உளவியல் பார்வை

-டாக்டர்.ஜி.ராஜமோகன்.
சென்னை,மாநிலக் கல்லூரியில் சைக்காலஜி துறையின் தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். மாணவர்களுக்கு மட்டும் அல்ல பத்திரிகை வாயிலாக எல்லோருக்கும் உளவியலை முடிந்த வரை அறிமுகம் செய்து வருகிறேன்.உளவியல் அடிப்படை தெரிந்தால் ஒரு சிறந்த சாதனையாளராக மகிழ்ச்சியாக வாழலாம்.
நமது பலம் என நாம் எதை நினைக்கிறோம்?
உயரமாக இருப்பதும், வெள்ளையாக இருப்பதும்,வலிமையாக இருப்பதும் அல்லது அழகாக இருப்பதும்தான் பலம் என நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவை எல்லாம் நமது பலங்கள் அல்ல; அடையாளங்கள் அவ்வளவுதான்.
பலம் என்பது நமது எண்ணங்கள், நம்பிக்கைகள், சக மனிதர்களிடம் பழகும் விதம்,தெளிவான திட்டமிடுதல்கள், காலத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் திறன்கள், பிரச்சினைகளை அணுகும் முறைகள், அதிலிருந்து கற்றுக்கொண்ட படிப்பினைகள் இவைதாம் நமது பலங்கள்.இவற்றைத் தெரிந்து கொள்வதுதான் அவசியமானது.
நமது பலத்தைத் தெரிந்துகொள்வது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் நமது பலவீனங்களைத் தெரிந்துகொள்வதும். ஆனால் பலவீனங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற முனைப்பு நம்மிடம் எப்போதும் இருப்பதில்லை.இன்னும் சொல்லப்போனால் நமது பலவீனங்களைப் பற்றி எப்போதாவது நமக்குத் தெரியவந்தாலும் கூட நாம் அதைச் சுலபமாக நிராகரித்துவிடுகிறோம். அதிலும் முக்கியமாக பலவீனங்களை ஒரு இரகசியம்போலப் பாதுகாக்கிறோம், யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்று நினைக்கிறோம்.
ஒரு மனிதனின் பலவீனம் என்பது விரும்பத்தகாததோ அல்லது அசிங்கப்படக்கூடியதோ அல்ல. உண்மையில் பலவீனங்கள் இல்லாமல் இங்கு யாருமே இல்லை, அது தவிர்க்க இயலாதது, நம் ஆளுமையைச் சார்ந்தது.திறந்த மனதுடன் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
என்னால் நீண்ட நேரம் ஒரு விஷயத்தைக் கவனிக்கமுடியாது என்பது பலவீனம் என வைத்துக்கொள்வோம். அது தெரிந்தால் அதற்கு என்ன மாற்று வழி என யோசிக்க முடியும்.நீண்ட நேரம் கவனிக் முடியாது என்றால் ஒரு விஷயத்தை ஒரே நேரத்தில் செய்து முடிக்காமல் அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாகச் செய்து முடிக்கவேண்டும். பலவீனத்தை உணர்ந்து ஏற்றுக்கொண்டால்தான் அதற்கு ஏற்றவாறு மாற்று வழிகளை யோசிக்க முடியும். பலவீனங்களே இல்லாமல் யாரும் இங்கும் இல்லை, பலவீனங்களை உணர்ந்து ஏற்றுக்கொள்வதே ஒரு பலம்.

