
– முனைவர் மா.ஆ.தீபா, M.Sc,M.Phil,Ph.D. உதவிப் பேராசிரியர்,
தாவரவியல் துறை, அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி),
கோயம்புத்தூர்.
மூலிகைகள் நம் வாழ்வியலில் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றது.பல மூலிகைகள் நம் அன்றாட வாழ்வில் உணவாகவும், ஆரோக்கியத்தை காக்கவும் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது. மஞ்சள்,வேம்பு, எலுமிச்சை,துளசி போன்ற பல்வேறு இயற்கை தாவரங்களை தினமும் நாம் பயன்படுத்தி வந்தாலும்,பல நேரங்களில் நாம் பயன்படுத்தும் மூலிகை சரியானதுதானா என கண்டறிவது ஒரு சவாலாகவே உள்ளது.கை வைத்தியம் எனப்படும் கிராம வைத்திய முறைகளில் தலைமுறை தலைமுறையாக சில தாவரங்கள் ஒரு குறிப்பிட்ட நோயை குணமாக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இருப்பினும் மாறிவரும் கால சூழ்நிலையில், அழிந்து வரும் கை வைத்திய முறைகளால் இன்றைய தலைமுறையினருக்கு சரியான மூலிகைகளை கண்டறிவது என்பது கடினமாக உள்ளது

வசம்பு,அதிகம் பெயர் சொல்லப்படாத ஆனால் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் ஒரு மூலிகையாகும். சில நம்பிக்கைகளின் காரணமாக பல வட்டார வழக்குகளிலும் வசம்பின் பெயர், “பெயர் சொல்லாதது” என்றே அறியப்படுகிறது. மேலும் வசம்பிற்கு பிள்ளை வளர்த்தி, ஸ்வீட் பிளாக் என்னும் பெயர்களும் உள்ளன. தமிழ் கலாச்சாரத்தில், குழந்தை வளர்ப்பில் இதன் பங்கு மிக அதிக அளவில் இருந்ததால் இதனை பிள்ளை வளர்த்தி என்றும் கூறுவர்.
பிள்ளை வளர்ப்பில் இது முக்கிய பங்கு வகித்தாலும் இதன் தாயகம் கஜகஸ்தானில் உள்ள இர்ட்டிஷ் (lyrtsh) ஆற்றுப்படுகையாகும்.இங்கிருந்து தோன்றி இன்று உலகம் முழுவதும் வளர்க்கப்படும் தாவரமாக உள்ளது.
இத்தாவரம் அக்கோரஸ் கலாமஸ் (Acorus calamus) என்னும் தாவரவியல் பெயரால் உலகெங்கும் அறியப்படுகிறது. இந்த தாவரம் இனிப்புடன் கூடிய அடர் நறுமணத்தை கொண்டதாக இருப்பதே இதன் மிகப்பெரிய சிறப்பாகும்.முழு தாவரமும் வேர்கிழங்கும் நறுமணத்தை கொண்டுள்ளது. இலைகளும் வேர்கிழங்கும் மருத்துவ குணத்திற்காக நன்கு அறியப்படுகிறது.
இத்தாவரத்தின் நறுமணம் இனிப்பு சுவை கலந்ததாக இருக்கும். இதனாலேயே ஆங்கிலத்தில் இது ஸ்வீட் பிளாக் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக வசம்பு செடி, நீர் நிலைகளின் அருகிலும், குளக்கரைகளிலும் ஆற்றுப்படுகைகளிலும், ஏரிக் கரைகளிலும், செழிப்பாக வளர்கிறது.பல்வேறு நாடுகளிலும் நிலத்தில் பயிர் செய்யப்பட்டாலும், நீர்நிலைகளுக்கு அருகில் வளரும் தாவரங்களே பூக்கின்றன.இதன் தன்மை சூடு,கசப்பு, காரம் மற்றும் நெடியுடன் கூடிய கலவையாக இருக்கும்.உலர்ந்த வேர்க் கிழங்கு செங்குத்தான சுருக்கங்களை கொண்டிருக்கும். வெளிர் மஞ்சள் முதல் அடர் பழுப்பு நிறத்திலும்,சில நேரங்களில் பழுப்பு நிறத்திலும் இருக்கும்.இதன் உட்புறம் மென்மையானதாகவும் வெள்ளை நிறத்தையும் கொண்டிருக்கும்.
வசம்பு தாவரத்தில் பல்வேறு வகையான சைட்டோடைப்புகள் உள்ளன.அதாவது மரபணு எண்ணிக்கையில் வேறுபாடு உடைய தாவரங்களாக இருக்கும்.இருமய, மும்மய மற்றும் நான்மய என்ற எண்ணிக்கையில் மரபணுக்களின் எண்ணிக்கை இருப்பதால், மருத்துவ மூலக்கூறுகளின் தன்மையும் இவற்றில் வேறுபடுகிறது. மும்மய மரபணுக்களைக் கொண்ட கலாமஸ் வகை மலட்டுத்தன்மை உடையதாகவும் மிக அதிகப்படியான பீட்டா அஸ்ரோனை உள்ளடக்கியதாகவும் உள்ளது. இது மிக அதிகமான நச்சுத்தன்மை கொண்டது.
இருமய மரபணுக்களைக் கொண்ட அமரிக்காணஸ் வகை இனப்பெருக்க வளம் மிக்கதாகவும் மிகவும் பாதுகாப்பானதாகவும் அறியப்படுகிறது. இது வட அமெரிக்காவில் காணப்படும் வகையாகும். நான்மய மரபணுக்களைக் கொண்ட அங்கஸ்டேட்டஸ் வகை ஆசிய நாடுகளில் அதிகமாக காணப்படுகிறது. ஆனால்,இவற்றில் நச்சுத்தன்மை கொண்ட,கேன்சர் நோயை உண்டாக்கும் மூலக்கூறுகள் இல்லை.இதுவே நாம் ஆசிய நாடுகளில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் வகையாகும்.
இதனாலேயே அகோரஸ் காலமஸ் அல்லது ஸ்வீட் ஃபிளாக், ஆயுர்வேதம்,சீன மற்றும் பிற மருத்துவ முறைகளிலும் பெரும்பாலும் பங்கு கொண்டுள்ளது. பாரம்பரியமாக ஞாபக சக்தியை தூண்டவும், மனச்சோர்வை போக்கவும், செரிமான கோளாறுகளான வாயுத்தொல்லை, பசியின்மை மற்றும் அஜீரணம், தசைப்பிடிப்பு மற்றும் வலி நிவாரணியாகவும் (ஆன்டிஸ்பாஸ்மோடிக்), இருமல், மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் தோல் நோய்களுக்கு ஒரு வெளிப்புற மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.
பொதுவாக நச்சுத்தன்மை கொண்ட வசம்பின் இலை மற்றும் வேர்கிழங்கில் எண்ணெய் பொருள் உள்ளது. இதுவே இனிப்புத் தன்மை கொண்ட நறுமணத்திற்கும் காரணமாக உள்ளது. இந்த எண்ணெயில் 75% பீட்டா அசரோன் மற்றும் மித்தையில் ஐசோயுஜினால் 40%, மற்றும் ஆல்பா அசரோன், சப்போனின்கள், லிப்டின்கள், செஸ்கியூடெர்பினாயுடுகள் என பல்வேறு முக்கிய மருத்துவ மூலக்கூறுகள் நிறைந்துள்ளன. இதில்,பீட்டா அசரோன் மிக வீரியமிக்க வேதிப்பொருளாகும். இது ஒரு சிறந்த பூச்சிக்கொல்லியாக பயன்படுகிறது.
நவீன ஆராய்ச்சி முறைகளின்படி பீட்டா அசரோன் கேன்சர் நோயை உண்டாக்கும் என கண்டறியப்பட்டுள்ளதால் அமெரிக்காவின் உணவு மற்றும் மருத்துவ மேலாண்மை நிறுவனமான USFDA இதனை பயன்படுத்த அதிக கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ஆனால், இம்மூலக்கூறுகளின் கலவையானது இத்தாவரம் வளரும் இடம்,தாவரத்தின் வயது,காலநிலை மற்றும் வளர்க்கப்படும் தாவர வகை இவற்றைக் கொண்டு மாறுபடும். இந்திய அல்லது ஆசிய வசம்பில் எண்ணெய் தவிர அதிகப்படியாக க்ளைகோசைடுகள், பிளாவானைடுகள், சப்போனின்கள், சீனார்கள் மற்றும் வழவழப்பு தன்மை கொண்ட பசை பொருட்கள் மற்றும் கசப்பு காரணிகளும் நிறைந்துள்ளன. இந்த எண்ணெயில் கேலமின், கேலமினால், அசரோன்,மற்றும் செஸ்கியூடெர்பினாயுடுகளே மிக அதிக அளவில் உள்ளன. எனவே இதன் நச்சுத்தன்மை குறைந்து மருத்துவத் தன்மை கூடுதலாக உள்ளது.
எனவே,வசம்பை பயன்படுத்த பல்வேறு வழிகளை நம் முன்னோர்கள் மேற்கொண்டனர். வேர் கிழங்கை சுட்டு சாம்பலாகப் பயன்படுத்தினர். அவ்வாறு பயன்படுத்தும்போது அதன் வீரியம் குறைந்து மருத்துவ குணம் கொண்டதாக மாறுகிறது. வசம்பானது காய்ச்சல்,ஆஸ்துமா, இருமல் போன்ற நோய்களுக்கு மருந்தாகவும், வடிநீராகவும் பயன்படுத்தப்பட்டது. மேற்கத்திய நாட்டுப்புற மருத்துவத்தில் அஜீரண கோளாறுகளுக்கும், வயிறு உப்பல் மற்றும் வாயு தொல்லைகளுக்கும் பயன்படுத்தப்பட்டது.
இந்திய நாட்டுப்புற மருத்துவத்திலும், ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவ முறைகளிலும் இது மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைக் குறைக்க ஒரு நரம்பு ஊட்ட மருந்தாகவும் மற்றும் மயக்க மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.பாரம்பரிய பயன்பாடுகளில் கால்-கை வலிப்பு, வலிப்பு (குழந்தைகளில் காய்ச்சல் வலிப்பு உட்பட) மற்றும் மன நோய்களுக்கும், அத்துடன் ஞாபக சக்தி மற்றும் அறிவாற்றலை மேம்படுத்தவும் (நூட்ரோபிக் விளைவு) பயன்படுத்தப்படுகிறது.ஆயுர்வேத மருத்துவத்தில் வசம்பு வடிநீராகவும் பொடியாகவும், பயன்படுத்தப்படுகிறது.
இந்திய சந்தைகளில் கிடைக்கும் வசம்பிற்கு மாற்றாக கலப்பட பொருள்கள் உள்ளன. பேரரத்தை(Alpinia galanga), சிற்றரத்தை (Alpinia officinarum) மற்றும் கோஷ்டம் (Costus speciosus) என்னும் தாவரங்கள் கலப்படமாக வியாபாரம் செய்யப்படுகிறது. இத்தாவரங்களின் வேர்கிழங்கும் நறுமணம் கொண்டது என்பதாலும், வெளிப்புறத் தோற்றத்தில் வசம்பை ஒத்ததாக இருப்பதாலும் சில நேரங்களில் இம்மூன்று கிழங்குகளுமே வசம்பிற்கு கலப்பட பொருளாக விற்கப்படுகிறது. ஆனால்,இவை கலப்பட பொருளாக பயன்படுத்தும்போது வசம்பிலிருந்து கிடைக்கப்பெறும் மருத்துவ குணங்கள் நமக்கு கிடைப்பதில்லை.
ஆனால், நச்சுத்தன்மை கொண்ட தாவரங்கள் இல்லை என்பதால் அச்சப்பட தேவையில்லை. இருப்பினும் வசம்பின் இனிப்பு கலந்த நறுமணம், காய்ந்த கிழங்கில் நீள்வாக்கில் ஏற்படும் சுருக்கம் மற்றும் காய்ந்த கிழங்கின் நடுவில் காணப்படும் வெண்மையான, மென்மையான பகுதி ஆகியவற்றைக் கொண்டு நாம் சரியான வசம்பை பயன்படுத்துகிறோமா என்பதை எளிதில் அறிந்து கொள்ளலாம்.
மேலும், பிறநாடுகளில் வசம்பிற்கு விதித்திருக்கும் பயன்பாட்டு கட்டுப்பாடு என்பது அங்கு உள்ள வசம்பு வகைகளின் நச்சுத்தன்மையை பொறுத்ததே ஆகும். ஆனால், இந்தியாவிலும் ஆசியாவிலும் நாம் பயன்படுத்தும் வசம்பு நச்சுத்தன்மை கொண்ட பொருள் இல்லை என நிரூபிக்கப்பட்டுள்ளதால் நம் பாரம்பரிய முறைப்படி இதனை நாம் பயன்படுத்துவதில் எந்த தடையும் இல்லை.இருப்பினும் மிக வீரியமிக்க ஒரு மருத்துவ பொருள் என்பதால் மிகக் குறைந்த அளவிலேயே பயன்படுத்த வேண்டும்,அல்லது மருத்துவரின் ஆலோசனைப்படியே பயன்படுத்துவது தான் நல்லது.
எனவே,சரியான வசம்பை சரியான அளவில் பயன்படுத்தி நாமும் நல்வாழ்வு பெறுவோமாக.

