பெண் குழந்தையாக இருந்தால் ராணியாகவும், ஆண் குழந்தையாக இருந்தால் ராஜாவாகவும் பாவிப்பது வழக்கம் தான். குழந்தையை அள்ளி அணைத்து அழுத்தமாக முத்தம் பதித்து அன்பை வெளிப்படுத்துவதில் அனைவருக்கும் ஆசை தான். ஆனால் இது குழந்தையின் ஆரோக்கியத்துக்கு நல்லதா என்பதும் கவனிக்க வேண்டும்.

முத்தமிடல் குழந்தையின் சருமத்துக்கு பாதுகாப்பாக இருக்காது. அதே நேரம் எளிதில் நோய்த்தொற்று உருவாகவும் அதிக வாய்ப்புண்டு. 

மருத்துவர்கள்,பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தையின் தாயே முத்தம் கொடுப்பதை தவிர்க்க அறிவுறுத்துகிறார்கள்.

குழந்தையை தூக்கி கொஞ்சும் அனைவரும் மாறி மாறி முத்தமழை பொழிவதை கண்டிப்பாக தவிர்ப்பது நல்லது.

 சிலர் குழந்தையை வேகமாக அழுந்த முத்தமிடுவார்கள். குழந்தையின் கவனத்தை திசை திருப்ப சத்தம் போடலாம். கைகளால் கன்னத்தை தடவலாம். ஆனால் குழந்தையை வாய் வைத்து முத்தமிடாமல் கைகளால் கிள்ளி முத்தம் இடுவதும் தவறானது. இதனால் மென்மையான குழந்தையின் சருமம் அதிக பாதிப்புக்கு உள்ளாகும். 

முத்தம் அன்பின் மிகுதியால் வரக்கூடியது. அதிலும் அழகான குழந்தைகளை பார்க்கும் போது இயல்பாக மனதில் எழும் மகிழ்ச்சியின் வெளிப்பாடுதான். ஆனால் இது குழந்தையின் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்காது .குழந்தையின் அழகில் மயங்கி முத்தமிடுவதன் மூலம் குழந்தைக்கு வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்று உண்டாக அதிகளவு வாய்ப்புண்டு. 

இன்னும் சிலர் குழந்தையின் இதழில் முத்தமிடுவது உண்டு. மிகுந்த அன்பினாலும் பச்சிளங்குழந்தையின் அழகினாலும் கவரப்பட்டு முத்தம் கொடுத்தாலும் குழந்தைக்கு இது மிகப்பெரிய பிரச்சனையை உண்டாக்கும்.

பொதுவாக குழந்தைகளை தூக்கும் போது கைகளை சுத்தமாக கழுவிய பிறகே தூக்க வேண்டும்.அதே போன்று வாய் சுத்தமும்  அவசியம். இதனால் பேசும் போது வாய்பகுதியிலிருந்து உமிழ்நீர் வழியாக கிருமித்தொற்று பரவாமல் தடுத்துவிட முடியும். எல்லோருக்கும் குழந்தையை முத்தமிட ஆசைதான்.ஆனால் குழந்தைகளின் பாதுகாப்பு தானே முக்கியம்!