டாக்டர் ஆர்.ராமகிருஷ்ணன்.

டல் நலம் இல்லாதவர்களை பாதுகாக்கத்தான் மருத்துவமனைகள் செயல்படுகின்றன.அந்த மருத்துவமனைகளே நோய்களை பரப்பும் என்று வீணான வதந்தியை ஏன் கிளப்புகிறீர்கள் என்று கோபப்படலாம்.

மருத்துவர்கள் சுகாதாரம் பற்றி நிரம்ப படித்தவர்கள்.மருத்துவ பணியாளர்கள் அடிப்படை சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு உள்ளவர்கள். மருத்துவமனை என்பது உடல் நலம் காக்கும் மையம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.ஆனால் மருத்துவமனைகள் என்பவை நோய் கிருமிகள் அற்ற சுத்தமான இடம் என்றெல்லாம் நாமாகவே கற்பனை செய்து கொள்ள முடியாது.ஆபத்தான, தொந்தரவு தரக்கூடிய நோய் தொற்றுகள் பரவ மருத்துவமனைகளும் காரணமாக இருக்கின்றன.இதற்கு Hospital acquired infection… Healthcare associated infection… என்றெல்லாம் மருத்துவர்கள் ஆங்கிலத்தில் சும்மாவா பெயர் வைத்திருக்கிறார்கள்.

உடம்பு சரியில்லை என்பதற்காகத்தான் மருத்துவமனைக்கு போகிறோம்… அங்கேயே புதிய நோய் தொற்றுகள் நம்மை தாக்கலாம் என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு உதவியாக செல்பவர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

எப்படி தற்காத்துக் கொள்வது?

* முடிந்தவரை வெளி நோயாளியாகவே இருந்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

*அவசிய,அவசர தேவைக்கு மருத்துவமனையில் தங்கலாம்.எவ்வளவு விரைவாக முடியுமோ… அவ்வளவு சீக்கிரம் மருத்துவர் அனுமதியோடு வீட்டிற்கு வந்து விட வேண்டும்.

*மருத்துவ கட்டணம் குறைவு அல்லது செலவு எதுவும் இல்லை என்பது போன்ற காரணங்களால் கூடுதலாக மருத்துவமனையில் தங்கக் கூடாது. மருத்துவமனை என்பது ஓய்வு எடுப்பதற்கு உரிய இடம் அல்ல.

* மருத்துவமனையில் எல்லா இடங்களிலும் சுற்றி பார்க்க விரும்பக் கூடாது.அது சுற்றுலா மையமும் அல்ல.

*நோயாளியை பார்க்க திருவிழா கூட்டம் போல் சாரி சாரியாக போய், மணிக்கணக்கில் உட்கார்ந்து கதை பேசி, புதிய நோய்களை இலவசமாக வாங்கி வரக்கூடாது.

* பச்சிளம் குழந்தைகளை, சிறுவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

* மருத்துவமனை கழிவறைகளை சுத்தமாக பராமரிக்க வலியுறுத்த வேண்டும்.நாமும் நமது வீட்டு கழிவறையைப் போல் சுத்தமாக வைத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

* கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

* மருத்துவமனை வளாகத்தில் யாரிடமும் நெருக்கமாக நின்று உரையாடக்கூடாது.போதிய இடைவெளி விட்டு நின்று குறைவாக பேச வேண்டும்.

* புதிதாக ஏதேனும் உடல்நல பாதிப்பு இருந்தால் தயங்காமல் மருத்துவரிடம் சொல்ல வேண்டும்.

* மருத்துவ பணியாளர்களோடு இணக்கமாக பேசி பழக வேண்டும். அவர்களின் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும்.

*சிகிச்சை தொடர்பான விவரங்களை எல்லோரிடமும் பகிர்ந்து கொண்டு விவாதிக்க வேண்டாம்.தகுதியான நபர்களிடம் கலந்து பேசுவது தவறு இல்லை.

* கூடியவரை சுட வைத்து ஆற வைத்த தண்ணீரை குடிப்பது நல்லது.