ஆரோக்கிய வாழ்விற்கு தினம் ஒரு மூலிகை-5

முனைவர் மா.ஆ.தீபா, M.Sc,M.Phil,Ph.D. உதவிப் பேராசிரியர், தாவரவியல் துறை, அரசு கலைக் கல்லூரி, கோயம்புத்தூர்.

ருத்துவம்,சிகிச்சை என்றாலே உயிரை காக்கும் என்ற நம்பிக்கையை பெற்ற ஒரு சொல்லாகும். அதிலும் மூலிகை மருத்துவம் என்ற சொல் எவ்வித பக்க விளைவுகளும் இன்றி நம் உயிரை காக்கும் என்று மக்களின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தும் என்பது உண்மையே. இருப்பினும், ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு ஊரிலும் சில பெயர்கள் பல மூலிகைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது அல்லது சில மூலிகைகள் பல பெயர்களால் அறியப்படுகிறது. இதன் காரணமாகவே பல சமயங்களில் மருத்துவ மூலிகை என நினைத்து வேறு சில மூலிகைகளை உட்கொள்வதால் பக்க விளைவுகள் மட்டுமின்றி உயிருக்கே கூட ஆபத்தாக முடிகிறது. அத்தகைய ஒரு மூலிகையைப் பற்றியே இந்த மாதம் நாம் பார்க்க இருக்கிறோம்.

வேம்பு,மலை வேம்பு, காட்டு வேம்பு,மலபார் வேம்பு என பல வகையான வேம்பு மூலிகைகளை நாம் அறிவோம்.நம் நாட்டில் மலை வேம்பு என்னும் பெயரில் அறியப்படும் இரு வேறு மரங்கள் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும். சரியான மலைவேம்பு என்பது Melia dubia, என்ற தாவரவியல் பெயரைக் கொண்டது. இத்தாவரத்திற்கு பல்வேறு மருத்துவ குணங்கள் உண்டு. இது மீலியேசி குடும்பத்தை சார்ந்ததாகும். மிக வேகமாக வளரக்கூடியது. இருபதிலிருந்து 25 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது.கரும் பச்சை நிறத்திலான இறகு கூட்டு இலைகளை கொண்ட இந்த மரம் பச்சை-மஞ்சள் பூக்களுடன் காணப்படும். மரத்தின் இலைகளும் காய்களும் மென்மையான மணம் உடையவை. இலைகள், இருசிறகுக் குறுக்கு அல்லது முக்கூட்டு இலைகளாக,அடர் பச்சை நிறத்தில், மாற்று அடு அடுக்கில் இருக்கும்.

நாட்டுப்புற மருத்துவத்திலும் மூலிகை மருத்துவத்தின் பல முறைகளிலும் இம்மரத்தின் காயானது தோல் வியாதிகளை குணமாக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. வயிற்றில் ஏற்படும் பூச்சி தொல்லைகளையும், சர்க்கரை நோயையும், வீக்கங்களையும் குணமாக்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. புற்று நோய் கட்டிகளிலிருந்து காத்துக் கொள்ளவும் இம்மரத்தின் இலைகளும், காய்களும் அதிக அளவில் பயன்படுகிறது.

 

மிக முக்கியமான பண்பாக நோய் தாக்கும் வைரஸுகளை எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும் பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியா நோய்களிலிருந்து மனிதர்களை காக்கவும் பல்வேறு மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சில பாரம்பரிய மருத்துவ முறைகளில் தொழு நோய்க்கு மருந்தாகவும் ஆஸ்துமா, மலேரியா காய்ச்சல் போன்ற நோய்களுக்கும் இம்மரத்தின் இலைகளும் காய்களும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்ஃப்ளமேசன் என சொல்லப்படும் வீக்கம் சிராய்ப்புகளை குணப்படுத்த இலையை அரைத்து பயன்படுத்துகின்றனர். மிக முக்கியமாக பல்வேறு இனக் குழுக்களில் பாலிசிஸ்டிக் ஒவேரியன் சின்ரோம் மற்றும் மலட்டுத்தன்மையை போக்கவும் இதன் இலைகளின் சாறு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் இலைகள் குழந்தையின்மைக்கான தீர்வாக வட்டார மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வட்டார வழக்கில் மீலியா ஆசாடிராக் என்னும் தாவரமும் மலைவேம்பு என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறது. இதற்கும் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளது. இருப்பினும், உயிர் காக்கும் என்று எண்ணி அல்லது ஒரு உயிரை உருவாக்க தேவையான மருந்தாக குழந்தை இன்மை சிகிச்சையில் பச்சை இலையாக அரைத்து உட்கொள்ளப்படுகிறபோது, பச்சை-மஞ்சள் பூக்கள் தாங்கி நிற்கும் மீலியா துபியா என்ற மூலிகைக்கு பதிலாக, லாவண்டர் அல்லது இளம் சிவப்பு நிற பூக்களை தாங்கி நிற்கும் மீலியா ஆசாடிராக்கின் இலைகள் அதிக அளவில் உட்கொள்ளப்பட்டால் கொடிய விஷத்தன்மை கொண்டதாக அமைகிறது. இதன் இலைகளும் காய்களும் வலுவான, பெரும்பாலும் விரும்பத்தகாத வாசனையைக் கொண்டுள்ளன. இவை உயிரை போக்க வல்லதாக இருக்கிறது. இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.

கால்நடைகளுக்கு மிகவும் அச்சுறுத்தலாக அமையும் இம்மரங்கள் பல்வேறு நாடுகளிலும் கால்நடைகளின் உயிரை போக்குவதாகவும் சில நேரங்களில் தாய்மை அடைய உதவும் என நம்பி அருந்தும், பெண்களின் உயிரை போக்கியுள்ளதாக தகவல்கள் அறிவியல் ரீதியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே,மலைவேம்பு என நாம் மருந்துக்காக எடுக்கும் போது பூக்களின் நிறங்களைக் கொண்டு வேறுபடுத்தி பச்சை மஞ்சள் நிறம் தாங்கிய மீலியா துபியா என்ற தாவரத்தின் இலைகளையே பயன்படுத்த வேண்டும். லாவண்டர் நிற பூக்களைக் கொண்ட மீலியா ஆசாடிராக் இலைகள் மற்றும் காய்களை மருத்துவ மேற்பார்வையின்றியோ மிக அதிக அளவிலோ பயன்படுத்தாமல் இருப்பதே நம் ஆரோக்கியத்திற்கு நலம். பூக்களின் நிறம் மட்டுமின்றி, மீலியா அசாடிராக்கன் இலைகளின் தன்மையான, இருசிறகு அமைப்பு, பற்கள் கொண்ட சிற்றிலைகள், மற்றும் வேம்பை மிகவும் ஒத்தவை இருக்கும் தன்மையை கொண்டும் வேறுபாடுகளை அறியலாம்.

அளவு கூடும் போது, விஷத்தன்மை கொண்டு உயிரைப் போக்கும் தன்மை கொண்ட மீலியா அசாடிராக்கை சரியான விதத்தில் கண்டறிய நாம் கற்றுக்கொள்ள வேண்டும். மேலும் பல மருத்துவ நன்மைகள் இருந்தாலும் அதை உட்கொள்வது என்பது சரியான மருத்துவ கண்காணிப்பின் பேரிலேயே இருக்க வேண்டும். எத்தகைய பயனைத் தரும் மூலிகையானாலும் அதனை சரியான விதத்தில் கண்டறிந்து, சரியான விகிதத்தில் மற்றும் அளவில் உட்கொண்டு நன்மை பெறுவோம்