புதிய நம்பிக்கை – 7

ஆனந்த சிவா

சென்னையில், சில வாரங்களுக்கு முன்னால் ஊடகங்களில் வெளியான ஒரு செய்தியை படித்த யாராயிருந்தாலும் அவர்களை முற்றிலுமாக உலுக்கிப் போட்டிருக்கும்… எத்தனையோ சம்பவங்கள் தினம் தினம் நம்மைக் கலங்கடித்துக் கொண்டுதான் இருக்கின்றன… ஆனாலும், அந்தச் சம்பவம் மனிதர்களுடைய சிந்தனைகள் சீரழிந்து போனதை அப்பட்டமாகச் சொல்லியது…

அந்தச் செய்தியைப் படித்தவுடன் அதை நம்புவது கடினமாயிருந்தது… ஒரு பெரிய தினசரி பத்திரிகையில் அவ்வளவு பெரிய செய்தியாக அதைப் வெளியிட்டிருக்கிறார்கள் என்றால், நிச்சயமாக அந்தச் செய்தி உண்மைச் செய்தியாகத்தான் இருக்க முடியும் என்று கொஞ்சம் கொஞ்சமாகத்தான் என் மூளை உணர ஆரம்பித்தது…

நிகழ்வு இதுதான்…

ஒரு அம்மாவுக்கு பெண் குழந்தை (செல்வி என்று ஒரு பெயர் வைத்துக் கொள்ளலாம்) பிறக்கிறது… பிரசவத்தின் போது அம்மா இறந்து விடுகிறார்… சில நாள்களிலேயே அப்பாவும் இறந்து விடுகிறார்… குழந்தை செல்விக்கு ஏற்கனவே ஒரு அக்காவும், இரண்டு அண்ணன்களும் இருக்கிறார்கள்… அனாதைகளாகிவிட்ட அவர்களைச் சில சொந்தக்காரர்கள் பார்த்துக் கொண்டார்கள்…

கைக் குழந்தையான செல்வியையும் வளர்ப்பதென்பது அவர்களுக்கு மிகவும் சிரமமாக இருந்த சூழலில், ஓரிரு மாதக் குழந்தையாக இருந்தவளை, ஒரு குடும்பம் தத்து எடுத்துக் கொள்ள ஆசைப்பட, மகிழ்ச்சியோடு செல்வியை தத்து கொடுத்து விடுகிறார்கள்…

ஏற்கனவே இரண்டு சிறுவர்கள் இருந்த நிலையில் பெண் குழந்தை செல்வியை தத்தெடுத்துக் கொண்டார்கள்… விபரம் தெரிந்த பையன்களும் தங்கை வந்ததில் மகிழ்ச்சியடைந்தார்கள்…

செல்வியைத் தத்தெடுத்த பெற்றோர்கள் தங்கள் குழந்தையைப் போலவே, ஒரு குறையும் இல்லாமல் வளர்த்தார்கள்… கான்வெண்ட் படிப்பு, சிறந்த தனியார் கல்லூரியில் படிப்பு என படிக்க வைத்தார்கள்… அண்ணன்களும் அவளை தத்தெடுத்த தங்கையைப் போல இல்லாமல், கூடப்பிறந்த சகோதரியைப் போலவே அன்பு காட்டினார்கள்… அண்ணன்கள் இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்தது…

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சூழலில், செல்வி திடீரென கர்ப்பம் அடைந்தாள்… அவளுடைய வளர்ப்பு அண்ணன்களில் ஒருவனுக்கு தெரிந்து அவளை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று அவள் கருவைக் கலைத்தான்… அந்த அனாதைக் குழந்தையான செல்விக்கு தன் கர்ப்பத்துக்கு யார் காரணம் என்பதுகூட தெரியாத அவலம்…

தன்னை வளர்த்த தாயிடம் நடந்த கொடுமைகளைச் சொல்லி அழுதாள் செல்வி… அந்தத் தாய், ’’அதையெல்லாம் பெரிய பிரச்னையாக்காத… அனுசரிச்சுப் போ…’’ என்று எவ்விதத் தயக்கமும் இல்லாமல் சொன்னாள்…

செல்விக்கு அந்த நரகத்தில் இருந்து எப்படி விடுபடுவது என்றும் புரியவில்லை..? கர்ப்பம், கருக்கலைப்பு, மீண்டும் செக்ஸ் தொல்லைகள் என்று தொடர்ந்த நிலையில், ஒரு முடிவெடுத்தாள்…

செல்வி தன்னுடைய உடன் பிறந்த அக்காவிடம் கைபேசியில் தனக்கு நடந்த கொடுமைகளைச் சொன்னாள்… தன் தங்கை வசதியாக, மகிழ்ச்சியாக வாழ்கிறாள் என்று நினைத்துக் கொண்டிருந்த அந்த அக்காள் அதிர்ந்தாள்…

”அக்கா… நான் வயசுக்கு வந்து ஒருசில மாசம் வரைக்கும் என் வாழ்க்கை ரொம்ப ரொம்ப நல்லாயிருந்துச்சி… நான் மகிழ்ச்சியா இருந்தேன்… என்ன வளத்தவங்க பெத்த பொண்ணப் போலத்தான் வளத்தாங்க… அண்ணங்காரங்களும் கூடப்பொறந்த தங்கச்சி மாதிரிதான் பழகுனாங்க… ஆனா..? வயசுக்கு வந்த ஒருசில மாசத்துல எல்லாமே தலைகீழா மாறிப்போச்சி.”

”எனக்கு அப்பாவா இருந்தவரே என்னய சீரழிச்சாரு… வெளிய சொன்னா கொன்னுடுவேன்னு மெரட்டி, நெனச்சப்பல்லாம் என்னய அனுபவிச்சாரு… அதுலயிருந்து நான் மீண்டு வர்றதுக்குள்ள, அடுத்த கொடுமையும் ஆரம்பிச்சுது… பெரிய அண்ணனுக்கு விஷயம் தெரிஞ்சிடுச்சி… அவன் என்னக் காப்பாத்துவான்னு நம்புனேன்… ஆனா, அவனும் என்னய அனுபவிச்சுட்டு, மெரட்டிட்டுப் போனான்… அதோட முடியல… சின்ன அண்ணனுக்கும் விஷயம் தெரிஞ்சி அவனும் என்னய சீரழிச்சான்… நான் யாருக்குக் கர்ப்பமானேன்னே தெரியல..”

தன் தங்கையை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று புகார் அளிக்க, இப்பொழுது அந்த வளர்ப்பு அப்பா, அம்மா, அண்ணன்கள் என அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்கள்..! செல்வி ஒரு பெண்கள் காப்பகத்தில் இருக்கிறாள்..!

படிக்காத பாமர மக்கள், “எப்பா… எதாருந்தாலும் கொஞ்சம் முன்ன பின்ன யோசிச்சி செய்யிப்பா..” என்பார்கள்… ஆனால், இன்று படித்தவர்கள், படிக்காதவர்கள் என யாரிடமும் ’முன் பின் யோசிக்கும்’ அந்தப் பழக்கம் இல்லாமலேயே போய்விட்டது…

‘உணர்ச்சித் தூண்டுதலுக்கு ஆளாகி, செய்யும் செயலால் நாளை என்ன நடக்கும் என்பதைப் பற்றியெல்லாம் சிந்திக்க முடியாமல் வாழும் மக்கள் அதிகரித்துக் கொண்டே போகிறார்கள்..! நாளைய சமூகத்தைப் பற்றிச் சிந்திக்கும் எவருக்கும் இது அச்சத்தைக் கொடுக்கக் கூடிய செய்தி என்பதை சொல்லியாக வேண்டும்…

படிக்க வேண்டும், சிந்திக்க வேண்டும் என்ற அந்தப் பழக்கம் இல்லாமலே போவதால் ஏற்படும் கொடூரமான நிகழ்வுதான் செல்வி பற்றி குறிப்பிடப் பட்டிருக்கும் சம்பவமும்…

ஒரு நிமிடம், அந்தக் குழந்தை செல்வியைப் பற்றிச் சிந்தித்திருக்கலாம்… தாங்கள் செய்யும் தவறுகள் தெரிய வந்தால் தங்களின் வாழ்க்கை என்னவாகும்..? என்று சிந்திக்க முடிந்திருந்தால் அப்பா, அம்மா, அண்ணன்கள் என்று அந்த நான்கு பேரும் இன்று வாழ்க்கையைத் தொலைத்திருக்க வேண்டியதில்லை… அது மாட்டுமல்ல, மிகக் கொடூரமான அந்த இரண்டு அண்ணன்களின் மனைவிகளும் குழந்தைகளும் ஒரு தவறும் செய்யாமல் பாதிக்கப்படுகிறார்கள்..?

கைகளில் மொபைல் இல்லாமல், செய்தித் தாள்கள், புத்தகங்கள் மட்டுமே நம்மிடம் இருந்த போது இப்படிப்பட்ட கீழ்த்தரமான சம்பவங்கள் இல்லை… எதைச் செய்யும் பொழுதும் அதனால் மற்றவர்கள் பாதிக்கப் படக்கூடாது என்ற உணர்வும் அக்கறையும் இருந்தது… அந்தத் தவறான செயல் வெளியில் தெரிய வந்தால், நடக்கும் விபரீதங்களைப் பற்றிச் சிந்திக்க முடிந்தது… மூளை, முன்னும் பின்னும் சிந்தித்தது… நல்லது, கெட்டதை உணர்ந்தது, உணர்த்தியது… அதுதான் மூளையின் சிறப்பு… வீட்டில் அனுபவமும் அக்கறையும் உள்ள பெரியவர்கள் நாம் தவறு செய்யும் போது நம்மைத் தடுப்பதைப் போல, மூளையும் அக்கறையுடன் நம்மைக் கட்டுப்படுத்தும்…

செல்வியின் வாழ்க்கை சிதைந்து போனதற்கு அடிப்படைக் காரணம், அந்த வளர்ப்பு அப்பா, அம்மா, அண்ணன்கள் அனைவரும் முழுமையாகச் சிந்திக்கும் திறனை இழந்து விட்டவர்கள்… இன்னொரு முக்கியமான உண்மையையும் சொல்ல வேண்டும்… அவர்கள் மட்டுமல்ல, பாதிக்கப்பட்ட செல்வியுமே படிக்கும் பழக்கம் இல்லாததால் சுயமாக சிந்திக்கும் திறனை இழந்திருக்கிறாள்… இல்லையென்றால், எப்பொழுது அவளை வளர்த்த அந்தத் தந்தை முதன் முதலாக பாலியல் ரீயான செயலில் இறங்கினானோ, அன்றே அவள் விழிப்படைந்து, அந்த நரகத்தில் இருந்து வெளியே வந்திருக்கலாம்…

இன்றைக்கு அரசாங்கமோ பொதுநல அமைப்புகளோ மிகவும் அக்கறையுடனும், பொறுப்புடனும் இப்படிப்பட்ட செயல்களால் பாதிப்படையும் பெண் குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்… அதையெல்லாம் செல்வி கொஞ்சமும் அறியாமலேயே இருந்திருக்கிறாள்…

ஒவ்வொரு பெண் குழந்தையும் தனக்கு இழைக்கப்படும் உடல் ரீதியிலான அத்து மீறல்களைப் பற்றி அறிந்து கொண்டிருக்க வேண்டும்… அவற்றிலிருந்து தான் தப்பித்துச் செல்வதற்கு இருக்கும் வாய்ப்புகளைப் பற்றி முழுமையாக அறிந்து கொண்டிருக்க வேண்டும்… இவற்றையெல்லாம், படித்து தெரிந்து கொண்டிருந்தால் அந்தப் பெண் குழந்தை அத்தனை வருடங்களாகக் கொடுமைகளைத் தொடர்ந்து அனுபவித்திருக்காது… செல்வி, என்றோ அந்தக் கயவர்களிடம் இருந்து தப்பித்திருக்கலாம்… செல்விக்கும் படிக்கும் பழக்கம் இல்லாததால், வெளியுலகத்தில் பெண் குழந்தைகளுக்கு இருக்கும் பாதுகாப்புகள் தெரியாமல் போய்விட்டது…

இதனைப் போன்ற நிகழ்வுகளைப் பற்றிய சில சமூக மதிப்பீடுகள், அலசல்கள், விவாதங்கள், கருத்துப் பரிமாற்றங்கள் அவசியம்… ஏன்..?

(தொடரும்)