
டாக்டர் கு.கணேசன்.பொதுநல மருத்துவர்
‘தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் போகவேண்டியதில்லை’ என்று ஆங்கிலேயரின் ஆட்சியிலிருந்தே குழந்தைகளுக்குச் சொல்லத்தொடங்கி விட்டோம்.
உலக அளவில் பார்த்தோமானால், ஆப்பிள் நல்ல குளிர்ச்சியுள்ள பிரதேசங்களில் மட்டுமே விளையக்கூடியது. இந்தியாவில் காஷ்மீர், குளுமனாலி, நீலகிரி, ஊட்டி, கொடைக்கானல், பெங்களூரூ போன்ற மலைப் பிரதேசங்களிலும் குளிர்ப் பிரதேசங்களிலும் நன்கு விளைகிறது. ஆப்பிளில் பல வகைகள் உள்ளன. பழத்தின் நிறத்திலும் அளவிலும் ருசியிலும் இவை வேறுபடுகின்றன. விலையிலும்தான். மற்ற பழங்களைவிட ஆப்பிள் பழங்களைக் குளிர்சாதனப்பெட்டியில் பல மாதங்களுக்குப் பாதுகாத்துக்கொள்ளலாம் என்பது இதன் சிறப்பம்சம்.
அமெரிக்காவில்தான் ஆப்பிள் விளைச்சல் அதிகம். நம் ஊரில் விளையும் மாம்பழத்தோடும் பப்பாளியோடும் ஒப்பிட்டோமானால், ஆப்பிளின் மகிமை குறைந்துவிடும். மாம்பழத்திலும் பப்பாளியிலும் வைட்டமின் – ஏ மற்றும் சி சத்துகள் அதிகம். ஆனால், இந்த இரண்டும் ஆப்பிளில்
இல்லை. இதேபோல் 100 கிராம் நெல்லிக்காயில் 600 மி. கிராம் வைட்டமின் – சி உள்ளது. அதேசமயம் 100 கிராம் ஆப்பிளில் 2 மில்லி கிராமுக்கும் குறைவாகவே வைட்டமின் – சி உள்ளது. ஒரு வாழைப்பழத்தில் 7 மி.கி. வைட்டமின் – சி உள்ளது. 100 கிராம் ஆப்பிளில் உள்ள இரும்புச் சத்து 1 மிகி.தான். அதேசமயம் 100 கிராம் தர்பூசணியில் இதன் அளவு அதிகம்.
ஆப்பிளில் கால்சியமும் பாஸ்பரஸும் அதிகம். ஆனால், ஆப்பிளைவிட விலை மலிவான சீத்தாப்பழத்திலும் சப்போட்டாவிலும் இவை இதைவிட அதிகம். ஒரு கொய்யாப்பழத்தில் உள்ள கால்சியம்தான் ஒரு ஆப்பிளில் உள்ளது. எனவே, நம் ஆரோக்கியம் காக்க அதிக விலைக்கு விற்கப்படும் ஆப்பிள்தான் சாப்பிட வேண்டும் என்பது இல்லை. உள்ளூரில் விளைகின்ற வாழைப்பழம், சப்போட்டா, கொய்யா போன்ற நாட்டுப் பழங்களே போதும்.
ஆப்பிளில் நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கலுக்கு நல்லதொரு மருந்து. இது குடல் புற்றுநோயைத் தடுக்கிறது. ‘தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் போகவேண்டியதில்லை’ என்று சொல்வது ஆங்கிலேயர்களுக்குச் சரி. காரணம், அவர்கள் உணவில் நார்ச்சத்து மிகவும் குறைவாக இருக்கும். அந்தக் குறையைப் போக்க அவர்கள் தினமும் ஆப்பிள் சாப்பிடுவது பொருத்தம்.
நிறம் மாறிய ஆப்பிள்களில் வைட்டமின் சி கரைந்துவிடும். எனவே, அவற்றைச் சாப்பிட வேண்டாம். ‘கவுட்’ (Gout) போன்ற மூட்டழற்சி நோயுள்ளவர்களுக்கு ஆப்பிள் நல்ல நிவாரணம் தருகிறது.யூரிக் அமிலம் ரத்தத்தில் அதிகமாவதால் இந்த நோய் வருகிறது. ஆப்பிளில் மாலிக் அமிலம் உள்ளது.இது ரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தைச் சமநிலைப்படுத்துவதால், கவுட் நோய் கட்டுப்படுகிறது; மூட்டில் வலி குறைகிறது.வைரஸ் நோய்களுக்கு எதிரானது ஆப்பிள். எனவே, அம்மை நோயாளிகளுக்கு இது நல்லதோர் உணவு.
ஆப்பிளில் உள்ள முக்கியமான சத்துப் பொருள், பெக்டின் (pectin). இது ஆப்பிள் பழத்தோலில் இருக்கிறது. இது உடலில் உள்ள நச்சுப்பொருள்களை நீக்க உதவுகிறது; செரிமானத்துக்குப் பெரிதும் துணைபோகிறது.இது ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது; கெட்ட கொலஸ்டிராலைக் குறைத்து நல்ல கொலஸ்டிராலை அதிகப்படுத்துகிறது. இதன் பலனால், இதயத்துக்கு நன்மை செய்கிறது.
ஆப்பிளில் கலோரி சக்தி குறைவு என்பதால் உடற்பருமன் உள்ளவர்களுக்கும் இது ஏற்றது.நீரிழிவு நோயாளிகள் தினமும் அரை ஆப்பிள் சாப்பிடலாம்.எனவேதான் வீட்டிலோ, மருத்துவமனையிலோ நோய்வாய்ப்பட்டவர்களைப் பார்க்கச் செல்லும்போது பெரும்பாலானோர் ஆப்பிள் பழங்களை வாங்கிச் செல்கின்றனர்.
ஆப்பிளைத் தோலோடு சாப்பிட்டால்தான் இத்தனை நன்மைகளும் கிடைக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.அதேசமயம் இப்போது ஆப்பிள் பழங்களை வெளிநாடுகளிலிருந்தும் வெளிமாநிலங்களிலிருந்தும் விற்பனைக்குக் கொண்டுவரும்போது, அழுகாமல் பாதுகாப்பதற்காக அவற்றின் மீது மெழுகு பூசப்படுகிறது.இது ஆரோக்கியத்துக்குக் கெடுதல் செய்யும். எனவே, ஆப்பிளை நன்கு கழுவிச் சுத்தப்படுத்திய பிறகே சாப்பிட வேண்டும்.

