
வீட்டில் எதிர்பாராத விதமாக 97 வயது முதியவர் தவறி விழுந்து விட்டார். காயம் எதுவும் இல்லை.ஆனால் வலி இருந்திருக்கிறது. வலி மாத்திரை போட்டுக் கொண்டார்.சில நாட்களில் வலி அதிகரித்து விட்டது.
தோள்பட்டை தசைநாண் மோசமாக சேதம் அடைந்துள்ளது.சரி செய்யவே முடியாது என்று சொல்லி இருக்கிறார்கள்.
வலியில்லாத வாழ்க்கை வேண்டும். யாரையும் சார்ந்து என்னால் வாழ முடியாது.எனது ஆடையைக் கூட உடுத்திக் கொள்ள முடியவில்லை. எப்படியாவது எனக்கு சிகிச்சை தாருங்கள் என்று சென்னை, குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையைஅணுகியிருக்கிறார்.
முதியவரின் வயது மற்றும் பலவீனமான இதய நிலையை கருத்தில் கொண்ட மருத்துவக் குழு, அவருக்குப் பொது மயக்க மருந்து அளிப்பது உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதால் அதைத் தவிர்த்தது. அதற்குப் பதிலாக, குறிப்பிட்ட பகுதியை மட்டும் மரத்துப் போகச் செய்யும் நவீன முறையைக் கையாண்டதால், அறுவை சிகிச்சையின் போது நோாயாளி முழு விழிப்புடன் மருத்துவர்களுடன் பேசிக் கொண்டே இருந்தார்.
மிகக் குறைந்த அளவிலான துளை மட்டுமே போடப்பட்ட இந்தத் நவீன சிகிச்சையின் பலனாக,அந்த முதியவர் பொது வார்டில் சில நாட்கள் தங்கி, முறையான பிசியோதெரபி பயிற்சிகளுக்குப் பிறகு,அறுவை சிகிச்சை முடிந்த இரண்டே நாட்களில் தன் சொந்தக் காலில் நடந்து ஆரோக்கியமாக வீட்டிற்குத் திரும்பினார்.
நம் மணிக்கட்டைச் சுற்றியுள்ள கஃப் பட்டை போல, தோள்பட்டை மூட்டினைச் சுற்றியுள்ள நான்கு முக்கியத் தசைகள் மற்றும் அவற்றின் தசைநாண்களின் தொகுப்பே ‘ரோட்டேட்டர் கப்’ எனப்படுகிறது. இவைதான் தோள்பந்து எலும்பை அதன் குழிக்குள் கச்சிதமாகப் பிடித்து வைத்துக்கொண்டு, கையை உயர்த்துவதற்கும் சுழற்றுவதற்கும் உதவுகின்றன.
கீழே விழுந்ததில் இந்த முதியவரின் இடது தோள்பட்டையில் பெரும் பிளவு ஏற்பட்டு,கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக தொடர்ச்சியான கடும் வலியால் அவதிப்பட்டார். அவரால் இடது கையைச் சிறிதும் அசைக்க முடியவில்லை; ஓய்வு எடுத்தும் வலி நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போனது.
இதையடுத்து, ரேலா மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்காக அழைத்து வரப்பட்ட இம்முதியவருக்கு நுண்துளை அறுவை சிகிச்சை மற்றும் விளையாட்டு மருத்துவ நிபுணர்கள், ‘InSpace™’ என்ற மட்கி கரைந்துபோகும் தன்மை கொண்ட ஒரு பலூனைப் பயன்படுத்தி இந்த மருத்துவ சாதனையை நிகழ்த்தியுள்ளனர். மிகக் கடுமையான தசைநாண் கிழிசல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட, உடலிலேயே கரையக்கூடிய ஒரே மருத்துவ தயாரிப்பு இதுவாகும்.இந்த முறையில், சிறிய துளைகள் வழியாக சிறிய சுருங்கிய பலூன், தோள்பட்டை எலும்புக்குக் கீழே செலுத்தப்பட்டு, தூய்மையான உப்பு நீர் மூலம் மெதுவாக உப்ப வைக்கப்படுகிறது.
இந்த பலூன் ஒரு மென்மையான மெத்தை போல மாறி,எலும்புகள் ஒன்றோடொன்று உராயும்போது ஏற்படும் தாங்க முடியாத வலியைத் தடுத்து,கையை எளிதாக உயர்த்த வைக்கிறது.சில மாதங்களில் இந்த பலூன் உடலுக்கு எந்தத் தீங்கும் விளைவிக்காமல் தானாகவே கரைந்துவிடும்; அதற்குள் தோள்பட்டை தசைகள் இந்த இயக்கத்திற்குத் தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ளும். இதனால் உடலுக்குள் எந்தவொரு நிரந்தரமான திருகுகளோ அல்லது உலோகத் தாங்கிப் பொருட்களோ எஞ்சியிருக்காது.
ரேலா மருத்துவமனையின் மூட்டு மாற்று அறுவைசிகிச்சை துறை தலைவர் டாக்டர்.அசோக் எஸ். கவாஸ்கவர் பேசுகையில்:
“இந்த நோயாளிக்கு தசைநாண் கிழிசல் மிக மோசமாக இருந்தது. தசைநாணின் பெரும்பகுதி எலும்பிலிருந்து பிரிந்து சுருங்கிவிட்டதால், வழக்கமான தசைநாண் தையல் முறை இவருக்கு சாத்தியமற்றதாக இருந்தது.97 வயது முதியவருக்கு இத்தகைய பெரிய பாதிப்பைக் கையாண்டு சிகிச்சை அளிப்பது மருத்துவ ரீதியில் ஒரு பெரிய சவாலாகும். பொதுவாக இச்சிகிச்சை பொது மயக்க மருந்து அளிக்கப்பட்டே செய்யப்படும். ஆனால், இம்முதியவருக்கு ஆபத்துக்கான வாய்ப்பை தவிர்க்க ‘இன்டர்ஸ்கேலீன் நரம்பு மரத்துப்போகச் செய்யும் முறை’ மூலம் தோள்பட்டை பகுதியை மட்டும் மரத்துப் போகச் செய்து,நோயாளி முழு விழிப்புடன் இருக்கும்போதே அறுவை சிகிச்சையை நாங்கள் வெற்றிகரமாக செய்து முடித்தோம். இது வயதுமுதிர்ந்த நபருக்கு ஏற்படும் பக்கவிளைவுகளைத் தடுத்து, வேகமாகவும், பாதுகாப்பாகவும் அவர் குணமடைய உதவியது.” என்றார்.
விளையாட்டு மருத்துவ நிபுணர் டாக்டர் பிரகாஷ் அய்யாதுரை பேசுகையில், “தோள்பட்டைப் பகுதியில் ஏற்படும் தசைநார் கிழிவுகள் (Rotator cuff tears) இன்று மிகவும் பொதுவான எலும்பு மற்றும் மூட்டுப் பிரச்சனைகளில் ஒன்றாக மாறியுள்ளன; குறிப்பாக வயது கூடிக்கொண்டே போகும்போது இந்த பாதிப்பு ஏற்படும் அபாயமும் கணிசமாக அதிகரிக்கிறது. இந்தியாவின் முதியோர் மக்கள் தொகை அதிகரித்து வரும் வேளையில்,இந்த ஆரோக்கியப் பிரச்னை மருத்துவத் துறைக்கு ஒரு சவாலான சுமையாக உருவெடுத்து வருகிறது.
இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி, 40 வயதைக் கடந்த ஐந்து முதியவர்களில் ஒருவருக்கு ஏதோ ஒரு வகையில் தோள்பட்டை தசைநார் கிழிவு பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், அடுத்தடுத்த ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் இந்த பாதிப்பின் வீரியம் மிகத் தீவிரமாக அதிகரிக்கும்.இந்த வயது பிரிவில் கிட்டத்தட்ட 10 முதல் 11 சதவீத நபர்களுக்கு தசைநார் முற்றிலும் கிழிந்திருக்கும் கடுமையான பாதிப்புகள் காணப்படுகின்றன” என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “வயது முதிர்வே இதற்கு மிக முக்கியமான முதன்மைக் காரணியாக விளங்குகிறது. ஏனெனில், காலப்போக்கில் நமது தசைநார்கள் இயற்கையாகவே பலவீனமடைந்து தேய்மானத்திற்கு உள்ளாகின்றன. வயது முதிர்வால் ஏற்படும் இத்தகைய பலவீனமான சூழலில், பார்ப்பதற்கு ஏதோ ஒரு சாதாரண லேசான தடுமாற்றம் அல்லது கீழே விழுதல் கூட, தோள்பட்டையில் ஒரு பெரிய தசைநார் கிழிவை ஏற்படுத்த போதுமானதாக அமைந்துவிடுகிறது.இது தவிர, நீரிழிவு நோய்,உயர் ரத்த அழுத்தம், புகைபிடிக்கும் பழக்கம் மற்றும் வாழ்நாள் முழுவதும் கைகளை தலைக்கு மேலே தூக்கித் தொடர்ந்து வேலை செய்யும் பழக்கம் உள்ளவர்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்படுவதற்கான இடர்வாய்ப்பு அதிகமாக இருக்கும்” என்று கூறினார்.
முதுமையில் யாருடைய உதவியும் இல்லாமல், சுயமாக வாழக்கூடிய வகையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து உதவி இருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.
-பவித்ரன்.
ஹெல்த் அண்ட் பியூட்டி.

