
பயம் மட்டும் அல்ல, நமது எந்த ஒரு உணர்வும் நார்மலானதுதான் மற்றும் அவசியமானதுதான்.
மகிழ்ச்சி,கொண்டாட்டம்,துக்கம், கவலை, வருத்தம், பயம், பதட்டம், குழப்பம், சந்தேகம் என அத்தனையும் சில சந்தர்ப்ப சூழல்களில் மிக அவசியமானவைகளே. அதனால் எந்த ஒரு உணர்வையும் தேவையற்றது என ஒதுக்க முடியாது. உதாரணத்திற்கு புற்றுநோய் தொடர்பான ஒரு பயம் இருந்தால் மட்டுமே அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை நாம் பின்பற்றுவோம், அந்த பயம் இல்லையென்றால் நோய் குறித்த எந்தவித கவலையில்லாமல் அத்தனை பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கைகழுவிவிட்டு
அலட்சியமாக இருப்போம்.
பயம் என்பது ஒரு உயிரினத்திற்கு தேவையான ஒரு உணர்வே.ஏன் தேவை என்றால் ஒரு நெருக்கடியை நாம் சந்திக்கும்போது அதை எதிர்கொள்ள மன ரீதியான தூண்டலுக்கும், உடல் ரீதியான ஆற்றலுக்கும் இந்த உணர்வு அவசியமானது. அப்படியென்றால் பயப்படுவது எல்லா நேரமும் அவசியமானதா என்றால் நிச்சயம் இல்லை.
பயத்தில் இரண்டு வகைகள் இருக்கின்றன:
1. ஆக்கப்பூர்வமான பயம் (Constructive fear).
2. அழிவுப்பூர்வமான பயம் (Destructive fear).
திடீரென ஏற்படும் நெருக்கடிகளில் இருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் செயல்களையும், எடுப்பதற்கான தூண்டுதல்களைத் தருவது ஆக்கப்பூர்வமான பயம் (Constructive fear.) அது ஆக்கப்பூர்வமானது, அந்த பயம் அவசியமானது. கொரோனா நோய் வந்துவிடும் என்ற அச்சத்தின் விளைவாக முக கவசம் அணிவது, தனி மனித இடைவெளியை கடைபிடிப்பது, அடிக்கடி கை கழுவது போன்றவையெல்லாம் Constructive fear விளைவாக வருவது.
இயல்பாக எழும் பயம் ,நெருக்கடியில் இருந்து காப்பாற்றுவதற்கு பதிலாக அதுவே பல நெருக்கடிகளை ஏற்படுத்தும் .அதன் விளைவாக நமது அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டால் ,அதுவே நமக்கு ஆபத்தாக மாறினால் அது அழிவுப்பூர்வமான பயம் (Destructive fear).
கொரோனா வந்து விடுமோ என பயந்து யாரையும் பார்க்காமல், யாரிடமும் பேசாமல், அத்தியாவசிய தேவைகளை கூட பார்த்துக்கொள்ளாமல். சாப்பிடாமல், தூங்காமல், வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்தால்…எப்போதும் அதே கவலையாக அதே நினைவாக இருந்து கொண்டு இறுதியில் தற்கொலை வரை சென்றால் அது Destructive fear.
நமது பயம் constructive ஆகத் தான் அதாவது ஆக்கப்பூர்வமானதாக இருக்க வேண்டுமே தவிர Destructive fear ஆக அதாவது அழிவுப்பூர்வமானதாக இருக்கக்கூடாது.பயம் மட்டுமல்ல நமது அத்தனை உணர்வுகளும் ஆக்கப்பூர்வமானதாகவே இருக்க வேண்டும்.நமது உணர்வுகளின் தேவையே அது தான்.எப்போது நமது உணர்வுகள் ஆக்கப்பூர்வமான பாதையில் இருந்து விலகி அழிவுப்பாதையில் செல்ல தொடங்குகிறதோ உடனடியாக நாம் அப்போது விழித்துக்கொண்டு சக மனிதர்களின் உதவியை
கோரலாம்.
வேறு யாரையும் விட நமது உணர்வுகளை நம்மால் விரைவாக
உணர முடியும். அதனால் அப்படிப்பட்ட உணர்வுகள் இருந்தால் உடனடியாக உதவியை கோருவது அத்தியாவசியமானது.நமது உடலில் ஏற்படும் சிறு வலியை உடனடியாக மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் நாம், மனம் மிக மோசமாக காயமடையும் நேரத்தில் கூட அதை யாரிடமும் பகிராமல் ரகசியமாக நமக்குள்ளே பூட்டிவைத்துக்கொள்கிறோம்.
உண்மையில் மனதின் பிரச்சினைகளைத் தான் நாம் உடனடியாக பகிர வேண்டும். ஏனென்றால் வெறும் பகிருவதால் மட்டுமே பல மனப்பிரச்சினைகள் முழுமையாக சரியாகிவிடுவதை நான் பல நேரங்களில் பார்த்திருக்கிறேன்.

