழிவுகள், வேதிப்பொருள்களின் பயன்பாடு, இயந்திரப் பராமரிப்புப் பொருள்கள், பெட்ரோலியப் பொருள்கள்,சாயப் பொருள்கள் போன்ற பலவற்றால், சருமத்தில் தொடங்கி குடல் வரை ஒவ்வாமை ஏற்பட்டு அவதிப்படுபவர்கள் அதிகம்.பணி சார்ந்த இத்தகைய ஒவ்வாமை நோய்கள் (Occupational allergies) உலக அளவில் ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன. இவற்றில் முக்கியமான மூன்றை மட்டும் இங்கு பார்ப்போம்.
மூக்கு ஒழுகல் (Allergic Rhinitis)
பணி செய்யும் இடத்துக்குச் சென்றதும் தொடர்ச்சியாக தும்முவது,மூக்கு அடைப்பு,மூக்கு ஒழுகல்,மூக்கு அரிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால்,அது பணி சார்ந்த ஒவ்வாமையால் ஏற்படுகிறது என்று பொருள்.பணி செய்யும் இடத்தில் நிலவும் மாசுக்கள், தானியத் தூசு,மரத் தூசு,மாவுத் தூசு, வேதிப்பொருள் தூசு, உலோகத் தூசு, மகரந்தம்,பூஞ்சை, நச்சுப் புகை போன்றவை காற்றில் கலந்து வந்து இந்த ஒவ்வாமையை ஏற்படுத்தும்.இந்த ஒவ்வாமைப் பொருள்கள் தொடர்ந்து மூக்கினுள் நுழையும்போதும், நீண்ட காலம் நுழையும் போதும் இவை நுரையீரலில் குடித்தனம் செய்யும். அப்போது ஆஸ்துமாவும் சேர்ந்துகொள்ளும்.
மூச்சு இளைப்பு
பணி செய்யும் இடத்தில் தூசு, வேதிப்பொருள், புகை உள்ளிட்ட ஏதாவது ஓர் அலர்ஜிப் பொருள் இருந்தால், ஆஸ்துமா ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. இந்தப் பொருள்களில் ஒன்றோ பலவோ சேர்ந்து நுரையீரலில் உள்ள மூச்சுக்குழல் (Bronchus) தசைகளையும் மூச்சுச் சிறுகுழல்களையும் (Bronchioles) சுருக்கிவிடுகின்றன. இதனால் மூச்சு செல்லும் பாதை சுருங்கிவிடுகிறது. மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது. இளைப்பு,இருமல், மூச்சுத்திணறல், வீசிங் போன்ற தொல்லைகள் ஏற்படுகின்றன. ஏற்கெனவே ஆஸ்துமா உள்ளவர்களுக்கும், புகைபிடிப்பவர்களுக்கும் இந்த வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம். இவர்களுக்கு விடுமுறை நாட்களில் மூச்சு இளைப்பு மறைந்துவிடும்.இது, இந்த நோயை மறைமுகமாக உறுதி செய்ய உதவும்.
சரும அழற்சி நோய்
சருமம் உலர்ந்து தடித்து, சொரசொரப்பாகிவிடும்.அந்தப் பகுதி கறுஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும்.பிறகு, வட்டவடிவில் மீன் செதில்கள் போன்ற தோற்றம் ஏற்படும். அரிப்பு,எரிச்சல் ஏற்படும்.சிறிய கொப்பளங்கள் தோன்றும். கொப்பளங்களில் இருந்து நீர் வடியும். குழந்தைகளுக்குக் கன்னம்,கழுத்து, உச்சித்தலை, மணிக்கட்டு,தொடை இடுக்கு,கணுக்கால் ஆகிய பகுதிகளில் சரும அழற்சி கடுமையாக பாதிக்கும். பெரியவர்களுக்குக் கழுத்தின் பின்பகுதி, முழங்கால் மூட்டின் பின்பகுதி,முழங்கை மடியும் பகுதி ஆகிய இடங்களில் இந்தப் பாதிப்பு அதிகமாகக் காணப்படும்.
தடுப்பது எப்படி?
* முகத்தில் மாஸ்க் அணிவது, பாதுகாப்பான ஆடைகள் அணிவது, கைகளுக்கு உறை அணிவது, கண்ணுக்கு ஒளி காப்புப் பட்டை (Visor) அணிவது போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் அவசியம்.
* ஒவ்வாமை தொந்தரவு கடுமையாக இருந்தால், வேலையை மாற்றுவது அல்லது வேலை செய்யும் இடத்தை மாற்றுவது போன்ற ஏற்பாடுகளும் தேவைப்படும்.
* வேலை முடிந்து திரும்பியதும் வெந்நீரில் குளித்து உடலை நன்றாகச் சுத்தப்படுத்த வேண்டும்.
* ஒவ்வாமைத் தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ளவேண்டும்.
* ஆண்டுக்கு ஒருமுறை நுரையீரல் மற்றும் தோல் தொடர்பான முழு உடல் பரிசோதனை மற்றும் ஒவ்வாமைப் பரிசோதனைகள் அவசியம்.

