முனைவர் மா.ஆ.தீபா,
M.Sc,M.phil,Ph.D. உதவிப் பேராசிரியர்,
தாவரவியல் துறை, அரசு கலைக்கல்லூரி, கோயம்புத்தூர்.

கத்தான மற்றும் உபயோகப்படுத்த மிக எளிய மூலிகைகளைப் பற்றி இத்தொடரில் நாம் அறிந்து வருகிறோம்.அந்த வரிசையில் இந்த மாதம் நாம் தெரிந்து கொள்ள இருப்பது நமக்கு மிகவும் அறிமுகமான திருநீற்று பச்சிலை ஆகும்.

இதன் தாவரவியல் பெயர் “ஆஸிமம் பெசிலிக்கம்” (Ocimum basilicum) எனப்படுவதாகும். புதிய தலைமுறையினர் இந்த தாவரத்தை “பீட்சா ஹர்ப்” என்னும் பெயராலேயே அதிகம் அறிகின்றனர். ஒரிகோனோ என்ற பெயரில் பயன்படுத்தப்படும் மருகு இலைகள் போலவே திருநீற்றுப்பச்சிலையின் இலைகளும் பசுமையாகவும் உலர்ந்த பொடியாகவும் துரித உணவுகள் மற்றும் மேற்கத்திய உணவுகளில் மிக அதிகமாகவே உபயோகப்படுத்தப்படுகிறது.

பாரம்பரிய மருத்துவ முறைகளிலும் மிக அதிக அளவில் பயன்படுத்தப்படும் மூலிகை இதுவாகும். ஆயுர்வேத மருத்துவ முறைகளில் பத்திய உணவுகளிலும், மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.இத்தாவரத்தின் நறுமணம் மிக்க இலைகள் பலவகையான உணவுகளிலும் பயன்படுகிறது. நறுமண திரவியங்கள் செய்ய இதன் நறுமண எண்ணெய் உபயோகப்படுத்தப்படுகிறது. இத்தாவரத்தின் இலை,தண்டு மற்றும் பூக்கள் அனைத்துமே மருந்தாக அமைகிறது. இலைகளின் சாறு உள் மருந்தாகவும் அஜீரணக் கோளாறுகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.மையாக அரைக்கப்பட்ட இலைகள் தோலில் ஏற்படும் அரிப்பு, அலர்ஜி,காயங்கள், முகப்பருக்கள் மற்றும் முகப்பருக்களின் வடுக்களை போக்கவும் மேல்பூச்சாக பயன்படுகிறது. இந்த இலைகளை கொண்டு தயாரிக்கப்படும் வடிநீர்,தேநீராகவும் அருந்தப்படுகிறது. பறிக்கப்பட்ட இலைகள் கசக்கப்பட்டு அதன் சாறு முகப்பருக்களின் மீது தடவப்படுகிறது. இவ்வாறு செய்யும் பொழுது முகப்பருக்களின் வடுக்கள் தோன்றாமல் முகம் மென்மையான தோற்றத்திற்கு மாறி புதுப் பொலிவுடன் பளபளக்கும்.

பச்சிளம் குழந்தைகளின் மீது ஏற்படும் பால் வாடையை போக்க திருநீற்றுப்பச்சிலை, அவரை இலை மற்றும் அப்பக்கோவையின் இலைகள் சம அளவுகளில் அரைத்து பூசப்படுகிறது. கொங்கு பகுதிகளில் இவ்வழக்கம் இன்றளவிலும் பின்பற்றப்படுகிறது.
இந்தியாவை பூர்வீகமாக கொண்ட திருநீற்றுப்பச்சிலை, தென்கிழக்காசிய நாடுகள்,மத்திய தரை கடல் பகுதியில் உள்ள நாடுகள் அனைத்திலும் மிகவும் பயன்படுத்தப்படும் மூலிகையாக உள்ளது.

கிரீஸ் நாட்டில் மாவீரன் அலெக்சாண்டரால் இந்தியாவிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டதாக வரலாற்று குறிப்புகள் உள்ளன. இது இந்தியாவிற்கும் மற்ற நாடுகளுக்குமான வர்த்தக தொடர்பிற்கு ஒரு சான்றாகவும் உள்ளது. இதனாலேயே உலகின் பல்வேறு நாடுகளிலும் உணவின் ஒரு அங்கமாகவும், மருத்துவ முறைகளிலும் இடம் பிடித்துள்ளது இத்தாவரம். கிருமிகளுக்கு எதிராக இதன் சாறு இருக்க காரணமாக இருப்பது இரண்டாம் வளர்சிதை மாற்ற காரணிகளே. இக்காரணிகள் இத்தாவரத்திற்கு நுண்ணுயிர் எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு, மற்றும் ஒட்டுண்ணி எதிர்ப்புத் தன்மையையும் தருகின்றன. ஆக்ஸிஜனேற்ற நோய் எதிர்ப்பு தடுப்பு தன்மை கொண்ட இத்தாவரத்தின் இலை மற்றும் விதைகள் பல்வேறு தயாரிப்புகளிலும் இடுபொருளாக பயன்படுத்தப்படுகிறது.தோளில் ஏற்படும் பல்வேறு அலர்ஜிகளுக்கு மேல் பூச்சி மருந்தாகவும் பயன்படுகிறது. உள் மருந்தாக இந்த இலைகள் சாராகவோ, வடிநீராகவோ பயன்படுத்தப்படும் போது கல்லீரலை பாதுகாக்கும் என அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

எலும்பு தேய்மானத்திற்கான காரணிகளை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாக உள்ளது.இலை மற்றும் விதைகள் அதிகம் உட்கொள்ளப்படும் போது இதயத்திற்கு பாதுகாப்பு தருவதாகவும்,நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், புற்றுநோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கவும் உதவுகிறது.

இதன் இலைகளில் வாலடையில் (volatile oil) ஆயில் எனப்படும் ஆவியாகும் எண்ணெய் பொருட்கள் அதிகம் உள்ளது.மிக முக்கியமாக லினலூல் (35.1%) எனப்படும் சேர்மானம் இதில் அதிகம் உள்ளது. லினலூல் பல்வேறு விதமான மருத்துவ குணங்களை உள்ளடக்கியதாகும். இதில் அதிகம் காணப்படும் கெபியிக் அமிலம் (Caffeic acid) நோய் எதிர்ப்பு சக்திக்கு மற்றும் டயூரிடிக் எனப்படும் சிறுநீர் பெருக்கத்திற்கும் உதவுகிறது. செரிமானத்தை தூண்டும் ஃபிளாவனாய்டுகளும் இதில் அதிகம் உள்ளது.

இத்தாவரத்தின் விதைகள் சப்ஜா விதைகள் என்ற பெயரால் அறியப்படுகிறது. நீரில் ஊற வைக்கும் பொழுது சற்றே உப்பிய பிசின் போல் காணப்படும் இவ்விதைகள் கூழின் தன்மைக்கு நீரை மாற்றும்.இது உடல் குளிர்ச்சிக்கு மிக ஏற்றதாக உள்ளது.அனைத்து விதமான பழச்சாறுகளுடனும், ஊறவைத்த இவ்விதைகளை சேர்த்து அருந்தலாம். வேனிற் காலங்களில் உடல் சூட்டினால் ஏற்படும் தோல் வியாதிகளுக்கும், வாய் மற்றும் வயிற்றுப் புண்களுக்கும், உடலை குளிர்விக்கவும் இவற்றை பயன்படுத்தலாம்.

ஃபலுூடா,சர்பத் மற்றும் நச்சுத்தன்மை போக்க பயன்படும் டீடாக்ஸ் நீரில் ஊற வைத்த விதைகள் மிகப் பிரபலமாக பயன்படுத்தப்படுகிறது.நீரில் ஊற வைக்கும் போது பிசின் போன்ற தன்மையை பெறுவதால் குளிர்பானங்களின் நிலைத்தன்மைக்கும், மற்ற இனிப்புகள் தயாரிப்பதற்கும் விதைகள் பயன்படுத்தப்படுகிறது.குழந்தைகளுக்கு மிகப்பிரியமான புட்டிங்குகளில் மரவள்ளி கிழங்கு மாவிற்கு ஆரோக்கியமான மாற்றாகவும், ஐஸ்கிரீம், பழச்சாறுகள் மற்றும் ஜெல்லியிலும் இவ்விதைகளை பயன்படுத்தலாம்.

சூப்புகள்,சாஸ்கள் மற்றும் சாலடுகளுக்கு மேல் தூவலாகவும் அவற்றை கெட்டியாக்கவும், ஊறவைத்த விதைகள் பயன்படுத்தப்படுகிறது.ஊறவைத்த விதைகள் பேக்கிங்கில் முட்டைக்கு மாற்றாகவும் உபயோகப்படுத்தப்படுகிறது.இவை அனைத்திற்கும் காரணம் இவ்விதைகள் நீரில் ஊற வைக்கும் பொழுது கூழ் போன்ற தன்மையை பெறுவதுதான்.
மிக எளிய மூலிகையான இது நம் வீடுகளில் வளர்ப்பதற்கு மிகவும் ஏற்ற ஒன்றாகும். இத்தாவரம் வளரும் இடங்களில் வீசும் நறுமணமிக்க காற்று நம் நுரையீரலை தூய்மையாக்கவும் உதவுகிறது.

இத்தாவரம் இந்தியாவை பூர்வீகமாக கொண்டது என்றாலும் நாம் மருத்துவ முறைகளிலேயே இதனை அதிகமாக பயன்படுத்துகிறோம். மேற்கத்திய உணவுகள் இந்தியாவிற்குள் வந்ததன் ஒரு நன்மையாக இதன் இலை மற்றும் விதைகளை உணவில் பயன்படுத்துவதை நாம் கற்றுக் கொண்டோம். எனவே நம்மிடம் இருக்கும் எளிய மூலிகைகளின் முக்கிய பண்பை அறிந்து “உணவே மருந்து” என்னும் கோட்பாட்டிற்கு ஏற்ப அவற்றை உணவில் பயன்படுத்தி நோய் வருவதை தடுத்து ஆரோக்கிய வாழ்வை வாழ வேண்டும்.