டாக்டர் கே.ராதாகிருஷ்ணன் M.B.B.S,D.P.M

மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, அதற்கான மருத்துவம் சரியான நேரத்தில் கிடைக்கும் சூழல் அமைந்தால், நம் நாட்டில் பலரும் வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனை செய்ய முடியும். இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 25 சதவீதம் பேருக்கு ஏதோ ஒரு வகையான மனநல பாதிப்பு இருக்க வாய்ப்பிருப்பதாக உலக சுகாதார அமைப்பு (WHO) குறிப்பிடுகிறது. ஆனால், நம் நாட்டில் மனநல பாதிப்புக்கு உள்ளான  அனைவருக்கும் சிகிச்சை கொடுக்குமளவுக்கு போதுமான மனநல மருத்துவர்கள் இல்லை.

எல்லா துறைகளிலும் அறிவியலின் அசுர வளர்ச்சியை கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கும் நாம், மனம் பற்றி அறிவியல் கூறும் உளவியல் (Psychology) துறை இன்றைக்கு எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்பதை அறிய வேண்டாமா?

தலைவலி, காய்ச்சல் போன்று நம் உடல் சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் அனைத்தையும் ரத்த பரிசோதனை மூலமாகவோ, ஸ்கேன் எடுத்து பரிசோதனை செய்வதன் மூலமாகவோ தெரிந்து கொள்ளலாம். நோயின் தன்மைக்கு ஏற்றவாறு மருந்து மாத்திரைகளைச் சாப்பிட்டும், தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை மூலமாகவும் மருத்துவம் செய்துகொண்டு நலம் பெறலாம். ஆனால், மனம் சரியில்லை என்றால் எப்படி அதைக் கண்டுபிடிப்பது? எப்படி அதைக் குணப்படுத்துவது? இதற்கு மனநல மருத்துவர்கள் தான் உதவ முடியும்.

மனநல மருத்துவர்கள் மிகவும் குறைந்த அளவிலேயே இருக்கும் சூழலில், மக்களுக்கு சேவைசெய்யும் நோக்கில் முழுமையான நேரத்தையும் தன்னிடம் சிகிச்சைக்கு வரும் மக்களுக்காகவே ஒதுக்கிக் கொண்டிருக்கிறார் மனநல மருத்துவர் கே. ராதாகிருஷ்ணன். தஞ்சை மருத்துவக் கல்லூரியில் மருத்துவராகப் பணியாற்றிக் கொண்டிருந்தவர், அந்தப் பொறுப்பில் இருந்து விடுவித்துக்கொண்டு, முழுமையான நேரத்தையும் தன்னைத் தேடிவரும் மக்களுக்காகவே அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்.

தஞ்சாவூரில், குடிநோயால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து அவர்களைக் குடிநோயிலிருந்து மீட்டு இயல்பான, நலமான வாழ்க்கை வாழ உதவி செய்து வருகிறார் டாக்டர் கே. ராதாகிருஷ்ணன். தஞ்சாவூரில் வைகறை மருத்துவமனையையும் தஞ்சாவூருக்கு அருகில் உள்ள வல்லம் என்ற ஊரில், நிலா மனநல மருத்துவமனையையும் நடத்தி வருகிறார். அவரது பேட்டியிலிருந்து…

மன அழுத்தம் 

மனநல மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்று சொன்னாலே, நான் என்ன பைத்தியமா? என்று கேட்பார்கள். இந்த மனத்தடை இப்பொழுது மாறி இருக்கிறதா?

மனநல பாதிப்புக்கு உள்ளானவர்கள், உடலில் ஏற்படும் மற்ற நோய்களைப்போல அதுவும் ஒரு நோய்தான் என்பதை பெரும்பாலும் உணர்ந்து கொள்வதில்லை. அவர்கள்  உடனே பூசாரி, சாமியார் போன்றவர்களிடம்தான் போகிறார்கள். மந்திரிப்பது, தாயத்து கட்டுவது ,பில்லி சூனியம், பேய் ஓட்டுவது, நேரம் சரியில்லை என நினைப்பது, ஜாதகக் கோளாறு, என்றெல்லாம் நம்பியவர்கள் தான் நம் மக்கள். ஆனால், இன்று  ஓரளவுக்கு நல்ல மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. மனநல மருத்துவர்களை நாடிவர ஆரம்பித்திருக்கிறார்கள்.

மன அழுத்தம்,மனப்பதட்டம் போன்ற உளவியல் பிரச்னைகளுக்கும் மருத்துவ ஆலோசனை பெற வருகிறார்களா?

மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றுதான் சொன்னேன். முற்றிலுமாக மாறிவிடவில்லை. நம் சமூகத்தில் இருக்கும் இயல்பான எண்ணம், மனநலப் பிரச்னை என்றால் அழுக்குச் சட்டையோடு தனக்குத் தானே பேசிக்கொள்வது, குளிக்காமல் அங்கும் இங்கும் அலைவது, தானே சிரிப்பது போன்றவைகள்தான் மனநலப் பிரச்னை என்ற சிந்தனை இன்னும் முழுமையாக மாறிவிடவில்லை. நவநாகரிக உலகில் டிப்டாப்பாக உடையணிந்து இருப்பவர்களுக்கும், சமூகத்தால் மதிக்கப்படும் நல்ல வேலையில் இருப்பவருக்கும் கூட மனநல பிரச்னைகள் வரலாம்.  பாமரர்களுக்கு மட்டுமே மனநல  பிரச்னைகள் வருவதில்லை. அனைவரிடமும், மனநல சிகிச்சை அவசியம் என்ற விழிப்புணர்வு கூடுதலாக தேவைப்படுகிறது  என்பதை மறுப்பதற்கில்லை.

யாருக்கெல்லாம் மனநல பிரச்னைகள் வரலாம்?

இவர்களுக்குத்தான் மனநல பிரச்னைகள் வரும் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. யாருக்கு வேண்டுமானாலும் மனம் பாதிக்கப் படலாம். உலக அளவில் சராசரியாக 25 சதம்பேருக்கு லேசானது முதல் தீவிரமான நிலைவரை மனநல பாதிப்பு இருக்கிறது. காய்ச்சல், மஞ்சள்காமாலை, அல்சர், அலர்ஜி  வருகிற மாதிரி மனநல பிரச்னைகளும் சாதாரணமாக வரும் ஒரு நோய்தான்.

மரபணு ரீதியாகவும் மனநல பாதிப்பு வருமா?

இன்றைக்கு மருத்துவ அறிவியல் மிகவேகமாக வளர்ந்துகொண்டே இருக்கிறது. பாரம்பரியமாக மரபணுவின் காரணமாகவும் மனநல பிரச்னைகள்  வருவது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் இன்றைய பரபரப்பான உலகில்,  நமது வாழ்க்கை முறை, செய்யும் வேலை, வேலையின்மையும் அதனால் வருமானம் இல்லாதது போன்றவைகளும், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், மனப் போராட்டங்கள் போன்றவையும் முக்கியமான காரணங்களாக இருக்கின்றன. மூளையில் சுரக்கக்கூடிய செரடோனின், டோபமைன் போன்ற திரவங்களின் சுரப்பு அதிகரித்தாலும் குறைந்தாலும்  மனநல பிரச்னைகள் ஏற்படலாம்.

மனநல மருத்துவர்கள் தூக்க மாத்திரைகள் தான் தருவார்கள் என்ற பேச்சு பரவலாக இருக்கிறதே…?

30, 40 ஆண்டுகளுக்கு முன்பு, மனநலம் பாதிப்புக்கு உள்ளான நோயாளிக்குக் கொடுக்கப்பட்ட மாத்திரைகளைப் பற்றிய தாக்கத்தால் இன்றும் இப்படிப் பேசுகிறார்கள். தற்போது  உலக அளவில் மிக நவீன மருந்துகள் வந்துவிட்டன. மனநல மாத்திரைகள் சாப்பிடும் ஒரு விமானி எவ்வித இடையூறும் இல்லாமல் பயணிகள் விமானத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இன்றைக்கு, மூளையில் சுரக்கும் திரவங்களின் ஏற்ற இறக்கத்தை சரி செய்யவே மருந்துகள் கொடுக்கப்படுகிறது. அவை தூக்க மாத்திரைகள் அல்ல, மனநல மருந்துகள். ஒருவருக்கு மன அமைதியைக் கொடுத்து குடும்ப ரீதியாக, தொழில் ரீதியாக சமூக ரீதியாக, வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள உதவும் ஊக்க மாத்திரைகள்.

தொடக்கக் காலத்தில், மாத்திரைகளால் சிறிய அளவில் தொந்தரவு இருக்கலாம். தனிமையில் முடங்கி கிடக்கும் மனிதனை தட்டியெழுப்பி உற்சாகமாக இயங்க உதவும்போது சின்னச்சின்ன தொந்தரவுகளை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.

.டி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாவது ஏன்?

ஐ.டி துறையில் பணியாற்றுபவர்களுக்கு அளவுக்கதிகமான பணிச்சுமையும், பகலிரவு பாராமல் தொடர்ந்து பணியாற்றுவதும் கட்டாய நிகழ்வாக இருக்கிறது. அத்துடன் இல்லாமல், இலக்கை எட்டுவதற்காக அவர்கள் கடுமையாகப் போராட வேண்டியிருக்கிறது.  ஐ.டி துறையில் பணியாற்றுபவர்கள் உடல்நலனில் அக்கறைக் காட்டாமல் அலட்சியமாக இருப்பதும், மற்ற பொழுதுபோக்கு அம்சங்கள் எதிலும் கவனம் செலுத்த முடியாத அவல நிலையும், மனமகிழ்ச்சியே இல்லாத வாழ்க்கை முறை போன்ற காரணங்களாலும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். 

இளைஞர்களை மிகக் குறுகிய காலத்தில் சக்கையாகப் பிழிந்து எடுக்கிறார்கள். சக்திக்கு மீறி வேலை செய்ய வேண்டிய  நிர்ப்பந்தம். இதனால் மன இறுக்கம், கணவன் – மனைவி இடையில் பாலியல் பிரச்னைகள், விவாகரத்து, தற்கொலை எண்ணம், இன்டர்நெட் விளையாட்டுகளுக்கு அடிமையாவது, சூதாட்டம், குடிக்கு அடிமையாவது, கடன் சுமையில் சிக்குவது என எண்ணிலடங்கா பிரச்னைகளால் பாதிக்கப்படுகிறார்கள். கடுமையான வேலைப்பளுவால் அதிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கிறார்கள். எனக்குத் தெரிந்து பல இளைஞர்கள் ஐ.டி வேலையை விட்டு விட்டு விவசாயம் செய்ய வந்து விட்டார். ஐ.டி ஊழியர்கள் தயங்காமல் மனநல மருத்துவரை நாடி சிகிச்சை எடுத்துக் கொண்டு, தங்கள் மனநல சிக்கல்களில் இருந்து மீண்டு இயல்பான வாழ்க்கைக்குத் திரும்புவது இன்று அதிகரித்து வருகிறது என்பதை நான் உறுதியாகச் சொல்வேன்.

.சி.டி எண்ண சுழற்சி நோய்க்கு (Obsessive compulsive disorders) நிரந்தரத் தீர்வு உண்டா?

ஒரு சிலருக்குத் தேவையில்லாத எண்ண அலைகள் மீண்டும் மீண்டும் வந்துகொண்டே இருக்கும். அவ்வாறு வரும் எண்ண அலைகளை வேண்டாம் என்று தடுத்தாலும் நிற்பது இல்லை. மீறி தடுத்தால் ஒருவித பயம், பதட்டம் வரலாம். பெரும்பாலான அப்செஸன் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சந்தேகம் என்பது தேவையில்லாமல் திரும்பத் திரும்ப வரும்.

சந்தேக நோய் சிறிய அளவில் இருந்து மற்றவர்களுக்கு தொந்தரவு இல்லாமல் இருக்கும் வரையில் பிரச்னையில்லை. அவர்களின் செயல்களால் அடுத்தவர்களுக்கும் தொந்தரவு ஏற்படும்போது கண்டிப்பாக சிகிச்சை அளிக்க வேண்டும்.

இந்த பாதிப்பு உள்ளவர்களை அடையாளம் காண்பது எப்படி ?

ஒரு சிலர் கதவைப் பூட்டியபின், நன்றாகப் பூட்டினோமா  இல்லையா ? என்று ஐந்தாறு தடவைகள் திரும்பத் திரும்ப பரிசோதித்துப் பார்ப்பார்கள். எங்காவது வெளியில் செல்லும்போது, கேஸை நிறுத்திவிட்டாயா என்று அடிக்கடி மனைவியைக் கேட்பதுண்டு. கையில் அழுக்கு இருக்கிறது என்று எண்ணி நாலைந்து முறை கையைக் கழுவுவது போன்றவைகள் சந்தேக நோயின் ஆரம்ப கட்டம். அதுவரையில் சிக்கல் இல்லை.

அடுத்த கட்டத்திற்கு அவர்கள் செல்லும்போதுதான் பிரச்னைகள் உண்டாகிறது. பூட்டியவுடன் பூட்டை இழுத்து இழுத்து பார்த்துவிட்டு போவது மட்டுமல்லாமல், பாதி தூரம் சென்றபின், திரும்ப சென்று சரியாகப் பூட்டினோமா என்று சரிபார்க்க வேண்டும் என்று சொல்வார்கள். சில சமயங்களில் சினிமாவுக்கே செல்வதாக வைத்துக் கொள்ளுங்கள், அவரும் படம் பார்க்க மாட்டார், மற்றவர்களையும் படம் பார்க்க விட மாட்டார். பூட்டை பூட்டினோமா, கேஸை மூடினோமா என்று தொந்தரவு செய்துகொண்டே இருப்பார்கள். உறவினர் வீட்டுக்குச் சென்றால், அங்கு கை கழுவும்போது நீண்ட நேரம் கழுவிக்கொண்டே இருப்பார்கள்.

இவர்களின் செய்கைகள் அவருக்கு மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் பிரச்னையாக இருக்கும். அத்துடன் பார்ப்பவர்களுக்கும் வித்தியாசமாகவும் வினோதமாகவும் இருக்கும். மற்றவர்கள் கிண்டல் செய்வதோடு எரிச்சலும் அடைவார்கள். இவ்வாறு செய்யும் ஒருவருக்கு தான் செய்வது தேவையில்லாதது என்று தெரியும். இருந்தாலும் கட்டுப்படுத்த முடியாது .மீறிக் கட்டுப்படுத்தினால் மனம் கலங்கி ஒருவித பயமும் பதட்டமும் ஏற்படும்.

இந்த பாதிப்பு உள்ளவர்களை  கேலி கிண்டல் செய்யாமல், அடித்து துன்புறுத்தாமல், மனநிலை சிகிச்சை எடுக்க உதவ வேண்டும். இதில் இருந்து மீண்டு நலமுடன் வாழ மருத்துவர் உதவுவார்.

கோடிக்கணக்கான மக்கள் மது அருந்துகிறார்கள். சிலர் மட்டும் மதுவுக்கு அடிமை ஆவது ஏன்?

குடி குடியை கெடுக்கும் என்பது மிகையல்ல. குடிப்பழக்கம் குடிப்பவரை மட்டுமல்ல குடிப்பவரின் குடும்பத்தையும், சொந்த பந்தங்களையும் பாதிக்கும். குடியினால் கெட்டுச் சீரழிந்தவர்கள்  ஏராளம்! சிலர் பண்டிகை, திருமணம்,  பார்ட்டி போன்ற நேரங்களில் எப்போதாவது குடிப்பார்கள். பின்னர் அதை மறந்து விடுவார்கள். ஒரு சிலரால் குடிக்க ஆரம்பித்து விட்டால் நிறுத்த முடியாது. தினமும் குடிப்பது, ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை குடிப்பது, தொடர்ந்து இரவு பகல் பாராமல் குடித்துக் கொண்டே இருப்பது… குடிக்கவில்லை என்றால் தூக்கம் வராது .கை நடுங்க ஆரம்பித்து விடும். குடி பற்றிய சிந்தனை மட்டுமே இருக்கும்.

குடிக்காக எந்த எல்லைக்கும் போவார்கள்; கடன் வாங்குவது, சொத்துக்களை விற்பது, பொய் சொல்வது, திருடுவது, பிச்சை எடுப்பது என்று எதைச் செய்தாவது அவர்கள் குடித்தாக வேண்டும். போதைக்கு மூளை அடிமையாகி திரும்பத் திரும்ப குடிக்கத் தூண்டும். குடிநோயாளியாக மாறிவிட்டால் சிகிச்சை அவசியம்.

 குடிக்கு அடிமையானல் என்னென்ன உடல் பிரச்னைகள் வரும்?

தூக்கமின்மை, பசியின்மை, வயிற்று வலி, கை நடுக்கம், ஆண்மைக் குறைவு, ரத்த அழுத்தம், மஞ்சள் காமாலை போன்ற பிரச்னைகள் வரலாம். மன அழுத்தம், நெஞ்சு பதட்டம், தாழ்வு மனப்பான்மை, சந்தேக நோய் போன்ற மனநலப் பிரச்னைகள் கூடுதலாக வந்து, ஒரு மனிதனை நிலைகுலையச் செய்யலாம். தற்கொலை எண்ணம்கூட வரும். வன்முறையில் ஈடுபடலாம். இதனால் குடும்பத்தில் குழப்பம், வேலையின்மை, கடன் பிரச்னை, சண்டை சச்சரவுகள் என எல்லாமும் வரும்.

குடி மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை எடுத்த பின்னரும் குடிக்கு அடிமையாவது ஏன்..?

நவீன மருத்துவ அறிவியலில் குடிப்பழக்கத்தை நிறுத்தப் பல சிகிச்சை முறைகள் உள்ளன. டீட்டாக்சிபிகேசன் என்று சொல்லக்கூடிய குடியை நிறுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகளை சீர்செய்ய மாத்திரைகள் உள்ளன. அதேபோல் சிகிச்சைக்குப்பின் மீண்டும் குடிக்க வேண்டும் என்ற ஆசையை குறைக்கக் கூடிய மாத்திரைகளும் மனநல ஆலோசனைகளும் உள்ளன.

குடிப்பவர்களுக்கு குடிக்க வேண்டும் என்ற ஆசையானது கடலில் அலை வருவது போன்று விட்டுவிட்டு வரும். அதிலிருந்து விடுபட மனநல ஆலோசனை தேவை. மிக முக்கியமாக குடியிலிருந்து மீள வேண்டுமென்று குடிநோயாளி விரும்ப வேண்டும். முயற்சி செய்ய வேண்டும் .மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. குடியை நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் உண்டானால் போதும் .அதிலிருந்து எளிதில் விடுபடலாம். மனநல மருத்துவர், மனநல ஆலோசகர், குடிநோயாளி மூவரின் கூட்டு முயற்சியும் கட்டாயமாகத் தேவைப்படுகிறது. அத்துடன் முக்கியமாக குடி நோயாளியின் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. இதில் எந்த ஒன்று குறைந்தாலும் குடிநோயாளி, சிகிச்சை எடுத்துக்கொண்டு குணமடைந்து வீட்டுக்குத் திரும்பியபின் மறுபடியும் குடிக்க ஆரம்பிப்பார்.

மனநல மருத்துவர்களின் சிகிச்சையை மற்ற மருத்துவர்கள் ஊக்கப்படுத்துவது இல்லை என்பது உண்மையா?

 உண்மைதான். மனநல மருத்துவ சிகிச்சையின் தேவையை, அதன் அவசியத்தை மருத்துவர்கள் உணராமல் இருந்தது என்னவோ உண்மைதான். வயிறு தொடர்பான பல பிரச்னைகளுக்கு மனநல சிகிச்சைத் தேவைப்படுகிறது. சிலர் வயிறு, குடல் சிறப்பு நிபுணரிடம் பல வருடங்கள் சிகிச்சை பெற்றாலும் நோய் சரியாகாது. மனநல சிகிச்சையை சிபாரிசு செய்ய மாட்டார்கள். ஆனால், சமீபகாலமாக நல்ல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றது. எம்.பி.பி.எஸ். படிப்பிலேயே  மனநல சிகிச்சையின் அவசியத்தை ஆழமாக பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபகாலமாக இன்டர்நெட் அடிமைத்தனம் அதிகரிக்கிறதே…?

குழந்தைக்குப் பாலூட்டும்போதே சேல்போனை கொடுக்கிறார்கள். மைதானத்தில் விளையாடுவதற்குப் பதிலாக உட்கார்ந்த இடத்திலேயே செல்போனில் மணிக்கணக்கில் விளையாடுவது பழக்கமாகி வருகிறது என்பது துயரமானது. எழுதப்படிக்க தெரிகிறதோ இல்லையோ இன்டர்நெட் கேம் தெரிகிறது. இது குழந்தையின் கல்வியை, எதிர்காலத்தை கண்டிப்பாகப் பாதிக்கும். தேவையில்லாமல் இளம் வயதிலேயே செல்போனைக் கொடுத்துக் கெடுக்க வேண்டாம். பெரியவர்களும் இன்டர்நெட் போதைக்கு அடிமை ஆகாமல் தப்பிப்பது எதிர்காலத்துக்கு நல்லது. தேவைப்பட்டால் மனநல மருத்துவரின் ஆலோசனையை பெறவும் தயங்கக்கூடாது என்கிறார்  மனநல மருத்துவர் கே.ராதாகிருஷ்ணன்.

தகவல் தொடர்புக்கு: 94433 55726

சந்திப்பு: குணா

படங்கள்: செந்தில் (தஞ்சாவூர்)