
-டாக்டர்.பி.ராதாகிருஷ்ணன்,எம்.எஸ். ஆர்த்தோ.
முதியவர்களை கவனமாக கண்காணிக்க வேண்டும். பெரும்பாலான முதியோர்கள் பல்வேறுவிதமான நோய்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கான மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு வரும் அவர்கள் சோர்வாலும், தளர்ச்சியாலும் நிலை தடுமாறும் சூழ்நிலை ஏற்படுகிறது. அப்போது அவர்கள் ‘பாத்ரூமை’ நோக்கி சென்றால் அங்கே லேசான தடுமாற்றம் ஏற்பட்டாலும் சுதாரித்துக்கொள்ள முடியாமல் கீழே விழுந்துவிடுகிறார்கள்.
இதனால் பெரும்பாலும் அவர்களுக்கு இடுப்பு மூட்டு முறிவு ஏற்படுகிறது. இடுப்பு மூட்டு இடம் பெயர்ந்தும் போகிறது. முதியோர்களுக்கு எலும்பு பலவீனமாக இருப்பதால், எளிதாக முறிந்துவிடுகிறது. உங்கள் வீட்டில் முதியோர்கள் இருந்தால் அவர்களுக்கு ‘ஹிப் பிரேஸ்’ என்ற இடுப்புக்கான பட்டையை பொருத்திவிடுங்கள். ஒருவேளை அவர்கள் தடுமாறி விழுந்தாலும் இடுப்பு எலும்பில் முறிவு ஏற்படாமல் அது பாதுகாக்கும்.வரும் முன் காப்பதே புத்திசாலித்தனம்.தேவைப்பட்டால் எலும்பு சிகிச்சை நிபுணரின் ஆலோசனை பெறலாம்.

