-பேராசிரியர் சாரா மாணிக்கராஜ், மாநிலக் கல்லூரி, சென்னை

டீன் ஏஜ் இளைஞர்களின் முதன்மையான பண்பு, மற்றவர்களின் கவனத்தையும், அங்கீகாரத்தையும் கோருவது.அதிலும் குறிப்பாக எதிர்பாலினத்தினவரின் கவனத்தை ஈட்டும் நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக ஈடுபடுவது.இந்தப் பருவத்தின் அத்தனை செயல் களிலும் இந்தப் பண்பே பிரதானமாக இருக்கும். வித்தியாசமான சிகையலங்காரம் செய்வது முதல் மிகவும் வேகமாக பைக் ஒட்டுவது வரை பிறரின் கவனம் உடனடியாகக் கிடைக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபடுவார்கள்.சமூக வலைத்தளங்களின் வரவிற்குப் பிறகு அதில் கிடைக்கும் லைக்குகளுக்காகப் பல்வேறு வித்தியாச மான, விபரீதமானநடவடிக்கைகளில் ஈடுபடும் தூண்டுதல் இருந்து கொண்டேயிருக்கும். அது அவர்களது சமூக வலைத்தளக் கணக்குகளில் தொடர்ச்சியாக வெளிப்படும்.சமூக வலைத் தளங்களில் மற்றவர்களின் கவனத்திற்காக மிகைப்படுத்தப்பட்ட அடையாளங்களையெல்லாம் நிஜமான அடையாளங்களென நம்பும் ஆபத்து இந்தக் காலத்தில் உருவாகியிருக்கிறது. வளரிளம் பருவத்தின் அடையாளச் சிக்கல்களுக்கு இதுவும் ஒரு காரணமாகயிருக்கிறது.

இந்தப் பருவத்தின் ஹார்மோன்களினால் உண்டாகக்கூடிய இந்த மிதமிஞ்சிய ஆற்றலை நேர்மறையான செயல்களில் திருப்பிவிட்டால் அதை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக்கொள்ள முடியும். சிறுவயதிலிருந்தே ஏதேனும் ஒரு விளையாட்டினிலோ அல்லது வேறு ஏதாவது ஒன்றில் இருக்கக்கூடிய தனித்துவமான திறன்களில் இந்த ஆற்றலைப் பயன்படுத்திக்கொண்டால் அதில் அவர்களை வெற்றி கரமானவர்களாக மாற்றமுடியும். ஆக்கப்பூர்வமான செயல்களுக்காக நிதானமாக கிடைக்கும் பிறரின் கவனங்களும், அங்கீகாரங்களுமே ஆரோக்கியமானது என்பதை அவர்களுக்குப் பெற்றோர்கள் உணர்த்த வேண்டும்.

டீன் ஏஜ் பிள்ளைகளை எதற்கும் உதவாத வர்கள் என்று மனம் நொந்து வேதனைப்பட வேண்டாம்.அவர்களை நல்வழிப்படுத்த முனைந்தால் சாதனையாளர்களாக மாறுவார்கள்.

-பேராசிரியர் சாரா மாணிக்கராஜ், மாநிலக் கல்லூரி, சென்னை