
உடல் பருமன் வருவதைத் தடுக்க குழந்தைகள் தினமும் குறைந்தது ஒரு மணி நேரம் விளையாட வேண்டும். பெரியவர்கள் குறைந்தது 45 நிமிடங்களுக்கு வேகமான நடைப் பயிற்சி அல்லது நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், டென்னிஸ், கைப்பந்து,கூடைப் பந்து, இறகுப்பந்து போன்ற ஏரோபிக் பயிற்சிகளில் ஒன்றைச் செய்ய வேண்டும்.ஒரு மணி நேரம் வேகமாக நடக்கும்போது உடலில் 300 கலோரி வரை சக்தி செலவாகிறது. இந்தச் சக்தியைத் தருவது கொழுப்பு.
இதன் பலனாக, உடலில் தேவையற்ற கொழுப்பு கரைகிறது; ரத்தக் கொலஸ்டிரால், உடல் பருமன் ஆகிய பாதிப்புகளும் குறைகின்றன. வீட்டில் இருக்கும் பெண்கள் டிவி பெட்டிக்கு முன்னால் பொழுதைப் போக்குவதைவிட, வீட்டு வேலை, தோட்டப் பராமரிப்பு, வீட்டுக்குள்ளேயே நடப்பது,லிஃப்டை பயன்படுத்தாமல் மாடிப்படிகளில் ஏறி இறங்குவது போன்றவற்றைச் செய்வதும் உடற்பயிற்சிகள்தான்.இப்படி உடற்பயிற்சி செய்வதன் மூலம் 86 சதவீதம் சர்க்கரை நோய்க்கான வாய்ப்பைக் குறைக்க முடியும்.

