டாக்டர்.சிவபாலன் இளங்கோவன். மனநல மருத்துவர்.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டன.வெயிலுக்காகவும் மழைக்காகவும் அடுத்தடுத்து விடுமுறை விட்டார்கள்.நமது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் போது  சத்தான சுவையான சூப்பரான சாப்பாடு கொடுத்தால் மட்டும் போதுமா?

நமது உணவுகளை ஆரோக்கியமானவைகளாக மேம்படுத்துவதன் மூலம் அதாவது மூளையின் செயல்பாடுகளுக்கு ஏற்றவைகளாக, உகந்தவைகளாக, பாதிப்புகளை உண்டாக்காதவைகளாக நாம் கவனமாக எடுத்துக் கொண்டாலும் அது மட்டுமே ஆரோக்கியமானதல்ல. ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் அல்லது அதை நோக்கிய பயணத்தில் உணவு முறைகளில் மாற்றம் மட்டுமே போதுமானதாக இருக்காது. உடல் உழைப்பும் அத்தியாவசியம். 

எந்த வகையான உணவுப் பொருட்களை எடுத்துக் கொண்டாலும் உடல் உழைப்பு எதுவும் இல்லாமல் இருந்தால் அந்த உணவால் மூளைக்கு எந்த லாபமும் இல்லை. குறைந்தபட்ச உடலுழைப்பு கூட இல்லாமல் நாம் ஆரோக் கியத்தைப் பற்றி எந்தக் கற்பனையும் செய்ய முடியாது. உடல் உழைப்பு என்பது அத்தனை முக்கியம்.

டிஜிட்டல் காலத்தில் நமது குழந்தைகளின் மிக முக்கியமான பிரச்சினையாக நான் இதைத் தான் பார்க்கிறேன். உடலுழைப்பு அற்ற

நிலையிலேயே நமது குழந்தைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறோம். காலையில் இருந்து மாலை வரை பள்ளி, அதன் பிறகு சில வகுப்புகள், அதன் பிறகு வீட்டுப்பாடம், அதன் பிறகு டி.வி அல்லது செல்போன், அதன் பிறகு தூக்கம். இதுதான் நமது குழந்தைகளின் அன்றாடமாக இருக்கிறது. 

சமீப காலத்தில் குழந்தைகளில் அதிகளவில் வரக்கூடிய மனநலம் சார்ந்த பிரச்சினைகளுக்கும் கூட இந்த உடலுழைப்பு இல்லாமல் இருப்பது ஒரு காரணமாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.

ஐந்தாவது படிக்கும் மாணவன் ஒருவனை சமீபத்தில் அவனது அம்மா அழைத்து வந்திருந்தார்கள். நிறைய அடம், துறுதுறுவென ஒரு இடத்தில் இல்லாமல் இருப்பது, எதிலும் கவன மின்மை,பள்ளியில் மற்ற குழந்தைகளைத் தொந்தரவு செய்வது, யாரையாவது எதற்காவது வம்பிழுத்துக் கொண்டேயிருப்பது, இவைதான் அவனுடைய பிரச்சினைகளாக இருந்தன. அவனது அன்றாடப் பணிகளைப் பற்றிக் கேட்டேன். மேலே நான் சொல்லியபடிதான் இருந்தன. ‘பள்ளியிலா வது விளையாட அனுமதியுண்டா?” எனக் கேட்டேன். மைதானமே இல்லை என சொன் னார்கள். அவனைத் தினமும் அருகில் உள்ள மைதானத்திற்கு அழைத்துச் சென்று ஓடச் சொல்லுங்கள் என்றேன். நீச்சல் பயிற்சியில் சேர்த்து விடுங்கன் என்றேன். ஒரு மாதத்திலேயே அவனது துறுகுறுப்பும், தொந்தரவும் குறைந்திருந்தது. உடலுழைப்பு எவ்வனவு முக்கியம், அதுவும் அவனது வயதில் என்பதை அவனது அம்மா கண்கூடாகத் தெரிந்து கொண்டார்.

உடற்பயிற்சியின்போது எண்டார்ஃபின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. அது ஒரு இயற்கையான வலி நிவாரணி. மேலும் அது ஒரு சீனர்ச்சியையும்

நமக்குள் ஏற்படுத்தும், மேலும் செரட்டோனினு டைய செயல்பாடுகளும் அதன் உற்பத்தியும் கூட உடற்பயிற்சியின்போது அதிகரிக்கிறது. காலையில் ஒரு நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது அந்த நாள் முழுவதும் மனதுக்கு இதமாய் இருப்பதற்கு செரட்டோனின்தான் காரணம். மேலும் உடற்பயிற்சியை வழக்கமாகக் கொள்ளும் போது உடலில் BDNF என சொல்லக்கூடிய நியூரோஜெனிசஸைத் தூண்டக்கூடிய ஹார்மோன் பெருமளவில் சுரக்கிறது. 

இதன் மூலம் வயது முதிர்வைத் தள்ளிப் போடலாம். தொடர்ச்சியாக தினமும் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு டிமென் ஷியா என்ற மறதி நோய் வரும் வாய்ப்புகள் குறைவு என சமீபத்திய ஆய்வுகள் சொல்கின்றன. அதனால் வயது முதிர்வது தடுக்க முடியாது என்ற பேச்சுக்கே இப்போது இடமில்லை. ஆரோக் கியமான உணவு, அதனுடன் ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றவற்றில் நாம் கவனமாக இருக்கும் போது வயது மூப்படைவதும் அதனால் ஏற்படும் சிக்கல்களும் நிச்சயம் குறையும்.

உடற்பயிற்சி என்பது மிகக் கடுமையானதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மிக இலகுவான உடற்பயிற்சி கூட மிக அதிகமான பலன்களை உடலுக்கும், மனதுக்கும் கொடுக்கிறது. இருபது நிமிடம் நடைப்பயிற்சி, சின்னச் சின்ன வேலைகளைச் செய்வது, படிக்கட்டுகளில் நடந்து செல்வது, அருகில் இருக்கும் கடைகளுக்கு, மார்க்கெட்டுகளுக்கு நடந்து செல்வது அல்லது சைக்கிள் உபயோகிப்பது, வாரம் ஒருமுறை நீச்சல் அல்லது ஏதேனும் ஒரு விளையாட்டு இவை போதும் ஆரோக்கியத்திற்கு.