ந்தியாவில் முதல் முறையாக,காலில் உள்ள தமனிக்குப் பதிலாக வலது தோள்பட்டைக்குக் கீழே உள்ள தமனி வழியாக ‘TAVR/TAVI’ எனப்படும் குறைந்தபட்ச துளை கொண்ட இதய வால்வு மாற்று சிகிச்சை, செய்து சாதனை படைத்தது எஸ்.ஆர்.எம்.பிரைம் மருத்துவமனை.
இந்த மருத்துவமனை சென்னை ராமாபுரத்தில் உள்ளது.

73 வயது ஓய்வுபெற்ற அதிகாரியான இந்த முதியவர்,சிகிச்சை முடிந்த மூன்றாம் நாளே மருத்துவமனையிலிருந்த நலமுடன் வீடு திரும்பினார். இப்போது முன்போலவே தனது அன்றாட வேலைகளை அவரால் இயல்பாக செய்ய முடிகிறது.

பழுதடைந்த இதய வால்வை மாற்றுவதற்கு திறந்தநிலை இதய அறுவைசிகிச்சைக்கான அவசியமின்றி TAVR/TAVI செயல்முறை பயன்படுத்தப்படுகிறது.இதில், ரத்தக்குழாய் வழியாக ஒரு சிறிய குழாய் (கதீட்டர்) மூலம் செயற்கை வால்வு உள்ளே செலுத்தப்பட்டு, சுருங்கிய வால்வு இருக்கும் இடத்தில் பொருத்தப்பட்டு சீரான ரத்த ஓட்டம் உறுதி செய்யப்படுகிறது.

பொதுவாகக் காலில் உள்ள ரத்தக்குழாய் வழியாகவே இது செய்யப்படும். ஆனால்,இந்த நோயாளிக்கு ரத்தக்குழாய்களில் சுருக்கம்,அடைப்பு போன்ற பல சிக்கல்கள் இருந்ததால், காலிலுள்ள வழக்கமான வழிகளைப் பயன்படுத்த முடியவில்லை. எனவே, மருத்துவர்கள் வலது தோள்பட்டைத் தமனியை இச்சிகிச்சைக்கு தேர்ந்தெடுத்தனர்.

இடையீட்டு இதயவியல் சிகிச்சை நிபுணர் டாக்டர் பாலமுருகன் தலைமையிலான மருத்துவர்கள் குழுவில்,பொது மருத்துவம் மற்றும் நீரிழிவு துறைக்கான முதுநிலை நிபுணர் டாக்டர் ஏ.தாமஸ் ஜார்ஜ்,இதய நெஞ்சக மற்றும் ரத்தக்குழாய் அறுவைசிகிச்சைக்கான முதுநிலை நிபுணர் டாக்டர் பி. பாலசுப்பிரமணியன், அறுவைசிகிச்சை செயல்முறைகளுக்கான வழிகாட்டி டாக்டர் ஏ.பி. கோபாலமுருகன் மற்றும் இதய மயக்கவியல், தீவிர சிகிச்சை நிபுணர்கள் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்; நல்ல ஒருங்கிணைப்புடன் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த சிகிச்சையை வெற்றிகரமாக நிகழ்த்தி சாதித்திருக்கின்றனர்.

இந்தச் சிகிச்சையை மேற்கொண்ட டாக்டர் பாலமுருகன் கூறுகையில், “நோயாளி கடுமையான மூச்சுத்திணறல்,நீர் தேக்கத்தால் கால்களில் வீக்கம் மற்றும் குறைந்த ஆக்சிஜன் அளவு ஆகிய இதயச் செயலிழப்பு அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில், அவருக்கு இதய வால்வில் கால்சியம் படிந்து வால்வு சுருங்கியிருப்பது உறுதியானது.

அவரது வயது மற்றும் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு TAVR/TAVI முறையை நாங்கள் தேர்ந்தெடுத்தோம். ஆனால் தொடை, கழுத்து என வழக்கமான எந்த ரத்தக்குழாய் வழியும் அந்த முறையைப் பயன்படுத்துவதற்கு சாத்தியமாக இல்லை.வலது தோள்பட்டைத் தமனி மட்டுமே ஒரே வழியாக இருந்தது. எனவே,அதிநவீன கதீட்டர் கருவியைப் பயன்படுத்தி, இந்தியாவிலேயே முதல்முறையாக வலது தோள்பட்டைத் தமனி வழியாக இந்த வால்வு மாற்று சிகிச்சையை நாங்கள் வெற்றிகரமாக செய்தோம்,” என்றார்.

“முதியவர்கள் மற்றும் திறந்தநிலை அறுவைசிகிச்சை சாத்தியமற்ற நபர்களுக்கு, குறைவான ஊடுருவல் கொண்ட TAVR போன்ற நவீன சிகிச்சை உத்தி மிகவும் பாதுகாப்பானது. குறைவான பாதிப்பு மற்றும் விரைவாகக் குணமடையும் வாய்ப்பு இந்த உத்தியின் சிறந்த பலன்களாகும்.

ரத்தக்குழாய் செல்லும் பாதை கடினமானதாக இந்நோயாளிக்கு இருந்ததால், அறுவைசிகிச்சைக்கு முன் துல்லியமான திட்டமிடலும்,மாற்று ரத்தக்குழாய் வழியைப் பயன்படுத்துவதில் மிகுந்த நிபுணத்துவமும் தேவைப்பட்டது. எங்கள் மருத்துவக் குழுவின் அர்ப்பணிப்பால், இந்தியாவிலேயே முதல்முறையாக இந்த சிகிச்சையைச் செய்து முதியவரின் உயிரைக் காப்பாற்றியது uமகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் தந்திருக்கிறது” என்றார்.

73 வயதில் வேறு காக்கும் சிகிச்சை செய்து சாதனை செய்திருக்கும் மருத்துவர்களுக்கு நமது இதழ் சார்பில் வாழ்த்துக்கள்.

டாக்டர் ஜி.ராஹமோகன்.
ஹெல்த் அண்ட் பியூட்டி(Health and beauty)