-டாக்டர் வி.விக்ரம்குமார், MD (சித்த மருத்துவர்)

வசர யுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் பலரும் சொல்லும் உணவியல் சார்ந்த குற்றச்சாட்டு, ‘சாப்பிடுவதற்கே நேரம் இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும் நல்லுணவைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவதெல்லாம் நடக்காத காரியம்…’ என்பதே!

சாப்பிடக் கூட நேரம் இல்லாமல் எதை நோக்கிப் பயணிக்கிறோம் நாம்!முதலில் உணவிற்காக உங்கள் நேர மேலாண்மையை முறைப்படுத்திக் கொள்ளுங்கள். சாப்பிடுவதற்கு நேரம் இல்லாமல் உணவைத் தவிர்ப்பதால்,புதுப்புது நோய்கள் அவதாரம் எடுக்கின்றன. முதலில் நேரத்திற்குச் சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிடப்படும் உணவு நல்லுணவாகவும் இருப்பது மிக மிக அவசியம். நல்லுணவாக இயற்கை சார்ந்த உணவுப் பொருட்கள் பலவற்றைக் குறிப்பிடலாம். நல்லுணவு பட்டியலில் கீரைகளுக்கு எப்போதுமே முக்கிய இடமுண்டு.

என்ன கீரை இல்லை இந்தத் திருநாட்டில்!…

கீரை ரகங்களுக்கா நம்மிடையே பஞ்சம்! கீரைகள் பல்வேறு தரப்பினரின் அன்றாட சத்துணவு! அடித்தட்டு மக்களின் வறுமையைப் போக்கும் பேருணவு! பசியை மறக்கச் செய்யும் அதிசயப் பொருள்! வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் போது,பல பஞ்ச காலங்களில் பலரைக் காப்பாற்றிய உன்னத உணவு! உடலுக்கு நுண்ணூட்டங்களைச் சட்டென வாரி வழங்கும் அட்சய பாத்திரம்! வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் எனக் கீரைகளில் இருக்கும் சத்துகளுக்காக, அவற்றை
அத்தியாவசிய உணவுப் பொருளாக உங்கள் மனதில் நிலைநிறுத்துங்கள்!

சமைப்பதற்கும் சரி, உட்கொள்வதற்கும் சரி எளிதான ஒரு உணவுப் பொருள். கீரைகளை விதவிதமாகச் சமைப்பதற்கு மிகப்பெரும் சமையல் சூத்திரங்கள் எல்லாம் தெரிய வேண்டிய அவசியமில்லை. எளிமையான சமையல் நுணுக்கங்களே போதுமானது. வித்தியாசமான உணவு ரகங்களாக உருவெடுத்து கீரைகள் நம்மை மகிழ்ச்சிப்படுத்தும். பொரியலாக… துவையலாக.. சட்னியாக… கடையலாக… குழம்பாக… இரசமாக… என வெவ்வேறு பரிமாணங்களில் கீரைகளை உணவாக எடுத்துக்கொள்ளலாம்.

கீரைகள் குறித்து இவ்வளவு பெருமைகள் இருந்தும்,அதிகம் கண்டுகொள்ளப்படாத உணவுப் பொருளாகவே இருப்பது வேதனை தரக்கூடிய விஷயம். ஓய்வு இல்லாமல் இயங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு பெரும் பிரச்னையாக இருப்பது மலக்கட்டு! எவ்வித மருந்துகளோ, மாத்திரைகளோ இல்லாமல் மலக்கட்டு பிரச்னையைச் சரி செய்ய கீரைகள் மட்டுமே போதும்! அவ்வளவு வலிமை மிக்கவை கீரைகள்!

அதிகாலையில் மலம் கழிக்கும்போது முக்கி முக்கித்தான் மலம் போகிறது என்றால் நீங்கள் ஆரோக்கியமான வாழ்வில் பயணிக்கவில்லை என்று அர்த்தம். போனோம்… வந்தோம் என்றில்லாமல், கழிவறையிலேயே நீண்ட நேரம் குடியிருப்பது உடல்நலக் குறைவின் முக்கிய அடையாளம்.சிகரெட் பிடித்தால் தான் மலம் வரும் என்பதும்…டீ, காபி குடித்தால் தான் மலம் இயல்பாக வரும் என்பதும் தவறான கற்பனைகள்.கீரை வகைகளை அடிக்கடி உணவில் சேர்ப்பதன் மூலம் மலம் இளகும். மலக்கட்டு பிரச்னை எட்டிப்பார்க்க வாய்ப்பே இல்லை!

உடல் சோர்வை அகற்ற…மனச் சோர்வையும் அகற்ற…துள்ளல் உற்சாகத்தை அளிக்க…ரத்த சோகையைச் சரி செய்ய,மூல நோய்க் குறிகுணங்களைக் கட்டுப்படுத்த…எனக் கீரைகள் நமக்கு அளிக்கும் நன்மைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.ஒரே ரக கீரையை மட்டுமே அடிக்கடி சேர்ப்பதை விட,பல்வேறு கீரைகளையும் மாற்றி மாற்றி பயன்படுத்துவதால் அத்தனை சத்துகளும் உடலுக்குள் சேரும் வாய்ப்புகளையும் உண்டாக்கலாம்.

ஹெல்த் அண்ட் பியூட்டி (Health and beauty)