முனைவர் மா.ஆ.தீபா.
M.Sc,M.Phil,Ph.D., உதவிப் பேராசிரியா்,
தாவரவியல் துறை, அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி),
கோயம்புத்தூர் 641 018

மூலிகைகள் மனித ஆரோக்கியத்திற்கும், வாழ்வியலுக்கும் மிகவும் முக்கியமானவை. நவீன மருத்துவத்தின் வருகைக்கு முன்பே, நமது முன்னோர்கள் பல நோய்களைக் குணப்படுத்தவும், உடல் வலிமையை மேம்படுத்தவும் மூலிகைகளையே முழுமையாக நம்பியிருந்தனர்.

பெரும்பாலான மூலிகைகள் பக்க விளைவுகள் அற்றவை.உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையாகவே அதிகரிக்கின்றன.

மூலிகைகளின் அபார மருத்துவ குணத்தை எல்லோரும் அறிந்து கொள்வது முக்கியம். அந்த வகையில் இந்த மாதம் திருநீற்றுப்பச்சிலையைப் பற்றி தெரிந்து கொள்ள நல்ல வாய்ப்பு. மூலிகைகளின் ராணியாக திருநீற்றுப் பச்சிலையை சொல்லலாம்.

மூலிகைகள் நம் வாழ்வில் மிகப்பெரிய பாதுகாப்பு அரண். எல்லாக் கால சூழல்களையும் நாம் மிக எளிமையாக கடந்து செல்ல,நம் உணவு முறைகளை சூழலுக்கு ஏற்ப மாற்றிக் கொள்வது நம் கலாச்சாரத்தின் ஒன்றாக உள்ளது. அவ்வாறு மாற்றப்படும்போது நம் உணவு வகைகளில் பல்வேறு மூலிகைகளையும் உள்ளடக்கியே அதனை வடிவமைத்தனர் நம் முன்னோர்கள்.

இதனாலேயே வெளிப்புற சூழலில் இருந்து நம்மை தாக்கும் பல நோய்களையும் மிக எளிதாக கையாண்டனர். காடுகளில் சுற்றித் திரிந்து அரிய மூலிகைகளைக் கொண்டு இவற்றை வடிவமைக்காமல், மிக எளிதாக நம் சுற்றுப்புறங்களில் செழித்து வளர்ந்து, தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப மருத்துவ குணங்களை கொண்டுள்ள மூலிகைகளையே பயன்படுத்தினர்.

மூலிகைகளின் ராணி என்று பெயர் பெற்ற திருநீற்றுப்பச்சிலை உலக அளவில் பல்வேறு உணவு முறைகளிலும், மருத்துவ முறைகளிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளது.

இந்த மூலிகை உணவு,மருந்து மட்டுமல்லாது,அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பதால் பெசிலஸ் என்ற கிரேக்க பெயரை பெற்றுள்ளது. இதற்கு ராயல் அல்லது கிங் என்ற பொருளும் உள்ளது. ஐயாயிரம் வருடங்களுக்கும் மேலான பழமையான பயன்பாட்டை கொண்டுள்ளது. பல்வேறு மத்திய தரைக் கடல் நாடுகளிலும் மற்றும் உலகின் பல்வேறு நாடுகளிலும் வளர்க்கப்படும் தாவரமாகவும் உள்ளது.புரதச்சத்து, நார்ச்சத்து, ஒமேகா 3 என்னும் கொழுப்பு, கால்சியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் சத்துகளை அதிக அளவில் கொண்டுள்ளது. சூரியன் சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் உடலுக்கு மிக நல்ல குளிர்ச்சி ஊட்டக்கூடிய இதன் விதைகளைப் பற்றி நாம் அறிந்து கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்..

இது ஆஸிமம் பேசிலிகம் (Ocimum basilicum)என்ற தாவரவியல் பெயர் கொண்ட துளசி வகையைச் சார்ந்த மூலிகை ஆகும். மிகச் சிறிய கரு நிற விதைகளைக் கொண்டிருக்கும். இதன் இலைகள் பீட்சா ஹெர்ப் என்ற பெயரில் துரித உணவு வகைகள் பலவற்றிலும் மிக அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.மிக வசீகரமான நறுமணத்தை கொண்ட இந்த மூலிகைச் செடி, நூற்றுக்கணக்கான விதைகளை உண்டாக்குவதால், ஒரு தாவரத்திலிருந்து பல தாவரங்களை மிக எளிதாக வளர்க்கலாம்.

இதன் இலைகள் உடல் சூட்டை தணிப்பதாகவும், வியர்வையினால் உண்டாகும் வியர்க்குரு,அலர்ஜி, மற்றும் செம்மை நிறத்தையும், முகப்பருக்களையும் கட்டுப்படுத்துவதாக அமைகிறது.இந்த இலைகளோடு, அவரை இலை மற்றும் அப்பகோவையின் இலைகள் சேர்க்கப்பட்டு அரைத்து,கஸ்தூரி மஞ்சளுடன் சேர்த்து குழந்தைகளுக்கு உடல் முழுவதும் பூசப்படுகிறது. இதனால் பச்சிளம் குழந்தைகளின் மேல் வரும் பாலின் வாடை மாறி புத்துணர்ச்சி ஊட்டுவதாகவும், கிருமிகளிடமிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.வணிக ரீதியாகவும் இதன் இலைகள் மிகப்பெரிய அளவில் அறியப்படும் ஒன்றாக உள்ளது.

ஆனால்,நாம் அருந்தும் பல குளிர்பானங்களிலும்,ஜிகர்தண்டா போன்ற நம் நாட்டின் பாரம்பரிய பானங்களிலும் காணப்படும் கருப்பு மற்றும் அதை சுற்றிய வெள்ளை சவ்வு போன்ற பகுதிகளைக் கொண்ட இத்தாவரத்தின் விதைகள் குறித்து தான் நாம் இங்கு அறிந்து கொள்ளப் போகிறோம். இவ்விதைகளுக்கு வணிக ரீதியான பெயர் சப்ஜா விதை. சிறிய கருப்பு நிற விதைகளாக இருக்கும்,இது நீரில் சேர்க்கப்படும்போது லேசான பிசின் அல்லது வெண்மை நிற ஜெல்லி போன்ற அமைப்பில் மாறும். ஊறவைக்கப்பட்ட 15 நிமிடங்களுக்குள் தங்கள் அசல் அளவைவிட மூன்று மடங்கு பெரிதாகி ஒரு ஜெல் அடுக்கை உருவாக்கும்.இது சுவையற்றதாக இருப்பதால் மற்ற உணவு பொருட்களுடன் கலக்கப்படும்போது, அவ்வுணவுப் பொருட்களின் தன்மை மாறாமல் இருக்கும்.

உயிர் வேதியியல் ரீதியாக பார்க்கப்படும்போது இந்த விதைகள் செயல் திறன் நிறைந்ததாகவே இருக்கிறது.100 கிராம் விதைக்கு 11.4 முதல் 22.5 கிராம் வரை புரதச்செறிவு உள்ளது.எனவே விளையாட்டு வீரர்களுக்கு மிகச்சிறந்த உணவாக அமைகிறது.இந்த விதைகளில் அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்களும் நிறைந்து இருப்பதாலும், மனித உடலால் தானாக உற்பத்தி செய்ய முடியாத அமினோ அமிலங்களையும் கொண்டுள்ளதால், மிக சிறப்பான ஊட்டச்சத்து உணவாக அமைகிறது.

மாறிவரும் உணவு பழக்க வழக்கங்களால் மிக அதிகமாக நாம் எதிர்கொள்ளும் உடல் உபாதை என்பது உடல் கழிவுகளை முற்றிலுமாக நீக்குவதே ஆகும். குடல் கழிவுகள் முழுமையாக வெளியேறாதபோது அதிக அளவில் வயிற்றுக் கோளாறுகள் ஏற்படுகிறது. கழிவுகளை மிக எளிதாக உடலில் இருந்து வெளியேற்றி நச்சுத்தன்மையை குறைத்து உடல் உபாதைகள் ஏற்படாமல் இருக்க உதவுவது நார்ச்சத்து ஆகும்.

நாம் உண்ணும் பலவகையான காய்கறிகளிலும் பழங்களிலும் நார்ச்சத்துகள் இருந்தாலும், அவற்றை நாம் எடுத்துக் கொள்ளும் முறையின் காரணமாக நார்ச்சத்து நம் உடலுக்கு கிடைப்பது மிக அரிதாகவே உள்ளது.உணவு தயாரிப்பு முறைகளில் நார்ச்சத்துகள் பொதுவாக நீக்கப்படுவதாலும், ரிபைண்டு உணவுகளாக நாம் உட்கொள்வதாலும், பழங்களாக உட்கொள்ளாமல் அதன் சாராக உட்கொள்வதாலும் நார்ச்சத்து கிடைப்பது நம் உடலுக்கு மிக குறைவாகவே உள்ளது.ஆனால்,நம் உடலில் இருந்து கழிவுகளை முழுமையாக வெளியேற்ற நார்ச்சத்து மிகவும் அவசியம்.

இத்தகைய சூழலில் நார்ச்சத்திற்கென்றே பெயர் பெற்ற சப்ஜா விதைகள் நமக்கு ஒரு வரப்பிரசாதமாகவே அமைகின்றன. . சைவ உணவு உண்பவர்களுக்கு ஒமேகா-3க்கான தேடல் பெரும்பாலும் ஆளி விதை அல்லது சியா விதைகளோடு முடியும்.ஆனால், இந்த திருநீற்றுப்பச்சிலையின் விதைகள் ஆல்பா லினோலினிக் அமிலம் கொண்ட கொழுப்பு சத்து கொண்டதாக உள்ளது.இது இதய ஆரோக்கியத்திற்கு ஒரு வரப்பிரசாதமாகும். உடலில் ஏற்படக்கூடிய அலர்ஜியை போக்கி வெயிலின் சூட்டால் நம் சருமத்திற்கு ஏற்படும் பல்வேறு விதமான உபாதைகளையும் போக்க வல்லது.

அடிப்படை ஊட்டச்சத்தை தாண்டி சப்ஜா விதைகளில் பிளேவனாயிடுகள் மற்றும் பாலிபீனால்கள் போன்ற பைட்டோகெமிக்கல்கள் நிறைந்து இருப்பதால், நீரிழிவு எதிர்ப்பு ஆற்றல் கொண்டதாகவும், அலர்ஜி எதிர்ப்பு தன்மை கொண்டதாகவும், வீக்கத்தை குறைப்பதாகவும், இரைப்பை மற்றும் குடல் பகுதிகளில் ஏற்படும் புண்கள், மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்குக்கு சிகிச்சை அளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.மேலும் தலைவலி, இருமல்,மருக்கள், குடல் புழுக்கள் மற்றும் சிறுநீரகப் பிரச்னைகளுக்கான சிகிச்சையிலும் சப்ஜா விதைகள் பாரம்பரிய மருத்துவத்தில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்கள் சாலடுகளில் தயிர் அல்லது மற்ற கிரீம்களுக்கு பதிலாக இவ்விதைகளை நீரில் ஊறவைத்து பயன்படுத்தலாம். ஸ்மூத்திகள் மற்றும் புட்டிங்குகளை பார்ப்பதற்கும் சுவைப்பதற்கும் கவர்ச்சிகரமானதாக ஆக்கவும் இவ்விதைகள் பயன்படுத்தப்படுகின்றன.தற்கால உணவுகளில் பேக்கிங் செய்யப்படும்போது முட்டைக்கு பதிலாக நீரில் ஊற வைத்த விதைகளை சேர்த்து பேக்கிங் செய்யலாம்.

இத்தகைய வகையில் உணவாகவும் மருந்தாகவும் பயன்படும் சப்ஜா விதைகளை நாம் பயன்படுத்தும் போதும் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தாமல் சரியான அளவிலேயே எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில்,மற்ற எல்லா மூலிகைகளைப் போலவே அதீத உட்கொள்ளுதல் அல்லது தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுதல் போன்ற நிலைகளில் இதிலுள்ள எஸ்ட்ராகோல் என்னும் வேதிப்பொருள், கல்லீரல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்க கூடும் என்று அறிவியல் ரீதியாக அறியப்படுவதால் இதனை அளவாக பயன்படுத்தி பல்வேறு நன்மைகளையும் பெறலாம்.

நம் மரபுப்படி மூலிகை வைத்தியர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாகவே இருந்து வந்துள்ளது. ஆனால்,இன்றைய காலகட்டத்தில், ஊடகங்கள் வாயிலாகவும் மற்ற தளங்களில் இருந்தும் மிக அதிக அளவில் பல மூலிகைகளும் மக்களிடையே பிரபலம் அடைந்து வருகிறது.ஆனால், இம்மூலிகைகளைப் பற்றிய முழுமையான புரிதல் இல்லாமையால், உயிர் காக்கும் அல்லது,உடல் நலன் காக்கும் மூலிகைகளை சரியான விதத்தில் பயன்படுத்தாமலும், சரியான அளவில் பயன்படுத்தாமலும் அவற்றின் நச்சுத்தன்மைக்கு ஆளாகிறோம். இதன் விளைவாக மூலிகைகளை பயன்படுத்துவதையே பலரும் தவிர்த்து விடுகின்றனர்.

இங்கு தேவைப்படுவது மூலிகைகளைக் குறித்த சரியான அறிவே ஆகும். எனவே நாமும் மூலிகைகளைப் பற்றிய சரியான புரிதலோடு அவற்றை பயன்படுத்தி நல்ல ஆரோக்கியத்தை பெறுவோமாக.