டாக்டர்.சிவபாலன் இளங்கோவன்
மனநல மருத்துவர்

குழந்தைகளின் அதீத ஸ்மார்ட் போன் பயன்பாடு; நிகழ்காலத்தின் பேரச்சம். சில நாட்களுக்கு முன்பு ரயில் பயணத்தில் ஒரு சிறுவனைப் பார்த்தேன். எட்டு வயது இருக்கலாம். அவனைப் பார்க்கும்போது எனது பால்ய காலத்தைக் கற்பனை செய்து கொண்டேன், சிறு வயதில் நான் இருந்ததை வைத்துப் பார்க்கும்போது அந்த சிறுவன் எனக்கு வித்தியாசமாகத் தெரிந்ததற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.
அவன் ரயிலின் ஜன்னல் சீட் வேண்டும் என அடம்பிடிக்கவில்லை. ரயிலில் வரும் வகைவகையான உணவுப் பொருட்களை வாங்கித் தரச் சொல்லி அடம்பிடிக்கவில்லை.
துறுதுறுவென இல்லாமல் அத்தனை அமைதியாக இருந்தான்.
ஒரு குழந்தை இருக்கும் கம்பார்ட்மெண்ட் என்ற எந்த அறிகுறியும் அந்த கம்பார்ட்மெண்டில் இல்லை.
தொணதொணவென அவனின் பெற்றோர்களிடமும் அவன் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.
ஏதோ ஒரு ரயில் நிலையத்தில் ரயில் நின்றபோது ஜன்னலில் வந்தமர்ந்த அழகிய பறவை ஒன்றை அவன் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
ஆறு மணி நேரப் பகல் பயணத்தில் அவன் சற்று நேரம்கூட உறங்கவில்லை.
எல்லாவற்றிற்கும் மேலாக அவன் கையில் அந்த அகலமான ஐபேட் எப்போதும் இருந்தது. அதைவிட்டு அவனது கண்கள் அகலவேயில்லை.
ஒரு குழந்தைக்கு உரிய குதூகலங்கள், சுவாரசியங்கள், சேஷ்டைகள் என எதுவும் இல்லாமல் ஒரு குழந்தை தனது கையில் உள்ள ஒரு கருவியுடன் ஆறு மணி நேரத்திற்கு மேலாக இருக்குமென்றால் அந்தக் கருவியின்மீது நாம் நிச்சயம் அச்சம்கொள்ளத்தான் வேண்டும். ஏனென்றால் குழந்தைகளிடம் இருந்த குழந்தைத்தன்மையைப் பறித்துக்கொள்ளும் எதுவும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பானதல்ல.
ஸ்மார்ட் போன்களினால் நமது குழந்தைகளுக்குக் கிடைக்கக்கூடிய பலன்களும் இருக்கின்றன. அவர்கள் எதைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமென்றாலும் உடனடியாகத் தெரிந்துகொள்ள முடியும். யாரும் மறுக்க முடியாது. ஆனால் ஒரு விஷயம் சிந்தித்துப் பாருங்கள். ‘ஸ்மார்ட் போனை உபயோகப்படுத்தும் குழந்தைகளில் எத்தனை சதவீதம் பேர் இந்தப் பலன்களுக்காக மட்டும் பயன்படுத்துகிறார்கள்?’
தொடங்கும்போது வேண்டுமானால் இந்தப் பலன்களுக்காக அவர்கள் தொடங்கலாம். ஆனால் அதோடு நிறுத்த முடியுமா? அது ஒரு பாதாளக் குழியைப்போல நமது குழந்தைகளைத் தனக்குள் இழுத்துக்கொண்டுவிடும் என்பதை நாம் உணர்ந்தே ஆக வேண்டும்.
இரண்டு வயது குழந்தைக்கு ஐபேட் கொடுத்து சாப்பாடு ஊட்டும் நிறைய பெற்றோர்களை எனக்குத் தெரியும். மிகப்பெரிய ஆபத்து ஒன்றை நம்மையும் அறியாமல் சாப்பாடோடு சேர்த்து நமது குழந்தைக்கு ஊட்டிக்கொண்டிருக்கிறோம். செல்போனில் இருந்து வெளியாகும் ரேடியோ கதிர்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சியைப் பாதிக்கின்றன என நிறைய ஆய்வுகள் சொல்கின்றன. ரேடியோ கதிர்கள் கண்ணுக்குத் தெரியாதவை என நாம் அலட்சியமாக இருக்கலாம். ஆனால் குழந்தைகளின் தன்னிச்சையான சிந்தனைத் திறன், வளர்ச்சி, பசி, தூக்கம் என அத்தனையும் இதனால் பாதித்துக் கொண்டிருக்கிறது என்பதை நாம் நேரடியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
பிற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுவதில் அவர்களுக்கு விருப்பம் இல்லை. மாறாக, பப்ஜியில்கூட்டாக விளையாடுகிறார்கள்; பள்ளியில் நெருங்கிய நண்பர் என யாரும் இல்லை. ஆனால் சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கான நண்பர்கள் இருக்கிறார்கள்: மற்றவர்களுக்கு உதவுவது, மற்றவர்களை மதிப்பது என்ற குணங்களெல்லாம் மிக அரிதாகிவிட்டன. ஆனால் முகநூலில் லைக் போடவில்லையென்று நண்பர்களுக்குள் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். உறவுகளின் மதிப்பு, கல்வியின் மதிப்பு, அறிவில் மதிப்பு, பணத்தின் மதிப்பு என எந்த மதிப்பீடுகளும் அவர்களுக்குக் தெரியவில்லை. அவர்களுக்குத் தெரிந்த மதிப்பு என்பது இன்ஸ்டாகிராமில் வரும் அங்கீகாரம் மட்டுமே.
ஒரு பிரச்சினையை எதிர்கொள்வது, அதைத் தீர்ப்பது, அதில் இருந்து கற்றுக் கொள்வது என எதிலும் முனைப்பு இல்லை, ஆன்லைன் விளையாட்டுகளும் அது சார்ந்த பிரச்சினைகளும் மட்டுமே அவர்கள் உலகத்தின் மிக முக்கியமான பிரச்சினைகளாக இருக்கின்றன. சுருக்கமாகச் சொல்லப் போனால் நாம் வாழும் உலகத்தில் அவர்கள் இல்லை. ஒரு மெய்நிகர் உலகில் அவர்கள் எந்நேரமும் இருக்கிறார்கள் அதுவும் அத்தனை தனியாக இருக்கிறார்கள். அவர்களை அதில் இருந்து மீட்டு வருவது இன்றைய காலத்துப் பெற்றோர்களின் முன்னிருக்கும் மிகப்பெரிய சவால். ஆனால் அதை இந்தப் பெற்றோர்கள் இன்னமும் உணரமாலிருப்பதுதான் துரதிஷ்டமான ஒன்று.
இந்தப் பிரச்சினை நமது கையைவிட்டுப் போய்விட்டதாக நம்பிக்கையிழக்கத் தேவையில்லை. இன்னமும் அது நமது கைகளுக்குள்தான் இருக்கிறது, கையைவிட்டுச் செல்வதற்குள் நாம் விழித்துக்கொள்ள வேண்டியது அவசியமானது. அதற்கு முதலில் நாம் செய்ய வேண்டியது, நமது ஸ்மார்ட் போன் உபயோகத்தை முறைப்படுத்துவது.
அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த ஆய்வு ஒரு கருத்தைச் சொல்கிறது “பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகமாக இருக்கும் குடும்பங்களில் குழந்தைகளும் அதில் அதிக நேரம் மூழ்கிவிடுகிறார்கள்!
குழந்தைகளின் ஸ்மார்ட் போன் பழக்கத்தை முறைப்படுத்த நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும்?
குழந்தைகளின் ஸ்மார்ட் போன் பழக்கம் என்பது நமது கட்டுபாட்டில் இருக்க வேண்டும். எவ்வளவு நேரம் உபயோகிக்கிறார்கள். எந்த வகையில் உபயோகிக்கிறார்கள் என்பதில் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க அவர்களை ஊக்குவிக்க வேண்டும் தனியறையில் இருக்கும்போதும், சாப்பிடும்போதும், தூங்கும்போதும் ஸ்மார்ட் போன் உபயோகிப்பது நிச்சயம்கூடாது.
ஸ்மார்ட் போன்கள் பற்றி. அதில் நாம் வைத்திருக்கும் செயலிகள், அதன் செயல்முறை, பதிவிறக்கம் செய்வது, சமூக வலைதளங்களின் தன்மை என அதன் செயல்பாடுகளைப் பற்றியும் நமக்கு குறைந்தபட்சத் தெளிவாவது இருக்க வேண்டும்.
குழந்தைகளுக்கென தனி ஸ்மார்ட் போன் நிச்சயமாக வாங்கித் தரக்கூடாது.
ஆன்லைன் விளையாட்டுகளில் கல்வி சார்ந்த, அறிவு சார்ந்த விளையாட்டுகள் நிறைய இருக்கின்றன. அதைத் தவிர எந்த அபாயகரமான விளையாட்டும் இருக்கக்கூடாது.
பொது இடங்களில், சமூககூடல்களில், போக்குவரத்தில் ஸ்மார்ட் போன்களை அவர்கள் உபயோகிப்பதைத் தடுக்க வேண்டும்.
எந்த எதிர்பார்ப்புகளும், போட்டி மனப்பான்மையும் இல்லாமல் மற்ற குழந்தைகளுடன் விளையாடுவதை ஊக்குவிக்க வேண்டும்.
வாழ்வின் மதிப்பீடுகள், விழுமியங்கள். நீதிகள் போன்றவற்றைக் குழந்தைகளின் மனதில் சின்னச் சின்ன செய்கைகள் மூலம் பதிய வைக்க வேண்டும்.
நமது ஸ்மார்ட்போன் உபயோகத்தைக் குறைத்து அவர்களுக்கு முன்மாதிரியாக நடந்துகொள்ள வேண்டும்.
இணையத்தின் வருகைக்குப் பிறகு நமது வாழ்க்கையின் முகம் மாறியிருக்கிறது. ஒரு மனிதனின் நல்லியல்புகள் மீதான நிர்ப்பந்தங்கள் குறைந்திருக்கின்றன. அதன் விளைவுகளின் நேரடிப் பாதிப்பை தமது குழந்தைகளின் மாறிவரும் சிந்தனைப்போக்கின் வழியாக நாம் நேரடியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஸ்மார்ட் போன்கள் பலவகைகளில் ஒரு மாபெரும் தாக்கத்தை நமது குழந்தைகளின் வாழ்வில் ஏற்படுத்தினாலும் அதன் முக்கியமான அபாயமான சக மனிதர்களுடன் உறவாடல் அற்ற நிலையையே அதாவது சமூக ஒருங்கிணைப்பு (Socialization) குறைந்து போனதையே பார்க்கிறேன்.
மனிதனின் அடிப்படைப் பண்பே இந்த சமூக ஒருங்கிணைப்பு தானே? அதற்கே பாதிப்பு வந்தால் பரிணாமத்தில் நாம் அடைந்த அத்தனை வளர்ச்சியையும் இழந்துவிட மாட்டோமா என்ற அச்சம் எனக்குள் வருகிறது. அப்படி நடந்துவிடாமல் பாதுகாக்கும் பொறுப்பு சிவில் சமூகத்தின் விழுமியங்களின்மீதும், மதிப்பீடுகளின் மீதும் நம்பிக்கை கொண்டிருக்கும் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

