
உலகில் போர் மேகம் சூழ்ந்துள்ளது.யுத்தம் மனித குலத்திற்கு எதிரானது. எங்கோ நடக்கும் யுத்தம் நமது சமையலறையை முடக்குகிறது. போர் வேண்டாம்.பேசி தீர்க்கலாம். ஆயுதங்கள், அணுகுண்டுகள் வேண்டாம்.
மனித உயிர்களை அழித்துவிட்டு எதை சாதிக்க போகிறீர்கள்.?
உலகை இயக்கும் மாபெரும் சக்தி எது என்று என்னைக் கேட்டால் அன்புதான் என்பேன்.
உள் மன அமைதி முதல் உலக அமைதி வரை அனைத்தும் அன்பினால் மட்டுமே சாத்தியம்.
அன்பு குறையும்போது மனதில் வன்மம் வளர்கிறது.அன்பு வற்றிய மனம் தான் பிறர் துயரைப் பார்க்க மறுக்கிறது. அன்பு போதாமைதான் குற்றங்கள் செய்யத் தூண்டுகிறது.
நம் எல்லோரிடத்திலும் அன்பு இருக்கிறது. ஆனால் அது மிகக் குறுகிய வட்டத்தில் பலகீனமாக இயங்குகிறது. அதுவும் நிபந்தனைகளுடன் அளிக்கப்படுகிறது.
தன்னலம் கருதாமல், பிரதிபலன் எண்ணாமல் பிறர் மீது செலுத்தும் உணர்வுதான் அன்பு. அது பெறுபவரின் தகுதி அல்ல. கொடுப்பவரின் தகுதி.அது கொடுக்கல் வாங்கல் வியாபாரம் அல்ல. அள்ளித் தரும் அளவற்ற சக்தியின் அடையாளம்.
பிள்ளை மீது தாய் உயிரையே வைக்கிறாள். காதலியைக் காதலன் உயிரே என்று அழைக்கிறான்.நட்பு தான் உயிரைவிடப் பெரிது என்கிறான். கொள்கைக்கு உயிரைக் கொடுப்பேன் என்று பறைசாற்றுகிறான் தொண்டன். அடிப்படையில் அனைத்தும் அன்பு தானே!
அன்பை கொடுப்பவர்களுக்கு என்றுமே தோல்வி இல்லை.நம் அன்பு எத்தனை பறந்து விரிந்துள்ளது என்பதில் தான் நம் மனவளம் அடங்கியுள்ளது.
அன்பு காட்டுபவர்கள் முகத்தில் உள்ள பரவசக் களிப்பை பாருங்கள்.அது ஆயிரம் பாடங்கள் சொல்லும்.செடிக்கு நீர் ஊற்றும்போதோ, நாய்க்குச் சோறிடும் போதோ, பிள்ளைக்குப் பாலூட்டும்போதோ, ஆர்வத்துடன் பாடம் சொல்லிக் கொடுக்கும்போதோ, ரசிகர்களுக்காகப் பாடகர் குழைந்து பாடும்போதோ. அன்புடன் கொடுக்கும் எல்லாத் தருணங்களிலும் மனிதர்கள் அழகாய்த் தெரிவார்கள்!
பெரிய அறிவும் சிறிய அன்பும் கொண்ட மனிதர்கள் வாழும் சமூகம் ஆபத்தானது.அன்பு கலக்காத அறிவு, நாசத்தை மட்டுமே நடத்திக் காட்டும்.
எல்லா உயிரும் ஓருயிரே என்று உணர்ந்து அன்பு செலுத்துவதுதான் பேரன்பு.அது தான் பேரறிவு,அழியாத அன்பைத் தர ஆயிரம் வழிகள் உள்ளன!
பேரன்பைப் பொழிவதே பேரானந்தம் என்று உணர்கையில் நம் மனம் சுகம் பெறும். வாழ்க்கை வளம் பெறும்!
மனநலத்தை காக்கும் மருந்து அன்பு!
டாக்டர் ஜி.ராஜமோகன்.
01.04.2026.

