முனைவர் மா.ஆ.தீபா,M.Sc, M.Phil,Ph.D.,
உதவிப் பேராசிரியர்,தாவரவியல் துறை,
அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர்.

பூமியில் இயற்கை நமக்கு ஆயிரக்கணக்கான, கோடிக்கணக்கான செடி,கொடிகளை கொடுத்திருக்கிறது.அவற்றை நேர்த்தியாக பயன்படுத்தி மனித சமூகம் தனது ஆயுளை நீட்டித்துக் கொள்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.இயற்கை தந்த அற்புதமான மருத்துவ குணம் கொண்டது கல்பாசி. கல்பாசி (கல் மலர்) என்பது பாறைகள் மற்றும் மரக் கிளைகளில் படர்ந்து வளரும் ஒரு வகை பூஞ்சை இணைந்து வாழும் கூட்டுயிரி ஆகும்.இதற்கு வைக்கன் என்று பெயர்.

இது உயர்வகை தாவரமும் அல்ல பாசியும் அல்ல.இந்தக் கூட்டு…இலை போன்ற கட்டமைப்புகளில் (லோப்கள்) மென்மையான, வட்டமான அல்லது முனை விளிம்புகளுடன், பெரும்பாலும் ஒன்றுடன் ஒன்று இணைந்து தோன்றும்.உலரும் போது கடினமாகவும் காகிதமாகவும் இருக்கும்; ஊறவைக்கும்போது அல்லது சமைக்கும்போது மென்மையாக இருக்கும்.

உலரும்போது லேசான மண் மணத்திலும்; எண்ணெயில் வறுத்தால் வலுவான,புகையின் மணத்திலும்,அதீத நறுமண வாசனையை வெளியிடுகிறது. பொதுவாக ஈரப்பதமான காடுகளில், குறிப்பாக இமயமலை மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையில் மரங்கள், பாறைகள் மற்றும் கற்களில் வளரும்.

அதன் உலர்ந்த, சிதைந்த மற்றும் சுருள் தோற்றத்தால் அடையாளம் காணப்பட்ட ஒரு உண்ணக்கூடியதாகும்.இதன் மேற்பரப்பு பழுப்பு நிற இருக்கும். வெள்ளை-சாம்பல் அடிப்பகுதியை கொண்டிருக்கும். பர்மோட்ரெமா பெர்லாட்டம் (Parmotrema perlatum) என்ற தாவரவியல் பெயரைக் கொண்டது.

நம் நாட்டில் அசைவ சமையலில் மிக முக்கிய மசாலா பொருட்களில் ஒன்றாக இந்த கல்பாசி உள்ளது. உணவை செரிக்க உதவும் என்பதாலும், இறைச்சியை மென்மையானதாக ஆக்கும் என்பதாலும் கல்பாசி அசைவ சமையலில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
ஆயுர்வேதத சிகிச்சையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், செரிமானத்திற்கு உதவவும், வீக்கத்தைக் குறைக்கவும்,தோல் நோய்த் தொற்றுகளைக் குணப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் நிறைந்த இது பாரம்பரியமாக சிறுநீரக கற்கள், சுவாசப் பிரச்னைகள் மற்றும் வலிக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகிறது.இது கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் வயிற்று பிரச்னைகளைத் தணிக்கவும் உதவும் என்றும் அறியப்படுகிறது.

கல்பாசியின் முக்கிய மருத்துவ குணங்கள் ஏராளம்.
செரிமான ஆரோக்கியம், செரிமான தூண்டுதலுக்கு நல்ல ஊக்கியாக செயல்படுகிறது. வீக்கத்தை குறைக்கிறது. இரைப்பை அழற்சி போன்ற இரைப்பை குடல் பிரச்னைகளை சரி செய்ய உதவுகிறது.

அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணியாக, வீக்கம் மற்றும் வலியைக் குறைக்கிறது.இது மூட்டு வலி மற்றும் கீல்வாதத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.
சுவாசப் பிரச்னைகள், இருமல்,ஜலதோஷம் மற்றும் ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசக் கோளாறுகளைத் தணிக்க உதவுகிறது, ஏனெனில் இது இயற்கையான உமிழ்வு மருந்தாக உள்ளது.

தோல் பராமரிப்பு, தோல் நோய்த்தொற்றுகள் மற்றும் தடிப்புகளில் அதன் கிருமிநாசினி, அழற்சி எதிர்ப்பு மற்றும் காயத்தை குணப்படுத்தும் பண்புகளுக்காக பயன்படுத்தப்படுகிறது.
சிறுநீரக கற்களை உடைக்கவும், அகற்றவும் உதவுவதாகவும், ஒட்டுமொத்த சிறுநீரக செயல்பாட்டை ஆதரிப்பதாகவும் அறியப்படுகிறது.
பாக்டீரியா மற்றும் வைரஸ் நோய்த்தொற்றுகளுக்கு எதிராக போராடும் இயற்கை சேர்மங்களைக் கொண்டுள்ளது.
வளர்சிதை மாற்றம் மற்றும் இதய ஆரோக்கியம், ஆகியவற்றிற்கும் மிக முக்கியமானதாக உள்ளது. கொலஸ்ட்ரால் அளவை நிர்வகிக்கவும், கல்லீரல் செயல்பாட்டை அதிகரிக்கவும் உதவுகிறது.

சமையல் மற்றும் பாரம்பரிய பயன்பாடு என்று எடுத்துக் கொண்டால்,
கல்பாசி இந்திய உணவு வகைகளில் (குறிப்பாக செட்டிநாடு சமையலில்)அதன் தனித்துவமான, நறுமணம் மற்றும் சுவைக்காக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.பொதுவாக மிதமான அளவில் பயன்படுத்தப்படுகிறது. உணவி சுவை மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான பாதுகாப்பான மசாலாவாக கருதப்படுகிறது.

பிற மசாலா பொருட்களைப் போலவே பல சமயங்களில் கல்பாசியும் கலப்படப் பொருட்களுக்கு தப்புவதில்லை. உண்ணக்கூடிய கல்பாசிக்கு பதில், உட்கொள்ளக்கூடாத நறுமணம் மிகக் குறைந்த,வேறு வேதிப் பொருட்களை உள்ளடக்கிய லைக் கண்களும் சில சமயங்களில் எடையை அதிகரிக்க கலப்படப் பொருளாக சேர்க்கப்படுகிறது. சில வகையான காளான்களும் உலர்ந்த கல்பாசியை போன்ற தோற்றத்தில் இருப்பதால் அவையும் கலப்படப் பொருளாக கல்பாசியுடன் கலக்கப்படுகிறது. இவை நிறத்திலும் நறுமணத்திலும் சரியான கல்பாசிக்கு நிகரானவை அல்ல. வேறு விதமான உடல் உபாதைகளையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

எனவே சரியான கல்பாசியை கண்டறிய நாம் தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியம்.

சரியான கல்பாசியின் தோற்றம்

பஞ்சுபோன்று சுருளாக,கருப்பு, சாம்பல் மற்றும் வெள்ளை நிறமாக இருக்கும்.இது காகிதத்தைப் போல மிகவும் இலகுவானது.ஒரு கனமான, அடர்த்தியான பொருள் கலப்படமாக இருக்கலாம். அதேபோன்று கல்பாசி பச்சையாக இருக்கும்போது சிறிதளவு நறுமணத்துடனும், எண்ணெய் அல்லது நெய்யில் வறுத்தால் வலுவான,மர,புகை வாசனையையும் வெளியிடும். இதுபோன்று நாம் அதிகம் பரிட்சயம் இல்லாத பொருட்களை உணவுக்காக வாங்கும்போது,எஃப். எஸ்.எஸ் .ஏ.ஐ சான்று அளிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து வாங்குவது நல்லது.

லைக்கன் வகைகள் பலவும் தற்போதைய ஆராய்ச்சிகளில் பல்வேறு மருத்துவ குணங்களுக்காக மிகவும் அறியப்பட்டு வந்தாலும்,கேன்சர் போன்ற உயிர்க்கொல்லி நோய்களுக்கு மருந்தாக பல லைக்கன்கள் கண்டறியப்பட்டுக் கொண்டிருந்தாலும், நாம் பாரம்பரியமாகவே நம் உணவில் கல்பாசியை பயன்படுத்தி வருவது தமிழர்களின் அறிவியல் அறிவிற்கு ஒரு மிகச்சிறந்த உதாரணமாக இருக்கிறது. இத்தகைய அறிவுசார் பாரம்பரியத்தில் இருந்து வரும் நாமும் சரியானவற்றையே அடையாளம் கண்டு உணவில் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ வேண்டும்.