குழந்தைகள், நோயாளிகள், வயது முதிர்ந்தோர் அனைவரும் உட்கொள்ளக்கூடிய முழுமையான உணவு முட்டை. உடலின் திசுக்கள், எலும்புகள், பற்களை வலுப்படுத்தக்கூடியது. நமது சருமத்தைப் பளிச்சென வைத்திருக்கவும்,நரம்பு மண்டலத்தை நல்ல முறையில் இயங்க வைக்கவும் தேவையான சத்துகளை வாரி வாரி வழங்குகிறது.

நமது உடலுக்குத் தேவையான தினசரி புரதத்தின் அளவில் 7 சதவீதமும், கலோரிகள் 3 சதவீதத்தையும் முட்டை வழங்குகிறது.

ஒரு முட்டையிலிருந்து பெறக்கூடிய சத்துகள்:

கால்சியம் – 3%

வைட்டமின் A + கரோட்டீன் – 10%

ரைபோபிளேவின் (வைட்டமின் B2 ) -10%

தயாமின் (வைட்டமின் B1 ) – 4%

இரும்புச்சத்து – 11%

இவை தவிர உடலுக்குத் தேவையான சல்ஃபர், மெக்னீசியம், குளோரின் ஆகியவையும் இதில் உண்டு. ஆனால், வைட்டமின்  சி மட்டும் முட்டையில் இல்லை. எனவே, முட்டையுடன் தக்காளிப் பழம் சேர்த்துக் கொள்ளும்போது, குறைந்த கலோரிகளுடன் கூடிய சமச்சீரான உணவு (Balanced Meal) கிடைக்கிறது.

காலை, மதியம் அல்லது இரவு என எப்போது வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளக்கூடிய, வசதியான, விலை குறைந்த ஒரு உணவுப் பொருள் முட்டை. குழந்தைகள், இளைஞர்கள் தாராளமாக முட்டைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். கொஞ்சம் வயதாகும்போது, முட்டை வெள்ளைக் கருவை அதிகமாகவும், மஞ்சள் கருவை குறைத்தோ அல்லது முழுவதுமாகத் தவிர்த்தோ விடுவது நன்மை பயக்கும். ஏனெனில், மஞ்சள் கருவில் கொழுப்புச் சத்து (கொலஸ்ட்ரால்) அதிகப்படியாக இருக்கிறது.

முட்டை சமையலில் கவனிக்க வேண்டியவை:

முட்டையை சமைப்பது பெரிய வேலையா என நினைக்கலாம். ஆனால் சரியான முறையிலே, பதத்திலே முட்டை அரை அவியல் (Half Boil), ஸ்கிராம்பில்ட் முட்டை (Scrambled Eggs) செய்வது கைப்பழக்கத்தில் வர வேண்டியது.

முட்டை – அரை அவியல் (Half boil)

ஒரு பாத்திரத்தில் முட்டைகளுக்கு மேல் தண்ணீர் நிற்கிற அளவில் ஊற்ற வேண்டும். தண்ணீர் கொதிக்கும் நேரத்திலிருந்துதான் நேரம் கணக்கிடப்பட வேண்டும்.

சிறிய முட்டையானால் 3 நிமிடங்களும், நடுத்தர முட்டையானால்  4 நிமிடங்களும், பெரிய முட்டையானால்  4 1/2நிமிடங்களும் வேகவிட வேண்டும். குறிப்பிட்ட இந்த நேரத்துகுப் பின்னர் விரைவாக முட்டையை வெந்நீரிலிருந்து அகற்றிவிட வேண்டும். இல்லாவிட்டால் அளவுக்கு அதிகமாக வெந்துவிடும்.

முட்டை – முழு அவியல்

முட்டை, முழுவதுமாகத் தண்ணீரில் மூழ்கியிருக்க வேண்டும். சிறிய முட்டையானால் 8 நிமிடங்களும், நடுத்தர அளவுள்ள முட்டையானால் 9 நிமிடங்களும், பெரிய முட்டையானால் 10 நிமிடங்களும் ஆகும். குறிப்பிட்ட இந்த நேரத்துக்குமேல் அவித்தால் பாதிப்பு ஏதுமில்லை. ஆனால் மஞ்சள் கருவைச் சுற்றி ஒரு சாம்பல் நிறப் படைபோல் ஏற்பட்டுவிடும்.

புல்ஸ் ஐ (Bull’s eye)

முற்றாக அவித்த வெள்ளைக் கருவும் அரை அவியலான மஞ்சள் கருவும் கொண்டதே ‘புல்ஸ் ஐ’. சிறிய கடாய் அல்லது ஃபிரையிங் பேனில் (Fryingpan) மிகச் சிறிய அளவில் எண்ணெய் அல்லது பட்டர் அல்லது மார்ஜரின் ஒரு தேக்கரண்டி அளவு உபயோகப்படுத்தலாம்.

மஞ்சள் கரு கலங்காத வகையில் முட்டையை மெதுவாக உடைத்து சூடான எண்ணெயில் சிறு நெருப்பில் பொரிய விடவேண்டும். உப்பு ,மிளகுத்தூள் தூவிப் பரிமாறலாம்.

மஞ்சள் கருவை முழுமையாக வேக வைக்க வேண்டுமானால் புல்ஸ் ஐயைத் திருப்பிப் போடலாம். பேப்பர் டவல் மேல் போட்டு எண்ணெய் இறங்கியவுடன் பரிமாறலாம்.

ஸ்கிராம்பில்ட் முட்டைகள் (Scrambled Eggs)

ஒன்றுக்கும் மேற்பட்ட (2-8) முட்டைகளை ஒரு பாத்திரத்தில் உடைத்துப் போட்டு முள்கரண்டியினால் அடிக்காமல், தேவையான உப்பு மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஃபிரை பேனைச் சிறு நெருப்பில் சூடேற்றி, எண்ணெய் அல்லது மார்ஜரீன் சேர்த்துச் சூடானதும், முட்டைக் கலவையை அப்படியே அதில் ஊற்றி, மெதுவாக ஒரு மரக்கரண்டியினால் கிளற வேண்டும்.

கொஞ்சம் ஈரப்பதம் இருக்கும்போதே இறக்கி விடலாம். முட்டைகளினுள் இருக்கும் சூட்டிலேயே மேலும் கொஞ்சம் அது வெந்துவிடும். விரும்பினால் கொஞ்சம் துருவிய சீஸ் தூவி பிரெட்டுடன் பரிமாறலாம். மேலும் இதைச் சுவையாக்குவதற்கு மிகப் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், கொத்தமல்லி இலையைத் தூவிப் பரிமாறலாம்.

ஸ்கிரம்பில்ட் முட்டையில் கவனிக்க வேண்டியது: அதன் தன்மை ரப்பர் போல் இல்லாமல் மிருதுவாக இருக்கவேண்டும்.

முட்டை ஆம்லட் செய்வது அனைவருக்கும் தெரிந்ததே.

ஆம்லட்டை மேலும் சத்துள்ளதாக ஆக்குவதற்கு துருவிய கேரட், மிகப் பொடியாக நறுக்கிய கோஸ், பொடியாக நறுக்கிய தக்காளிப் பழம், கொத்தமல்லி இலைத் தூவிப் பரிமாறலாம். இரண்டு துண்டுகள் பிரெட் அல்லது பன் ஒரு சாலட்டுடன் மதிய உணவு அல்லது இரவு உணவாகப் பயன்படுத்தலாம். ஆரோக்கியம் நிறைந்ததாகவும் இருக்கும்.

-பவித்ரன்