
டாக்டர் .ஹரீஷ்குமார், பிசியோதெரபிஸ்ட்
உட்காருவதற்கு யாராவது சொல்லித்தர வேண்டுமா? என்று யோசிக்கலாம்.ஆனால் தவறான முறையில் உட்காருவதால் பல்வேறு பிரச்சனைகள் வருகின்றன.
‘சார்…. வாங்க உட்காருங்க’ என்று சிலரை அழைத்து நாம் கூறும்போது, அவர்கள் அதற்கு ‘பரவாயில்லை சார். நான் இப்படியே நிற்கிறேன்’ என்று கூறுவதை நம்மில் பலரும் கண்டிருப்போம். அப்படி கூறுபவர்களுக்கு முதுகு வலியோ, மூட்டு வலியோ, கழுத்து வலியோ, இடுப்பு வலியோ இருக்கக் கூடும். அதனால்தான் அவர் அப்படி கூறுகின்றார் என்றே சொல்லலாம். சரி உட்காரும் முறைகளைப் பார்க்கலாமா?
உட்காரும்போது நேராக உட்கார வேண்டும். சாய்ந்தோ, நெளிந்தோ, குனிந்தோ உட்காரக் கூடாது.
எப்போதும் நாற்காலியில் உட்காரும்போது முதுகுப் பகுதி
நன்குபதியும்படி உட்கார வேண்டும்.
முதுகு நன்கு பதியும்படி உட்கார முடியாத சூழல் ஏற்பட்டால், முடிந்தவரை நேராக உட்கார முயற்சி செய்யுங்கள்.
நாற்காலியில் உட்காரும்போது கால்கள் இரண்டும் தரையில் பதியும்படி உட்கார வேண்டும். இல்லையென்றால் கால் மூட்டிலுள்ள திசுக்களில் வலி வரலாம்.
நாற்காலியில் சம்மணம் போட்டு உட்காரக் கூடாது. அப்படி
உட்காரும்போது மூட்டிலுள்ள தசைகள் தளர்ந்துவிடும்.
கம்ப்யூட்டரில் உட்கார்ந்து வேலை செய்யும்போது தொடர்ந்து ஒரே பொசிஷனில் இருந்து வேலைச் செய்யக்கூடாது. அப்படிச் செய்வதால் தசைகள் இறுக்கம் அடைந்து முதுகு அல்லது மூட்டுகளில் வலி உண்டாக வாய்ப்புண்டு.
கம்ப்யூட்டர் மேஜையில் கீபோர்டு வைப்பதற்கென தனி ட்ரே கண்டிப்பாக இருக்க வேண்டும். அப்படி இல்லா விட்டால் தோள்பட்டை, முழங்கை வலி வரலாம்.
நாற்காலியில் ஆடிக்கொண்டே வேலைச் செய்யக் கூடாது.
அப்படி வேலை செய்தால் முதுகுத் தசைகள் இறுக்கம்
அடைந்து வலி உண்டாகும்.
கம்ப்யூட்டர் மானிட்டர் கண்களுக்கு நேராக இருக்க வேண்டும். மாறாக சற்று நகர்த்தி வைத்திருந்தால் கழுத்துக்கும் கண்ணுக்கும் கெடுதல் நிச்சயம்.
கம்ப்யூட்டரில் உட்கார்ந்து வேலை செய்யும்போது கீபோர்டை மடியில் வைத்துக்கொண்டு தட்டச்சு செய்யக் கூடாது.
நாற்காலியில் உட்கார்ந்து எழுதும்போது மேஜைமீது கை
வைத்துக்கொண்டு எழுத வேண்டும். இல்லையென்றால் எழுத்து பலகையை உபயோகிக்க வேண்டும்.
முதுகு வலியுள்ளவர்கள் சாய்வு நாற்காலியில் (ஈஸி சேர்) கண்டிப்பாகப் படுக்கக் கூடாது. அப்படி படுத்தால் அதிக
வலி உண்டாக வாய்ப்பிருக்கிறது.
காரிலோ, பேருந்திலோ, ரயிலிலோ உட்கார்ந்துகொண்டு பயணம் செய்ய நேரிட்டால் முதுகுக்குப் பின்னால் சிறிய தலையணை வைத்துக்கொள்வது நல்லது.
மூட்டு வலியுள்ளவர்கள் தரையில் உட்கார்ந்து கொண்டு சாப்பிடக் கூடாது. முடிந்தவரை மேஜையில் உட்கார்ந்து சாப்பிடுங்கள்.
சாப்பிடும்போது கூன் போட்டுக் கொண்டோ, சைடில் தட்டை வைத்துக்கொண்டோ சாப்பிடக் கூடாது. நேராக அமர்ந்துகொண்டு சாப்பிடவேண்டும்.
தொலைக்காட்சிப் பார்க்கும்போது நேராக அமர்ந்து பார்க்க வேண்டும். படுத்துக்கொண்டோ, தொலைக்காட்சிக்கு பக்கவாட்டில் இருந்தோ பார்க்கக் கூடாது.
மாணவர்கள் நேராக அமர்ந்துகொண்டு படிக்க வேண்டும்.
படுத்துக்கொண்டும், சாய்ந்துகொண்டும் படிக்கக் கூடாது.

