ஆண் மெனோபாஸ்! – 4

செலின் ராய், உறவுகள் மற்றும் வாழ்வியல் மேம்பாட்டு நிபுணர்.
மெனோபாஸ் நிலையை அடையும் போது, ஆண்களுக்கு ஏற்படும் மனநிலை மாற்றங்கள் ஏராளம்.இயல்பாக அவர்களுக்குள் ஏற்படும் பதட்டங்களும், குழப்பங்களும் ஒருபுறம் இருக்குமென்றால், அவர்கள் தங்களைத் தற்காத்துக்கொள்வதற்காகவும்,தங்களது உடல் நிலை மற்றும் மனநிலையில் ஏற்படும் மாற்றங்களைத் தங்களது துணையிடமிருந்து மறைப்பதற்காகவும், தங்களது நடத்தைகளை நியாயப்படுத்திக் கொள்வதற்காகவும் எடுக்கும் நடவடிக்கைகளும்,கையாளும் முரண்பாடான உத்திகளும் மறுபக்கம்.
ஆண்கள் தங்களது மெனோபாஸ் நிலையில் கையாளும் இந்த தந்திரமான செயல்பாடுகளைப் பற்றி ஒவ்வொன்றாய் தொடர்ந்து பார்ப்போம்.
இதைப் படிக்கும் ஆண்கள், அவற்றை மாற்றிக்கொள்வதும், பெண்கள், தங்கள் கணவர் மட்டுமல்ல, பெரும்பாலான ஆண்கள் இவ்வாறுதான் நடந்துகொள்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வதும் உத்தமம்.
ஆண்கள் தங்கள் மெனோபாஸ் நிலையை அடையும்போது, பெரும்பாலும் அவர்களது குழந்தைகள் பெரியவர்களாகி தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்ளும் நிலையை அடைந்திருப்பார்கள். பெரும்பாலான குடும்பங்களில் தங்கள் தந்தையை விட இந்த வயதில் குழந்தைகள்தான் அதிக புத்திசாலிகளாகவும், விவரம் தெரிந்தவர்களாகவும் இருப்பார்கள்.அதனால், அவர்கள் தங்கள் தந்தையிடமிருந்து எந்தவித உதவிகளையும் அல்லது ஆலோசனைகளையும் பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்க மாட்டார்கள்.
இது, ஆண்களுக்கு மிகுந்த மன உளைச்சலைக் கொடுக்கத் துவங்கிவிடும்.
தங்களை இதுவரை, ஒரு கதாநாயகனைப் போல பார்த்து வந்த, தன்னை மதித்து வந்த தங்களது குழந்தைகள்,இப்போது தங்களைக் கண்டுகொள்ளாமல் இலிருப்பதும்,தங்களை எந்தவிதமான உதவிகள் கேட்டு அணுகாமல் இருப்பதும் அவர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தையும், பல சமயங்களில் அளவிற்கதிகமான அவமான உணர்ச்சியையும் கொடுக்கத் துவங்கிவிடும்.
பெண் குழந்தைகளாக இருந்தால்,இயல்பாகவே தங்கள் தந்தை மீது இருக்கும் ஒருவித பாச உணர்வால்,உணர்ச்சி அளவிலாவது அவர்களைச் சார்ந்திருப்பார்கள்.அதனால்,ஆண்கள் அந்த நிலைமையை ஓரளவிற்குச் சமாளித்து விடுவார்கள்.
நான் ஏற்கெனவே குறுப்பிட்டிருந்தபடி, ஆண்களது இந்த மெனோபாஸ் காலக்கட்டத்தில் அவர்களுக்கு உடலுறவு கொள்வதில்,உடல்ரீதியான பிரச்னைகளும், சுறுசுறுப்பாகச்
செயல்பட முடியாத நிலையும் ஏற்படும் என்பதால், அவர்கள் ஏற்கெனவே தங்கள் மனைவியிடமிருந்து விலகியும், இதனால் ஏற்படும் கருத்து வேறுபடுகளையும், திருப்தியின்மையையும் சுமந்துகொண்டுதான் காலத்தைக் கடத்திக்கொண்டிருப்பார்கள்.அதனால்,தனக்குத் தன் மனைவியிடமிருந்து கிடைக்காத மரியாதையும், பாசமும் தங்கள் குழந்தைகளிடமிருந்து கிடைக்கும்போது,அதைத் தக்கவைத்துக் கொள்வதற்காகப் பலவிதத்தில் நாடகமாடுவார்கள்.
தங்கள் பெண்குழந்தைகளுக்கு அளவிற்கு அதிகமான செல்லம் கொடுப்பதும், அவர்கள் எடுக்கும் பல தவறான முடிவுகளைக்கூட, தன் மனைவி கண்டிக்கிறாள் என்கிற ஒரே காரணத்திற்காக, வேண்டுமென்றே அந்த ஆண் அவற்றை ஊக்குவிப்பதையும் பல குடும்பங்களில் நாம் கண்கூடாகப் பார்த்திருப்போம். இவையெல்லாமே, தங்கள் மெனோபாஸ் நிலையில், தனக்கும் தன்
மனைவிக்குமிடையே நடந்துகொண்டிருக்கும் பனிப்போரில் தான் வெற்றி பெறுவதற்கும், தன் பக்கம் ஒரு குடும்ப நபரை ஆதரவாகச் சேர்த்துக்கொள்வதற்கும் வகுக்கும் வியூகம்தான்.
இவற்றையெல்லாம், தீவிரமாக சிந்தித்து,பல நாள்கள், “ரூம் போட்டு யோசித்தெல்லாம்” செய்யமாட்டார்கள்.வெகு இயல்பாகவே பல சமயங்களில் அவர்களது மனம் இவ்வாறுதான் செயல்படும்.சில ஆண்கள் திட்டமிட்டு யோசித்தும் இவ்வாறு செயல்படுவார்கள்.
தன் கணவன், தன்னை உதாசீனப்படுத்திவிட்டு, தன் மகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாததன் வெளிப்பாடாகத்தான் இந்த காலகட்டத்தில் பல குடும்பங்களில், தாய்க்கும், மகளுக்கும் பெரிய போராட்டமே வெடிக்கும். “தான் ஏன் தன் மகள் மீது காரணமில்லாமல் கோபப்படுகிறோம்” என்று பல சமயங்களில் அந்தப் பெண்ணால் வெளியே விளக்கம் சொல்ல முடியாது. “தன் கணவன்
தன்னிடம் நெருக்காமாயில்லை, ஆனால்,தன் மகள் மீது பாசத்தைப் பொழிகிறான்…” என்று சொன்னால், அது சரியாக இருக்காதே…? “பெற்ற குழந்தையைப் பார்த்தே பொறாமைப்படுகிறாளே, இவளெல்லாம் ஒரு தாயா…?” என்று தன்னை இகழ்ந்து பேசுவார்களே என்று கலங்குவாள்.
“நான் குழந்தையாயிருக்கும்போதெல்லாம் எங்கம்மா, எங்கிட்ட நல்லாத்தானிருந்தாங்க. ஆனா, திடீர்னு ஏன் இப்படி மாறிட்டாங்கன்னே தெரியல…” என்று பல டீன் ஏஜ் வயது சிறுமிகள் புலம்புவதைக் கேட்டிருப்போம்.தங்கள் பெண்குழந்தை, சிறுமியாயிருந்த வரை, அந்தக் கணவனுக்கும், மனைவிக்குமிடையேயான உறவு நன்றாகயிருந்திருக்கும். ஒருவேளை, சாதாரணமாக அவர்களிருவருக்குமிடையே பல சண்டைகளும், கருத்து வேறுபாடுகளும் வந்திருந்தால்கூட, அந்த ஆணிற்கு இயற்கையாக ஏற்பட்ட உடல் தேவைகள், எப்படியாவது அவனைத் தன் மனைவியிடம் சமாதானமாகப் பணிந்து செல்ல வைத்துவிடும்.
இருவருக்குமிடையே நிகழும் உடல்ரீதியிலான நெருக்கத்திற்குப் பிறகு, அவர்களுக்கிடையேயிருந்த பிரச்னைகள் பனிபோல் கரைந்து மறைந்து போய்விடும்.
ஆனால், அந்தக் குழந்தை வளர்ந்த பிறகு,அந்தத் தம்பதிகளில், உடலுறவு கொள்ளமுடியாத நிலைக்கு முதலில் தள்ளப்படுவது அந்த ஆண்தான்.அவனுக்கு எந்தவிதமான உடல் தேவைகளும் இல்லாமல் போய்விடும்போது, மனதிற்குள் நிறைய ஆசைகளும், கற்பனைகளும் இருந்தாலும் அவனால், உடல்ரீதியாக அவற்றைச் செயல்படுத்த முடியாத நிலை ஏற்படும்போது, அவன் ஏதாவது சாக்கு, போக்குகளைச் சொல்லி, ஏதாவது காரணங்களைப் புதிது, புதிதாகக் கண்டுபிடித்துத் தன் மனைவியிடமிருந்து விலகிச் செல்லத் தொடங்கிவிடுகிறான்.
“இதுதான் என் பிரச்னை… இதுதான் என் உடல்தகுதி” எனத் தன் மனைவியிடம்
பகிரங்கமாக, வெளிப்படையாகச் சொல்லாமல் தன் மனைவியிடமிருந்து முற்றிலுமாக மறைத்துவிடுகிறான். “அவளிடம்தான் ஏதோ பிரச்னைகளனைத்தும் பொதிந்திருப்பதைப் போலவும்,அதனால்தான், தான் அவளிடமிருந்து விலகிச் செல்வதைப்போலவும்” ஒருவிதமான நாடகமாடத் தொடங்கிவிடுகிறான்.
இந்தக் காலகட்டத்தில்தான், தங்கள் பெண் குழந்தையை ஒரு பகடைக்காயாக அந்த ஆண் பயன்படுத்தத் தொடங்கிவிடுகிறான். தன் பெண்குழந்தையின் மீது,தன் மனைவிக்கு வெறுப்பு இருப்பதைப் போலவும்,தான்தான் அவளைப் பாதுகாக்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டிருப்பதைப் போலவும் ஒரு நாடகமாடி அதை அவளையே நம்பவைத்தும் விடுகிறான்.
இன்னொரு பக்கம், தன் பெண்தான்,தன்னையும் தன் கணவனையும் பிரித்துவிட்டதைப் போல ஒரு மாயையையும் அந்த மனைவியின்
மனதிலும் தோற்றுவித்து விடுகிறான்.அந்தப் பெண்குழந்தைகளுக்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதே தெரியாதாததால்,தன் அப்பாவிடமிருந்து “செல்லம்” கிடைக்கிறதே, “கேட்ட பொருள்கள் எல்லாம் கிடைக்கின்றதே” என்று நினைத்து,அந்தக் குதூகலத்தில்,” தன் தந்தையை ரொம்ப நல்லவர் என்றும்”, தன் தாய்தான் “ஒரு ராட்சசி” என்பதைப் போலவும் நினைத்துக்கொள்ளத் தொடங்குகிறார்கள்.
தன் அம்மாவிடம், தன் தந்தை காட்டிக்கொண்டிருந்த காதலும்,உடல் நெருக்கமும் இல்லாமல் போனதுதான் பிரச்னை என்று அந்தப் பெண்குழந்தைக்கு எப்படிப் புரியும்? அவன் மனைவியாலேயே அதைப் புரிந்து கொள்ளமுடியாதே? அவளே கண்டுபிடித்துவிட முடியாத அளவிற்கு அவளது கணவன் நடிப்பதால், அந்த மனைவிக்கு அந்த ஆண் நடத்திடும் நாடகமும், செய்யும் தந்திரங்களும் புரியவே புரியாது.இந்தச் சூழ்நிலையில்,
தங்களது கணவனை விட்டுப் பிரிந்து தன் பெண் குழந்தையைக் கூட்டிக்கொண்டு, வெளியேறி வந்து, தனியாக வாழத் தொடங்கும் பல பெண்கள்,தங்கள் அதே பெண்குழந்தையிடம் மிகவும் பாசமாகவும், நெருக்கமாவும் நடந்து கொள்வதைப் பார்த்திருப்போம்.
எப்படி வந்தது இந்தத் திடீர் மாற்றம்…? காரணம், அங்கு,அவர்களது நல்ல உறவிற்கிடையே சிக்கலை ஏற்படுத்திக்கொண்டிருந்த அந்தக்கணவனின், நாடகம் இப்போதுஇல்லை,அதுதான் காரணம்.
பெண் குழந்தைகள் விஷயத்தில் நிலைமை இப்படியென்றால், ஆண் குழந்தைகளிருக்கும் பல குடும்பங்களில் நிலைமை வேறாகயிருக்கும்.பல ஆண்கள் நடந்துகொள்ளும் விதம், மிகவும் நாகரீகமற்றும், சில குடும்பங்களில் வார்த்தைகளில் விவரிக்கமுடியாத அளவிற்கு கேவலமானதாகவுமிருக்கும். அந்தளவிற்கு
“ஆண் மெனோபாஸ்” ஒரு ஆணின் மனநிலையையே சிதைத்து விடுகிறது.
(தொடரும்)

