
டாக்டர் சி.ஏ.ரவி,
பேராசிரியர் டாக்டர் உஷா ரவி.
இன்றைய தலைமுறையின் பார்வைக்கு கூழும், களியும்,அடையும், புட்டுமே சிறுதானிய உணவு அடையாளங்களாகி விட்டன.இவை சத்து மிகுந்தவை என்றாலும் சுவை குறைவு என்ற கருத்து நிலவி வருகிறது.
சுவைக்கும் இனிப்புக்கும் முன்னுரிமை தரும் தற்கால உணவு பண்பாட்டில் சிறுதானியங்கள் தனக்குரிய இடத்தை இழந்தது. இந்நிலையில்
உணவே மருந்து என்ற தத்துவம் உயிர் பெற்றதன் விளைவாக சிறுதானியங்களை தேடித்தேடி வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள்.
சிறுதானியங்களில் என்னென்ன சமைக்கலாம்… உங்களுக்கு உதவும் சத்தான சமையல் குறிப்புகள்.
தினை அல்வா
200 கிராம் தினை அரிசி மாவுடன் அதே அளவிலான வெல்லம்,தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக்கொள்ளவும்.சட்டியில் சிறிது நெய்யை விட்டு சூடாக்கி,கரைத்து வைத்துள்ள மாவை, சிறிது சிறிதாக விட்டு,நன்றாகக் கிளறவும். கட்டியாகாமல் பார்த்துக்கொள்ளவும்.இடைவிடாமல் சிறிது சிறிதாக நெய் சேர்க்கவும்.அல்வா, சட்டியில் ஒட்டாமல் வரும்போது, நெய்யில் வறுத்த முந்திரி,பாதாம், திராட்சை,சுக்குத் தூள் மற்றும் ஏலக்காய்த் தூள் தூவி இறக்கவும்.
கமகம மணத்தோடு சுவையான தினை அல்வா தயார்.
இது புரதச்சத்து,மாவுச் சத்து மற்றும் நார்ச் சத்து,வைட்டமின்கள் நிறைந்த சுவையான இனிப்பு பண்டம். குழந்தைகள் கொண்டாடுவார்கள்.
சாமை இடியாப்பம்
ஒரு குவளை சாமை அரிசியை 2 மணி நேரம் நன்றாக ஊறவைத்து சிறிது உப்பு சேர்த்து நன்கு மிருதுவாகவும் கெட்டித்தன்மையுடனும் அரைத்துக்கொள்ள வேண்டும்.இந்த மாவை இட்லித் தட்டில் வேக வைத்து இடியாப்ப அச்சில் பிழிந்து எடுத்தால் சாமை இடியாப்பம் காலை உணவாகும். நார்ச்சத்து அதிகம் உள்ளதால் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.
சாமை,காய்கறி பிரியாணி
சாமை அரிசி – 500 கிராம்,வெங்காயம், தக்காளி,கேரட், பீன்ஸ்,சௌசௌ – தலா 100 கிராம் (நறுக்கியது), பச்சைப்பட்டாணி-50 கிராம்,தயிர் – அரை கோப்பை,இஞ்சி, பூண்டு விழுது, புதினா – தேவையான அளவு, சோம்பு, பட்டைப்பொடி – 2 மேசைக்கரண்டி, மிளகாய்த்தூள்,உப்பு – தேவையான அளவு. தாளிக்க:நெய் – 100 மி.கி,ஏலக்காய், பிரிஞ்சி இலை, கிராம்பு-தலா 2, பட்டை,சாதிபத்திரி – சிறிதளவு.
நெய்யைச் சூடாக்கி, தாளிக்கக் கொடுத்த பொருட்களை, சிவக்க வறுத்துக்கொள்ளவும்.இதில் சோம்பு, பட்டைப்பொடியைச் சேர்த்து,இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.பிறகு, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி, புதினாவைச் சேர்க்கவும்.நன்றாக வதங்கியதும், தக்காளி சேர்த்து நன்கு சுருண்டு வரும் வரை வதக்கவும்.நறுக்கிய காய்கறிகள், பச்சைப்பட்டாணி சேர்த்து மிளகாய்த் தூள்,உப்புடன் ஒரு லிட்டர்(5 டம்ளர்) தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.பாதி வெந்ததும் தயிர் சேர்த்து வேகவிடவும். சாமை அரிசியைச் சேர்த்து வேகவிடவும். பிரியாணி பதம் வந்ததும் எடுக்கவும்.
சாமையின் நார் சத்தோடு அனைத்துக் காய்கறிகளும் சேர்வதால்,எல்லாச் சத்துக்களும் கிடைக்கும். ஆரோக்கியம் கூடும்.
மாப்பிள்ளை சம்பா சாம்பார் சோறு
மாப்பிள்ளை சம்பா அரிசி-500 கிராம், நாட்டுக் காய்கறிகள் – 400 கிராம்,துவரம் பருப்பு-150 கிராம், மஞ்சள் தூள்-2 சிட்டிகை,கடுகு, சீரகம்,மிளகு, வெந்தயம்-அரை தேக்கரண்டி,காய்ந்த மிளகாய்-3,தக்காளி – 2,சின்ன வெங்காயம்-100 கிராம்,பூண்டு-20 பல்,சாம்பார் பொடி-3 மேசைக்கரண்டி,புளி – ஒரு எலுமிச்சை அளவு,எண்ணெய், உப்பு-தேவையான அளவு, கறிவேப்பிலை கொஞ்சம், கொத்துமல்லி- சிறிது.
மாப்பிள்ளைச் சம்பா அரிசியுடன் மூன்று பங்கு தண்ணீர், சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு குழைய வேகவைக்கவும். துவரம் பருப்புடன், சீரகம்,மிளகு, கறிவேப்பிலை, மஞ்சள்தூள்,சிறிது எண்ணெய், வெந்தயம்,தக்காளி சேர்த்து நன்கு குழைய வேகவிடவும். எண்ணெயைச் சூடாக்கி,கடுகு, சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்துக் காய்கறிகளை சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கியதும் சாம்பார் பொடி சேர்த்து வதக்கவும். பிறகு,அதனுடன் கரைத்த புளித்தண்ணீர் சேர்த்து,நன்கு வேகவைக்கவும். வேகவைத்த பருப்பையும் காய்கறியுடன் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். இந்தச் சாம்பார் கலவையைக் குழைய வேகவைத்த சோறுடன் சேர்த்துக் கலக்கவும்.நறுக்கிய கொத்தமல்லியைத் தூவவும். மாப்பிள்ளைச் சம்பா சாம்பார் சாதத்தில் அனைத்து ஊட்டச் சத்துக்களும் சரிவிகிதத்தில் உள்ளன.
குதிரைவாலி தயிர் சோறு
குதிரைவாலி அரிசி – 500 கிராம்,பால்-ஒரு கோப்பை,தயிர் – அரை கோப்பை, உப்பு-தேவையான அளவு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, மாதுளை,இஞ்சி – சிறிதளவு.
குதிரைவாலியைச் சுத்தம் செய்து மூன்று கோப்பை நீர் சேர்த்து,நன்கு வேகவைத்துக் கொள்ளவும்.சோறு குளிர்ந்த பிறகு,பால் மற்றும் தயிர் சேர்த்து,கையால் நன்றாக கலக்கி உப்பு சேர்க்கவும். கொத்தமல்லி, மாதுளை, கறிவேப்பிலை, நறுக்கிய இஞ்சி சேர்த்துப் பரிமாறவும்.
வயிற்றுக்கு தேவையான பாதுகாப்பு பாக்டீரியாவை தருகின்றது. வயிற்றில் சுரக்கக்கூடிய அமிலத் தன்மையைக் குறைத்து வயிற்றுப் புண்ணைச் சரிசெய்கிறது.
சோள தோசை
சோளம்-500 கிராம், உளுந்து-100 கிராம், வெந்தயம்-2 மேசைக்கரண்டி, உப்பு-தேவையான அளவு.
சோளம்,உளுந்து, வெந்தயம் இவற்றை ஊறவைத்து, தனியாக தோசைமாவு பதத்துக்கு அரைத்து உப்பு சேர்த்துக் கலந்துகொள்ளவும். ஐந்து முதல் ஆறு மணி நேரம் புளிக்கவைத்து தோசையாக ஊற்றி எடுக்கவும்.
நாட்டில் பஞ்சம் இருக்கும்போது பசியை நீக்கிய தானியம் இது.மாவுச் சத்து மற்றும் புரதச் சத்து,நார்சத்து அதிகம் நிறைந்தது.
சாமை மிளகுப் பொங்கல்
சாமை அரிசி-500 கிராம்,பாசிப்பருப்பு – 250 கிராம்,இஞ்சி (துருவியது) – இரண்டு தேக்கரண்டி,நெய் – 3 மேசைக்கரண்டி, முந்திரி-10 கிராம், சீரகம்-2 தேக்கரண்டி, மிளகு-3 தேக்கரண்டி, கல் உப்பு – தேவையான அளவு.
பாசிப்பருப்பை தண்ணீரில் நன்றாக ஊறவைக்கவும். இதனுடன் கல் அரித்த சாமை அரிசி, உப்பு கலந்து குக்கரில் மூன்று விசில் வைத்து வேகவிடவும். நெய்யைச் சூடாக்கி சீரகம்,மிளகு, முந்திரி,இஞ்சி தாளித்து வேகவைத்த சாமையுடன் நன்கு கலக்கவும். சுவையான சாமைப் பொங்கல் தயார். எல்லாத் தாது உப்புகளும் நிறைந்தது சாமை பொங்கல்.உடலுக்கு ஆற்றலை தருகிறது. குடலில் உள்ள நச்சுத் தன்மையை நீக்குகிறது.
தினை கதம்ப இனிப்பு
தினை மாவு – 350கிராம்,நெல் அரிசி மாவு – 50கிராம்,வெல்லம் – 400கி,பால்-300 மி.கி, ஏலக்காய் தூள் – அரை தேக்கரண்டி, நெய்-150 மி.கி.
நெய்யைத் தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் தோசை மாவுப் பதத்தில் கலக்கிக் கொள்ளவேண்டும். அடி கனமான பாத்திரத்தில் நெய்யை சூடாக்கி மாவுக் கலவையை ஊற்றி வேகவிடவும். எல்லாம் சேர்ந்து சுருண்டு,நெய் கலவையிலிருந்து வெளி வரும் வரை மெள்ளக் கிளறினால் தினை கதம்ப இனிப்பு கிடைக்கும். சுவையுடன் சக்தி தரும் உணவு.வீட்டு விசேஷங்களில் விருந்து வைக்கலாம்.எப்படி செய்தீர்கள் என்று உறவுப் பெண்கள் உங்களிடம் கேட்டுச் செல்வார்கள்.
தினை காரப் பணியாரம்
தினை அரிசி-500 கிராம், உளுந்து-250 கிராம், வெந்தயம்-3 தேக்கரண்டி,உப்பு – தேவையான அளவு, கடுகு,சீரகம்-ஒரு தேக்கரண்டி,சின்ன வெங்காயம்-250 கிராம்,மிளகாய்-4, எண்ணெய், கறிவேப்பிலை – தேவையான அளவு, சீரகம்-சிறிதளவு.
தினை அரிசி, உளுந்து,வெந்தயம் முதலியவற்றை மூன்று மணி நேரம் ஊறவைத்து, நன்றாகப் பதமாக அரைக்கவும். இதனுடன் உப்பு சேர்த்து ஆறு முதல் எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும். சிறிதளவு எண்ணெயைச் சூடாக்கி,கடுகு, சீரகம்,மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலையைத் தாளித்து,புளித்த மாவுடன் சேர்த்துக் கலக்கவும். பணியாரச் சட்டியில் எண்ணெயைத் தடவி,கலந்த மாவை ஊற்றி வேகவைத்து எடுக்கவும்.கடலைத் துவையல்,புதினாத் துவையல் தேங்காய்ச் சட்னியுடன் தொட்டுச் சாப்பிட சுவையாகவும் சத்தாகவும் இருக்கும்.
தினை காரப் பணியாரத்தில் புரதம் மற்றும் நார்ச் சத்து அதிகம் உள்ளது.சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல பலன் தரும். குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச் சத்து உணவாக இருக்கும். காரப் பணியாரம் செய்து கொடுத்தால், விரும்பிச் சாப்பிடுவார்கள்.
சாமைக் காரப் புட்டு
சாமை அரிசி மாவு – 500 கிராம், எண்ணெய்-3 மேசைக்கரண்டி, கடுகு-சிறிதளவு, உளுந்து-ஒரு தேக்கரண்டி, கடலைப்பருப்பு ஒரு தேக்கரண்டி,சீரகம் ஒரு தேக்கரண்டி, கறிவேப்பிலை சிறிதளவு, கொத்தமல்லி (பொடியாக நறுக்கியது) சிறிதளவு,தக்காளி (பொடியாக நறுக்கியது) 1,சின்ன வெங்காயம் (பொடியாக நறுக்கியது) 250 கிராம்,காய்ந்த மிளகாய் 4,உப்பு தேவையான அளவு.
சாமை அரிசி மாவைச் சலித்து, அதனுடன் சீரகம், சிறிது உப்பு கலந்து புட்டு பதத்துக்குப் பிசைந்து,ஐந்து நிமிடங்கள் ஊறவைத்து, ஆவியில் 10 நிமிடங்கள் வேகவிடவும். கடாயில் எண்ணெயைச் சூடாக்கி,கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், மிளகாய்,தக்காளி, உப்பு முறையே சேர்த்து,நன்கு சுருண்டு வரும் வரை வதக்கவும்.பின், வேகவைத்த சாமைப் புட்டைச் சேர்த்து நன்கு கலக்கவும். கொத்தமல்லியைத் தூவி இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் மூடி வேகவிட்டு எடுக்கவும்.
நீராவியில் வேகவைத்த உணவு என்பதால்,உடலுக்கு நல்லது.விரைந்து செரிக்கும் தன்மை கொண்டது.காரம் சேர்ப்பதால்,சுவை மிகுகிறது.
தினைப் பாயசம்
தினை 250 கிராம், பனை வெல்லம் 200 கிராம்,பால் 250 மி.லி.,முந்திரிப் பருப்பு 15,ஏலக்காய் – 5, உலர்ந்த திராட்சை – 15,நெய் 2 தேக்கரண்டி.
ஒரு பாத்திரத்தில் 4 கோப்பை தண்ணீர்விட்டு, அதில் தினையைப் போட்டு நன்கு வெந்ததும், வெல்லத்தைத் தூளாக்கிப் போடவும். 10 நிமிடம் மெல்லிய சூட்டில் வேகவிட்டு, கடைசியாகப் பால் சேர்க்கவும்.முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து போடவும். கடைசியாக ஒரு கலக்குக் கலக்கி இறக்கும்போது, ஏலக்காயைப் பொடித்து சேர்க்கவும்.
கைகுத்தல் அரிசி இட்லி
கைக்குத்தல் மாப்பிள்ளைச் சம்பா சிகப்பரிசி ஒரு கிலோ,கறுப்பு உளுந்து 200 கிராம், வெந்தயம் ஒரு மேசைக்கரண்டி, உப்பு தேவையான அளவு.
அரிசி,உளுந்து, வெந்தயத்தைத் தனித்தனியாக ஊறவைத்து, இட்லிக்கு அரைப்பது போல அரைத்து, உப்பு சேர்த்துக் கரைக்கவும். உளுந்தைத் தோல் நீக்காமல்,அப்படியே அரைக்க வேண்டும். மறுநாள், வழக்கம்போல இட்லித் தட்டில் ஊற்றி வேகவைத்து எடுக்கவும்.
வைட்டமின் பி, ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்டுகள் செரிந்த பாலிஃபீனால் உளுந்து தோலில் உண்டு.கைக்குத்தல் அரிசியில் இரும்புச் சத்து,நார்ச் சத்துடன், வைட்டமின் பி 1 உண்டு. பாலிஃபீனால்,பீட்டா கரோட்டின் நிறைந்த சத்தான இட்லி.
மாப்பிள்ளைச் சம்பாவுக்குப் பதிலாக,தினை அரிசி சேர்த்துச் செய்தால் தினை இட்லி.ஆனால், எதுவானாலும் உளுந்தைத் தோலோடுதான் அரைக்க வேண்டும். இந்த இரண்டு இட்லிகளையுமே சூடாகச் சாப்பிட வேண்டும். ஆறினால் விரைத்துவிடும். மீண்டும் சுடவைத்து சாப்பிட்டால்தான் நன்றாக இருக்கும்.
சிறுதானிய உணவு வகைகள் நம் நல்வாழ்வுக்கான வாழ்நாள் முதலீடு. எளிமையானது. உயிர் சக்தியை அதிகரிக்ககூடியது. ஆரோக்கியமான எதிர்காலத்தை உறுதி செய்யவல்லது .
சில சமையல் குறிப்புகளை மட்டுமே உங்கள் பார்வைக்கு வைத்துள்ளோம்.
இன்னும் ஏராளமான சிறுதானிய சுவை மிகுந்த உணவு வகைகள் உள்ளன.
சிறுதானிய உணவுகள் தொடர்பாக எங்கள் சுசான்லி மருத்துவ குழுமம் 40 ஆண்டுகளாக பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டுவருகிறது.சிறுதானிய உணவு பொருட்களையும் வி ஹெர்பல் நிறுவனத்தின் மூலம் தயாரித்து விற்பனைக்கு வழங்கி வருகிறது. ஆர்வமுள்ள இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் பயிற்சிகள் அளித்து அவர்களையும் சிறுதானிய உணவு விற்பனை நிலையங்கள் மற்றும் இயற்கை வழிமுறைகளின்படி சிறுதானிய உணவு விடுதிகளையும் தொடங்க வழிகாட்டி வருகிறோம்.
தகவல் தொடர்புக்கு:
தி சுசான்லி அக்குபஞ்சர் மற்றும் ஆயுர் வேதிக் கிளினிக்,
எண்:11,பாரதிதாசன் தெரு ,பிள்ளையார் கோயில் எதிரில் ,
மஞ்சக்குப்பம், கடலூர்-607 001
93676 22256

