விரலுக்கு ஒரு கவசம்போல் அமைந்துள்ளது நகம். இது கெரட்டின்(Keratin) எனும் புரதப்பொருளால் ஆனது.பளிச்சென்று தெரியும் வழுவழுப்பான பகுதிதான் நகத்தின் உறுதியான பாகம். இதற்குள் நரம்புகளோ,ரத்தக்குழாய்களோ இல்லை. இந்த வெளிநகத்துக்கு அடியில் ரத்த ஓட்டம் உள்ள திசுக்களால் ஆன ஒரு படுக்கை இருக்கிறது.இது நகத் தளம்(Nail bed). நகத்துக்கு உணவும் உணர்வும் உயிரும் தருகிற ஓர் உயிர்ப் படுக்கை இது.

விரலில் தோலும் நகமும் இணையும் இடத்துக்குக் கீழே மறைந்திருப்பது நக வேர்(Nail bud). இதுதான் நகத்தை முளைக்க வைக்கிறது.இந்த இடத்தில் நரம்புகளும் ரத்தக்குழாய்களும் உள்ளன.இதனால், இந்தப் பகுதியை அழுத்தினாலே வலிக்கும்.இங்குள்ள செல்கள் வளரும்போது, பழைய செல்கள் முன்னால் தள்ளப்படுகின்றன. இந்தச் செல்கள் நகத்தளத்தைக் கடந்து வளரும்போது, அவற்றுக்கு ஊட்டச்சத்து வழங்கும் நகத்தளத்தின் தொடர்பை இழந்துவிடுவதால், வெள்ளையாக மாறுகின்றன.இந்தப் பகுதியில் ரத்தக்குழாய்களும் இல்லை;நரம்புகளும் இல்லை என்பதால், இந்தப் பகுதி இறந்துவிடும். இதனால்தான் நுனி நகத்தை வெட்டும் போது நமக்கு வலிப்பதில்லை.

நகம் சொத்தை ஆகிறதே…ஏன்?

நகத்தின் அழகைக் கெடுக்கும் நோய் நகப்படை அல்லது நகச் சொத்தை(Fungal Nail).(Trichophyton rubrum).பூஞ்சைக் கிருமிகளால் ஏற்படும் இந்த நோய், கை விரல்களைவிட கால் விரல்களையே அதிகமாகப் பாதிக்கும்.குறிப்பாக, தண்ணீரிலேயே விரல்கள் ஊறிக்கொண்டிருந்தால்,இந்த நோய் வரும் சாத்தியம் அதிகம்.

கைவிரல் நகங்கள் வெள்ளை நிறத்தில் ஸ்பூன்போல குழிவிழுந்து (Koilonychia) தோன்றும். இரும்புச்சத்து குறைபாடு காரணமாக ரத்தசோகை ஏற்படுமானால், இதுபோன்று நகங்கள் காணப்படும். கைவிரல் நகங்கள் கிளிமூக்கு போல வீங்கிக்கொள்வதும் உண்டு.இதை கிளப்பிங் நெய்ல்ஸ்(Clubbing nails) என்று சொல்கிறார்கள். இதயக் கோளாறு, நுரையீரல் கோளாறு, குடல் நோய்,கல்லீரல் நோய்,பிறவிக் கோளாறு, இதயஉறை அழற்சி நோய்,புற்றுநோய், செரிமானக் கோளாறு ஆகிய உடலில் மறைந்திருக்கும் எட்டு நோய்களை வெளிக்காட்டும் ஒரு முக்கியமான அறிகுறி இது.

நகத்தின் மேல் பகுதி வழக்கமான நிறத்திலோ அல்லது வெள்ளையாகவோ இருந்து,கீழ்ப்பகுதி மாநிறத்தில் இருக்குமானால் அது சிறுநீரக நோய் இருப்பதை வெளிக்காட்டும் அறிகுறி.நகம் நீல நிறத்துக்கு மாறியிருந்தால்,அது ரத்த ஓட்டம் சரியில்லை என்பதைக் காட்டுகிறது.

குழந்தைகளுக்கு இதயத்தில் பிரச்னை இருந்தால்,நகங்கள் நீல நிறத்தில் தோன்றும்.நகம் முழுவதுமே மஞ்சள் நிறத்தில் காணப்பட்டால்,அது மஞ்சள் காமாலைக்கான அறிகுறி.உடலில் கால்சியம், வைட்டமின்,புரதம், இரும்புச்சத்து போன்ற சத்துகள் குறைந்தால், நகத்தின் குறுக்கே அழுத்தமான வெள்ளைக்கோடுகளோ வெள்ளைப் புள்ளிகளோ தோன்றுவதுண்டு.

இந்த அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை அவசியம்.நகங்களை கடிக்கக்கூடாது.நக வெட்டியினால் மட்டுமே வெட்ட வேண்டும்.

-குணா, ஹெல்த் அண்ட் பியூட்டி.Health and beauty