ஸ்ரீ மாதா கேன்சர் கேர்

டாக்டர் டி. விஜயஸ்ரீ மகாதேவன் பேட்டி
சென்னை பெருங்குடிக்கு அருகில் உள்ள துரைப்பாக்கத்தில் இயங்கி வருகிறது ஸ்ரீ மாதா கேன்சர் கேர் தன்னார்வ தொண்டு நிறுவனம். ஒரு லட்சம் பெயரில் ஒருவருக்கு புற்றுநோய் இருந்தது. இன்று சராசரியாக ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு புற்றுநோய் வரக்கூடிய மிக மோசமான அபாய நிலையில் இருக்கிறோம்.
புற்றுநோயை வரும்முன் தடுக்க முடியும்;வந்தபின் குணமாக்கவும் முடியும் என்று மருத்துவ உலகம் நம்பிக்கை அளித்தாலும் புற்று நோய் வந்து இரண்டாவது மூன்றாவது நிலையில்தான் சிகிச்சைக்கு வருகிறார்கள். புற்றுநோய் முற்றிவிட்டது ;இனி சிகிச்சை அளிக்க முடியாது என மருத்துவர்கள் கை விரிக்கும் போது எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? நான் என்ன பாவம் செய்தேன்? மிச்சமிருக்கும் வாழ்நாளை எப்படி கழிப்பேன்? என மரண வலியில் துடிக்கும் மக்கள்…
மரணம் வேண்டும்… மரணவலி வேண்டாம் …?!என்று ஆதரவற்ற நிலையில் உள்ள ஏழை புற்று நோயாளிகளுக்கு அடைக்கலம் தந்து வலி தணிப்பு சிகிச்சை அளித்து ஆதரவு கரம் நீட்டுகிறது ஸ்ரீ மாதா கேன்சர் கேர் தன்னார்வ தொண்டு நிறுவனம்.
இந்த அமைப்பை உருவாக்கி சேவை செய்து வரும் டாக்டர் டி. விஜயஸ்ரீ மகாதேவன் .மதர் தெரசா விருது பெற்ற வரை நமது இதழ் சார்பாக சந்தித்து பேசினோம் .அவரது பேட்டியிலிருந்து…
புற்றுநோய் முன்பைவிட அதிகரிக்க என்ன காரணம் ?
எங்கோ ஒருவருக்கு புற்றுநோய் இருக்கிறது என்று கேள்விப்பட்டிருப்போம்.இப்போது குடும்பத்தில் ஒருவருக்கு என்ற மிக மோசமான ஆபத்தான நிலை ஏற்பட்டிருக்கிறது நமது. வாழ்க்கைமுறை ஆரோக்கியமாக இல்லை.
பசித்த பின் சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்ந்தது அந்தக் காலம். இப்போது ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிட்டு ஃபாஸ்ட் ஆக போகிற காலமாக மாறிவிட்டது.முன்பு வாழ்வதற்காக சாப்பிட்டோம்; இப்போது சாப்பிடுவதற்காகவே வாழ்கிறது ஒரு கும்பல். நாக்கு சுவைக்கு அடிமையாகி உணவை தேடித்தேடி அலைகிறார்கள்.
சுற்றுப்புற சூழல் பாதிப்பு, புகைப் பழக்கம், குடிப் பழக்கம் ,பாரம்பரியம், வறுமை, போதிய உடற்பயிற்சி இல்லாதது… இப்படி பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
புற்றுநோய்க்கு சிறந்த சிகிச்சை முறைகள் இருக்கின்றனவா?
வருமுன் தடுப்பதே சிறந்த தீர்வாக இருக்கும்.சத்தான உணவு ;நல்ல வாழ்க்கை முறை; சுத்தம் சுகாதாரத்திற்கு முன்னுரிமை; ஏதாவது அறிகுறி இருந்தால் தாமதமில்லாமல் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். புற்றுநோய் ஏதாவது ஒரு விதத்தில் நமக்கு அறிகுறிகளை காட்டும் .அந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல் சிகிச்சை எடுத்துக் கொண்டால் நோய் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம் .புற்று நோய் வந்தவர்களுக்கு கீமோதெரபி; ரேடியேஷன் தெரபி; தேவைப்பட்டால் இரண்டையும் சேர்த்தே கொடுப்பார்கள். அறுவை சிகிச்சையும் செய்வார்கள். புற்றுநோய் பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டு மகிழ்ச்சியோடு வாழ்பவர்கள் உண்டு
புற்று நோயால் இறப்பவர்களும் அதிகம்தானே…?
ஆமாம். முற்றிய நிலையில் சிகிச்சை பலன் அளிப்பதில்லை. எஞ்சிய வாழ்நாளை எதிர்கொண்டு வாழ முடியாமல், வலியை தாங்க முடியாமல் வேதனைப்படுவார்கள்.
ஸ்ரீ மாதா கேன்சர் கேர் எவ்வாறு உதவுகிறது?
புற்றுநோயின் தாக்கத்தால் மருத்துவர்களால் கைவிடப்பட்ட ஏழை நோயாளிகளுக்கு உதவிக்கரம் நீட்டுகிறோம். இலவசமாக தங்குவதற்கு இடம், உணவு தந்து தேவையான வலி தணிப்பு சிகிச்சைகளையும் தருகிறோம். மருத்துவர், செவிலியர் அருகில் இருந்து உதவுவார். புற்று நோய் தவிர ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்,வலிப்பு… இன்னும் பல பிரச்சனைகள் வருவதால் எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து சிகிச்சை அளிக்கிறோம் .லேப் வசதி,ஐ .சி .யு, ஆம்புலன்ஸ் உட்பட ஒரு மருத்துவமனையையே நடத்துகிறோம்.
ஆதரவற்றவர்களுக்கும்உதவுவுகிறீர்களா?
ஒரு சிலர் தங்கள் உறவினர்களை சேர்த்துவிட்டு நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்,இனி நாங்கள் வரமாட்டோம் என்று சொல்வார்கள். ஆதரவற்றவர்களுக்கு இறுதிவரை உதவுவதோடு தேவைப்பட்டால் அவர்களது மதச்சடங்குப்படி இறுதி அஞ்சலி செலுத்தி அடக்கம் செய்வதையும் எங்கள் கடமையாக செய்து வருகிறோம்.
புற்று நோய் தடுப்புக்கு என்ன செய்வது?
நாங்கள் தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறோம். பெண்களுக்கு மெமோகிராம் பரிசோதனையை இலவசமாக செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். பெண்கள் மார்பக புற்றுநோயை தடுக்க முடியும்.குறிப்பிட்ட கால இடைவெளியில் சுயமாக பரிசோதித்து ஏதாவது கட்டிகள் இருந்தால் தயங்காமல் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.ஒரு சில பெண்கள் வீட்டில் உள்ளவர்களிடம் கூட சொல்லாமல் முற்றிய நிலையில் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சைக்கு வருகிறார்கள்.
வேறு என்ன வழி இருக்கிறது?
சுகாதார கல்வியை பள்ளிப் பருவத்திலேயே உருவாக்கவேண்டும். படிப்பு முக்கியம் தான்;அதைவிட முக்கியம் ஆரோக்கியமான வாழ்க்கை. பள்ளிக்கூடத்தில் சுகாதார மேம்பாட்டை தொடர்ச்சியாக சொல்லித்தர வேண்டும்.நமது உடல் எப்படி இயங்குகிறது …எப்படி பாதுகாக்க வேண்டும்… சுகாதாரமாக இருப்பது எப்படி… எந்த உணவை எப்படி சாப்பிட வேண்டும்… சுற்றுப்புற சூழலை மாசுபடுத்தாமல் வாழ்வது எப்படி…மன அமைதி, உடல் சுத்தம் எல்லாம் கற்பிக்கப்பட வேண்டும்.
விளையாட்டும் யோகாசனம் முக்கியம் அல்லவா?
பள்ளியில் குழந்தைகளை விளையாட அனுமதிக்க வேண்டும். யோகாவை கற்றுக் கொடுத்தால் வாழ்நாள் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருப்பார்கள். மன அமைதிக்கு தியானம் செய்யவும் சொல்லித்தர வேண்டும். யோகாவும் தியானமும் வாழ்க்கையை எதிர்கொள்ள துணிவையும் தெளிவையும் தரும். இதன் மூலம் மிகச் சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும்.
சிறுநீரகம் செயலிழந்ந வர்களுக்கு இலவசமாக டயாலிசிஸ் செய்வதாக அறிந்தோம்…
புற்றுநோயைப் போலவே சிறுநீரகச் செயலிழப்பும் ஒருவரை நிலைகுலையச் செய்துவிடும். சிறுநீரகம் செயலிழந்து விட்டால் வாரம் ஒருமுறை அல்லது இருமுறை டயாலிசிஸ் செய்தாக வேண்டும். பணக்காரர்களே தொடர்ந்து செலவு செய்ய முடியாமல் அவதிப்படுவார்கள். ஏழைகளின் நிலையை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நம் விதி இதுதானா? என்று துயரத்தில் இருப்பவர் களுக்கு உதவ வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் 15 டயாலிசிஸ் எந்திரங்களை செயல்படுத்த இருக்கிறோம். இதுவும் கட்டணமில்லா சேவைதான்.
நோயாளிகளுக்கு உதவும் லட்சியம் உங்களுக்கு எப்படி வந்தது?
நான் ஒரு பத்திரிகையாளர். மயிலை எக்ஸ்பிரஸ் என்ற பத்திரிகையை நடத்தி வந்தேன். இந்தியாவிலேயே புற்று நோய் சிகிச்சையில் சாதனை செய்துவரும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு அடிக்கடி போவேன். அந்த நிறுவனத்தை நடத்தி வந்த டாக்டர் சாந்தாவை சந்தித்து பேசியிருக்கிறேன். அந்த மருத்துவமனையில் நோய் முற்றிய நிலையில் வீட்டிற்கும் போக முடியாமல் வலியும் பொறுக்க முடியாமல் தவிக்கும் வெளியூர் நோயாளிகள், ஏழைகள் படும் வேதனையை கண்டு பொறுக்கமுடியாமல் பல நாள் தூக்கமில்லாமல் தவிர்த்திருக்கிறேன். அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் நல்ல எண்ணம் கொண்டவர்களை அணுகி ஆதரவு கேட்டேன்.பலரும் உதவ முன் வந்தார்கள். ஆரம்பத்தில் சிறிய வாடகை கட்டிடத்தில் நடத்தினோம். தற்போது துரைப்பாக்கத்தில்சொந்த கட்டிடத்தில் இயங்கி வருகிறோம்.
உங்கள் மையத்திற்கு உதவி கேட்டு எப்படி வருகிறார்கள்?
தமிழ்நாடு மட்டுமல்ல தென் மாநிலங்களை சேர்ந்தவர்கள் வருகிறார்கள். அரசாங்க மருத்துவமனைகள், பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனை,மற்றம் தனியார் மருத்துவமனைகள் சிரமப்படுபவர்களை இங்கே அனுப்புகிறார்கள். ஏழைகளுக்கு உதவ வேண்டும்…இந்த சேவையை இறை பணியாக செய்து வருகிறேன் என்றார் டாக்டர் டி. ஜெயஸ்ரீ மகாதேவன் .
வாழ்த்து சொல்லி விடைபெற்றோம்.
சந்திப்பு:கு. பவித்ரன்

