
கறிவேப்பிலை மிகச் சிறந்த மூலிகையாகும்.கறிவேப்பிலையுடன் மிளகாய்,
உப்பு,புளி சேர்த்துத் துவையல் செய்து துணை உணவாகப் பயன்படுத்தலாம். இது பேதி, செரியாமை, சுவையின்மை, மயக்கம் போன்றவற்றுக்கு மருந்தாக அமையும். உணவுக்குத் தொட்டுக்கொள்ள, ‘சாஸ்’ போன்ற பொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட்டு இது போன்ற மருத்துவக் குணங்கள் நிறைந்த மூலிகைத் துவையல்களின் பயன்பாட்டை அதிகரிப்பது உடல் நலத்துக்குச் சிறப்பு.
இரும்புச் சத்து, சுண்ணச் சத்து, பாஸ்பரஸ், மக்னீசியம், நார்ச்சத்து, வைட்டமின் பி, கிளைக்கோஸைடுகள் என அத்தியாவசிய நுண்கூறுகளை எக்கச்சக்கமாகக் கொண்டிருக்கிறது கறிவேப்பிலை.
இதில் உள்ள விட்டமின் – ஏ, கண்களைப் பாதுகாக்கும்.
சிறார்களுக்குக் கறிவேப்பிலையை உணவாகக் கொடுத்துப் பழக்கிவிட்டால், பசியைத் தூண்ட மருந்துகளின் அவசியம் இருக்காது. இளநரையைத் தடுப்பதற்குக் கறிவேப்பிலை சார்ந்து தயாரிக்கப்படும் உணவை அடிக்கடி சிறார்களுக்குக் கொடுக்கலாம்.
“கேரட் சாப்பிட்டால் கண்களுக்கு நல்லது என்று குழந்தைகளுக்கு ஊட்டி வளர்ப்பதைப் போல, ‘கறிவேப்பிலையைச் சாப்பிட்டால் கண்களுக்கு மட்டுமல்ல,பல உள் உறுப்புகளுக்கும் நல்லது’ என்று குழந்தைகளுக்குக் கறிவேப்பிலையின் மகிமையைச் சொல்லிப் பழக்கலாம்.
கர்ப்பிணிகளுக்கு உண்டாகும் செரிமானக் கோளாறுகளை நிவர்த்தி செய்யவும், ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும்,உடல் சோர்வைத் தடுக்கவும் கறிவேப்பிலை உதவும்.கஞ்சித் தண்ணீரோடு கறிவேப்பிலைத் துவையலைத் தொட்டுச் சாப்பிட மேற்சொன்ன பலன்கள் கிடைக்கும்.
உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கும் மிகை ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க நினைப்பவர்களுக்கும் கறிவேப்பிலை சிறந்த நண்பன்.

