
-டாக்டர் எம்.ஜெயராஜா பேட்டி.
இதயம் மனித உடலின் உயிர் நாடி.இதன் துடிப்பே மனித வாழ்க்கையின் இயக்கம்.கொரோனா காலத்தில் அவசர அவசரமாக போடப்பட்ட தடுப்பூசி பற்றிய அச்சம் அதிகரித்து உள்ளது. தடுப்பு ஊசியால் மாரடைப்பு அதிகம் ஆகிவிட்டதாகவும் பேசப்படுகிறது. சென்னையில் சாலிகிராமம் பகுதியில் உள்ள சூரியா மருத்துவமனையில்,இதய நோய் சிகிச்சையில் நாற்பதாண்டு கால அனுபவம் வாய்ந்த டாக்டர் ஜெயராஜாவை,
ஹெல்த் அண்ட் பியூட்டி இதழ் சார்பாக சந்தித்து பேசினோம்.
*சமீபகாலமாக இளம் வயதில் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியை அடிக்கடி கேள்விப்படுகிறோம்.இதற்குக் காரணம் என்ன டாக்டர்?
நம் நாட்டில் இதய நோய்களுக்கு உடல் ரீதியான காரணங்களை விட மனரீதியான காரணங்கள் தான் அதிகம்.இப்போது எதற்கெடுத்தாலும் “ஸ்ட்ரெஸ்” என்கிற மன அழுத்தம் வருகிறது. எங்கேயும் எப்போதும் பரபரப்பு, கோபம் என்கிற கொடிய மனநிலையில் இருக்கிறார்கள்.யாரும் சிரிப்பதில்லை,ஜாலியாக இருப்பதில்லை.இது தான் முக்கியமான காரணம்.
வாழ்க்கை முறை மாறிவிட்டது.பணத்தைத் துரத்திக் கொண்டு ஓடுகிறார்கள்.சக மனிதர்களிடம் அன்பாக இருப்பதில்லை .சக மனிதர்களை மதிப்பதில்லை.மற்றவர்கள் மீது மரியாதை கிடையாது, அன்பும் கிடையாது.இருப்பது போதும் என்கிற மனநிறைவும் கிடையாது.பேராசைக்கு இடம் கொடுத்து விடுகிறார்கள்.அதனால் மன அழுத்தம் வருவதற்கான சூழ்நிலைகள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன.எனது 40 ஆண்டுகால அனுபவத்தில் நான் கண்ட உண்மை இது.
*இப்போது வரும் இளம் வயது மாரடைப்புகளுக்கும் கோவிட் தடுப்பு ஊசிக்கும் முடிச்சு போடப்படுவது பற்றி…?
கோவிட் தடுப்பு ஊசி மூலம் இந்தியாவில் 175 கோடி டோஸ் கொடுக்கப்பட்டு,2 கோடி பேரின் உயிர் காப்பாற்றப்பட்டது என்பது சாதாரண காரியமல்ல. ஆபத்து விலகி விட்டது என்பதால்,புரிதல் இல்லாமல் இப்போது பேசுவது தவறாகும்.
வேக்சின்கள், உயிராபத்து நிறைந்த அவசரகால நெருக்கடியில் தயாரிக்கப்பட்டன.
இதற்கான பக்க விளைவுகள் என்பது, லட்சத்தில் ஒருவருக்கு என்ற நிலையில்தான் இருந்தது.
*சமீபத்திய உணவுப் பழக்கம் எந்த வகையில் இதய நலனில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது?
உணவுப் பழக்கத்தை எடுத்துக் கொண்டால் “fast food” எனப்படும் துரித உணவுக் கலாச்சாரத்துக்கு சென்று விட்டோம்.மக்கள் நிறைய ரெஸ்டாரண்ட் ,ஹோட்டலில் வரவழைத்து சாப்பிடுவதற்குப் பழகிவிட்டார்கள்.
பீட்ஸா, பர்கர் கலாச்சாரம் வந்துவிட்டது.நம் நாட்டுப் பொருளாதாரம் உயர்ந்துவிட்டது.கல்வி வளர்ந்து வேலை வாய்ப்பு பெருகி, வாழ்க்கைத்தரம் மேம்பட்டு உள்ளது.அதனால் மக்களிடம் வாங்கும் சக்தி அதிகரித்துள்ளது. அதனால் “ஹோட்டலில் வாங்கிச் சாப்பிட்டால் தான் என்ன?”என்று தோன்றுகிறது;வாங்கிச் சாப்பிடுகிறார்கள்.உடல் நலத்தைக் கோட்டை விடுகிறார்கள்.
போனில் ஆர்டர் கொடுத்து வீட்டில் வரவழைத்து சாப்பிடுவதால் இப்போது உடல் பருமன் பிரச்சினை அதிகரித்து வருகிறது. சின்னக் குழந்தைகளுக்குக் கூட உடல் பருமன் வந்து விடுகிறது.அதிக எடை, கொலஸ்ட்ரால் பிரச்சினை வருகிறது. 9 வயதுக் குழந்தைக்குக் கூட அதிகக் கொலஸ்ட்ரால் இருக்கிறது;
ரத்த அழுத்தம் இருக்கிறது. இவையெல்லாம் ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரத்தின் விளைவுகள்.
சர்க்கரை நோய் நம் நாட்டில் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அதன் வரைபடம் மேல்நோக்கிச் சென்று கொண்டே இருக்கிறது.சர்க்கரை வியாதிக்கு முந்தைய நிலையை ‘ப்ரீ டயாபட்டிக் ஸ்டேஜ்’ என்பார்கள். அந்த நிலையிலேயே பலருக்கும் கொலஸ்ட்ரால் வர ஆரம்பித்து விடுகிறது. பல நோய்கள் வருகின்றன.
இப்படிச் சர்க்கரை நோய் அதிகரிப்பது , கொலஸ்ட்ரால்,ரத்த அழுத்தம் அதிகரிப்பது இதய நலத்திற்குப் பாதிப்பாக மாறுகிறது. புகைப்பிடிப்பது இதயப் பாதிப்புக்கான இன்னொரு காரணம்.நல்வாய்ப்பாக இப்போது புகைபிடிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது.புகை பிடிப்பதும் இதயத்தில் தாக்கத்தை பெரிய அளவில் ஏற்படுத்துகிறது.
*எண்ணெய், நெய் போன்றவை நமது பாரம்பரிய உணவு அல்லவா? இதயத்திற்கு எண்ணெய் எந்த அளவிற்குப் பாதுகாப்பானது? எந்த அளவிற்கு ஆபத்தானது?
அடர்த்தி அதிகமான எண்ணெய் அதாவது Saturated fat உள்ள எண்ணெய் ரத்தத்தில் கொழுப்புச் சத்தை – கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் . பொதுவாகப் பார்த்தால் குளிர்காலத்தில் வெளியே வைக்கும் போது உறைந்து போகிற மாதிரியான எண்ணெய்களில் கொழுப்புச் சத்து அதிகம் இருக்கும்.உதாரணமாக தேங்காய் எண்ணெய், பாமாயில், நெய் போன்றவற்றைச் சொல்லலாம். இதிலெல்லாம் அடர்த்தியான கொழுப்பு உள்ளது. அதேபோல் ஃபாஸ்ட் ஃபுட் தயாரிக்கும் போது பயன்படுத்திய எண்ணெயையே மீண்டும் பயன்படுத்துவதால் அதிலும் கொழுப்பு சத்து அதிகமாக மாறுகிறது.
அடர்த்தி குறைவான எண்ணெய் Un saturated fat வகையைச் சேர்ந்தது என்பார்கள்.அதற்கு முக்கிய உதாரணமாக நல்லெண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் மூன்றையும் சொல்வார்கள்.இவை எல்லாம் அடர்த்தி குறைவான ரகம். கொழுப்புச் சத்தைக் கூட்டாது. இவை ரத்தத்தின் கொழுப்பைக் குறைப்பதற்குக் கூட வாய்ப்பு உண்டு. பொதுவாக ஒரே எண்ணெயைய் பயன்படுத்தாமல் இந்த மூன்று எண்ணெயை மாற்றி மாற்றிப் பயன்படுத்துவது நல்லது. வெண்ணெய் , நெய், சீஸ் என்படும் பாலாடைக் கட்டி போன்றவற்றை அளவோடு பயன்படுத்த வேண்டும்.அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும் போது கொழுப்பு அதிகமாகும்.
*மது அருந்துவது எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறது?
மது இதயத்தில் நேரடியாகத் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை என்றாலும்,இதய பாதிப்பிற்கான பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது.இதய நலத்தைக் கெடுக்கும் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது; சர்க்கரை அளவைக் கூட்டுகிறது.
மதுவை யாரும் தனியாக வெறுமனே அருந்துவதில்லை. துணைக்கு நல்ல உணவை வைத்துக் கொண்டு, அதுவும் ரிச் ஃபுட்டாக வைத்துக் கொண்டு சாப்பிடுகிறார்கள். அதனால் கொலஸ்ட்ரால் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.மதுப்பழக்கம் கல்லீரலை சேதப்படுத்துகிறது.
*கவலைகளை மறக்க குடிக்கிறார்கள்.மது அருந்துபவர்களுக்கு மன அழுத்தம் குறைகிறது என்கிற கருத்து உள்ளதே?
ஆரம்ப கட்டத்தில் அப்படித் தோன்றும்.மது அருந்தும் போது ஆரம்பத்தில் வருகிற உற்சாகம் கடைசி வரை இருப்பதில்லை. மதுப்பழக்கம் உற்சாகத்தில் ஆரம்பித்து சோகத்தில், சோர்வில் முடிவடைகிறது. மது பாலுறவு ஆசையைத் தூண்டுகிறது,ஆனால் செயல்திறனைக் குறைத்து விடுகிறது என்பார்கள். “It increases the desire, but reduces the performance” . ஒவ்வொரு முறை மது அருந்தும் போதும் ஆரம்பத்தில் இரண்டு மூன்று மணி நேரம் உற்சாகமாகத் தோன்றும்.பிறகு அது வடிந்து போய் சோர்வாக மாறி ஏமாற்றமாகி விடுகிறது.
*முன்பை விட மருத்துவ அறிவியல் வளர்ந்த பிறகும்,நோயாளிகள் பெருகுகிறார்களே?இந்த முரண்பாட்டிற்கு என்ன காரணம்?
அந்தக் காலம் போல இந்தக் காலம் இல்லை என்று எப்போதும் சொல்லப்படுகிறது. அந்தக் காலத்து மக்களின் வாழ்க்கை முறை வேறு. அவர்களின் உணவுப்பழக்கம் வேறு. இப்போது எவ்வளவோ மாற்றங்கள் வந்துவிட்டன.இந்தக் காலமாற்றத்தை யாரும் எண்ணிப் பார்ப்பதில்லை.அன்று உணவு உண்டது போல் இன்று உண்கிறார்களா? துரித உணவுக் கலாச்சாரம் எந்த அளவிற்குப் பரவியுள்ளது என்பதை ஆராய்ந்து பார்த்தால் உண்மை புரியும்.
அன்றிருந்த உடல் உழைப்பு இன்று இருக்கிறதா? யாருக்காவது வியர்க்கிறதா? வியர்வை வெளிப்பட யாராவது வேலை செய்கிறார்களா? உடல் உழைப்பு இல்லாமல் இருப்பதை வசதியாகவும் சௌகரியமாகவும் இருப்பதாக நினைக்கிறார்கள்.சும்மா இருப்பது சோம்பலாகும். அது நோயாக மாறும். செயலின்மை என்பது ஆரோக்கியம் அல்ல.அன்றைக்கு மனிதர்கள் ஒருவரை ஒருவர் மதித்ததும் அன்பு காட்டியதும் மரியாதை செலுத்தியதும் இன்று உள்ளதா? எனவே வாழ்க்கை முறையும் மனப்போக்கும் மாறிவிட்டது என்பதை உணர வேண்டும்.இப்படி இந்தக் காலத்தில் உடல்நிலையும் மனநிலையும் மாறிவிட்டதால் இதய நோய்கள் வருவதற்கான சாத்தியங்களும் அதிகரித்து விட்டன. உட்கார்ந்த இடத்தில் அமர்ந்து மணிக்கணக்காக வேலை செய்வது,புகைபிடிப்பதை விட இதயத்துக்குத் தீமையானது.
*இதயப் பாதிப்பில் சர்க்கரை நோய் எவ்விதம் தாக்கம் செலுத்துகிறது?
சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லையென்றால், அது பல நோய்களுக்கு வாசல்களைத் திறந்து விடுகிறது.எனவே அவர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.சர்க்கரை நோயாளிகளுக்கு கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம்.
*இதயத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் உணவுப் பழக்கம் எது ?
இதயத்தைக் காப்பாற்ற காய்கறிகள், பழங்கள் நிறைய சேர்த்துக் கொள்ளலாம். நார்ச்சத்துள்ள உணவுகள் நல்லது.அசைவ உணவைப் பொறுத்தவரை ‘ரெட் மீட்’ என்று சொல்லப்படும்ஆட்டுக்கறி, மாட்டுக்கறி ,பன்றிக் கறி போன்றவற்றையும், முட்டையின் மஞ்சள் கருவையும் முடிந்த அளவு தவிர்க்க வேண்டும்.இவற்றில் கொழுப்பு அதிகம்.
“லீன் மீட்” எனப்படும் கோழி, மீன் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம்.இவற்றில் கொழுப்பு குறைவாக இருக்கும்.உப்பைக் கூடுமானவரை குறைத்துக் கொள்ள வேண்டும். இதயத்திற்குப் பாதுகாப்பான உணவாக
தயிர் எடுத்துக் கொள்வது நல்லது என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன.
*இதயப் பாதுகாப்புக்கான உடற்பயிற்சிகள் பற்றி சொல்லுங்கள் டாக்டர்?
தினமும் அரை மணி நேரம் முதல் முக்கால் மணி நேரம் வரை நடந்தாலே போதும். நடப்பதைப் பொறுத்தவரை எவ்வளவு தூரம் நடக்கிறோம் என்பதை விட ,எவ்வளவு நேரம் நடக்கிறோம் என்பது முக்கியம்.வேகமாக கூட நடக்க வேண்டியதில்லை, சீராக ,மிதமான வேகத்தில் நடந்தால் கூட போதும்.
*நடைப்பயிற்சி மூலம் உடலுக்குக் கிடைப்பது என்ன?
நடக்கும்போது இதயத் தசைகள் நன்கு சுருங்கி விரிகின்றன.துடிப்புகள் வேகமாக இருக்கின்றன.அது இதயத்திற்கு நல்ல பயிற்சியாக அமைகிறது. உடல் முழுக்க இரத்த ஓட்டத்தைச் செலுத்துகிறது.ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது, ரத்தத்தில் உள்ள சர்க்கரையைக் குறைக்கிறது.
நடைப்பயிற்சி மன அழுத்தத்தைக் குறைக்கிறது. உடல் எடையையும் கட்டுப்பாட்டில் வைக்கிறது.
பொதுவாகவே தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்கள் நீண்ட நாட்கள் உடல், மற்றும் மனநலத்தோடு இருக்கிறார்கள். உடற்பயிற்சியின் பின் விளைவாகத் தசைகள் பலமடைகின்றன.வீணான கொழுப்பு குறைகிறது. அந்தத் தசைகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை எளிதாக எடுத்துக் கொள்ளும். இந்த தசைகள் உடலுக்கு ஒரு பாதுகாப்புக் கவசம் போல் மாறுகின்றன. இது “மஸில் மாஸ்” எனப்படும். தசைகள் மூலம் உடலின் ஆற்றல் அதிகமாகிறது. அது சர்க்கரை நோயை எளிதில் வரவிடாது.
*அசைவம் அதிகம் உண்ணும் பிறநாட்டினரைவிட, நம் நாட்டில் இதயப் பாதிப்பு பெருகுவதன் காரணம் என்ன?
பொதுவாகவே பரம்பரையாக, மரபணுக்கோளாறுகளால் , தெற்காசிய நாடுகளில்
ஹார்ட் அட்டாக் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். மேலை நாடுகளோடு நம்மை ஒப்பிட்டால் அவர்களை விட நமக்கு மன அழுத்தத்திற்கான காரணிகள் அதிகம். எதிலும் திருப்தியடையாமல் பணம் சேர்ப்பது, பேராசை கொள்வது என்கிற நிலை இங்கு உள்ளது. “ஒரு பிளாட் இருந்தால் போதும்” என்று நினைப்பதில்லை, இன்னும் சில வீடுகள் வாங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.இப்படிப்பட்ட பேராசைகளைத் தவிர்ப்பது இதயத்திற்கு நல்லது.
அது மட்டுமல்ல இசை, யோகா, கலை ஈடுபாடு உள்ளவர்களுக்கு மன அழுத்தம் வருவதில்லை. அதில் எல்லாம் உற்சாகமாக ஈடுபடலாம்.அப்படி ஈடுபடும் போது மனம் புத்துணர்ச்சி பெறுகிறது, மன இறுக்கம் இருந்தால் தளர்ந்து நீங்குகிறது. இதயம் காக்கும் பஞ்சதந்திரம் என்று மருத்துவர்களால் கூறப்படுவது என்னவென்றால் அளவான உப்புடன் சத்தான உணவு, உயரத்திற்கு ஏற்ற எடை,மது புகைக்குத் தடை, சுறுசுறுப்பான உடல் இயக்கம் மகிழ்ச்சியான உள்ளம், இவை போதும் இதயம் நலமாகும்.
*இதய நோய் அபாயம் உள்ள இக்காலச் சூழலில் நம்பிக்கை தரும் அறிவியல் முன்னேற்றம், கண்டு பிடிப்புகள் என்ன?
பலூன் ஆஞ்சியோபிளாஸ்டி, மற்றும் “ஸ்டென்ட்” சிகிச்சை வந்துள்ளது.அதே போல பைபாஸ் சர்ஜரியிலும் நல்ல முன்னேற்றங்கள் வந்து உள்ளன.இதய மாற்று சிகிச்சை பற்றிய ஆராய்ச்சிகள் வளர்ச்சி அடைந்து கொண்டு நல்ல திசையில் சென்று கொண்டிருக்கின்றன. இதயமாற்றுக்கு “டோனர்” எனப்படும் கொடையாளர்கள் தான் கிடைப்பதில்லை. இதயமாற்றைப் பொறுத்தவரை “இதய தானம் செய்பவர்கள் கிடைப்பதில்லை” என்பதுதான் சிக்கலாக உள்ளது.
சந்திப்பு:அருள்செல்வன்.

