ஆண் மெனோபாஸ் – 5 

செலின் ராய் உறவுகள் மற்றும் வாழ்வியல் மேம்பாட்டு நிபுணர்.

ரு ஆண் அவனது மெனோபாஸ் நிலையை அடையும்போது,அவன் அடையும் அதீத பதட்டம் மற்றும் நடத்தை மாற்றங்களைப் பற்றியும்,அவற்றிற்குக் காரணமான சமூக, உளவியல் மற்றும் அவனது உடல்நிலை பின்புலம் மற்றும் மாற்றங்களைக் குறித்தும் பேசிக்கொண்டிருந்தோம் அல்லவா?இப்போது இவற்றைப் பற்றியெல்லாம் இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

ஒரு பெண்,தனது மெனோபாஸ் நிலையை அடைந்த பிறகு,தான் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாது என்றும், ஒரு ஆணுக்கு அது அவனது கடைசி மூச்சு வரை சாத்தியம் என்றும் மிக சாமர்த்தியமாக, இந்த ஒரே பொய்யைத் தொடர்ந்து, திரும்பத் திரும்பச் சொல்லிச் சொல்லி ஆண்களையும், பெண்களையும் இந்தச் சமூகம் மூளைச் சலவை
செய்து வைத்திருக்கிறது. இன்னும் இதே வேலையைத்தான் நேரடியாக,சக மனிதர்களுடன் பேசும் உரையாடல்களின் மூலமாகவும், ஊடகங்களின் மூலமும் இந்த ஆணாதிக்கச் சமுதாயம் தொடர்ந்து செய்து வருகிறது. இதைப் பெண்களும் நம்பிக்கொண்டிருப்பதுதான் வேதனையின் உச்சக்கட்டம்.”எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே…” என விழிப்புணர்வோடு கேள்வி கேட்கும் பெண்கள் இங்கு மிக மிகக் குறைவு.

ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால்,அதுவே உண்மையாகிவிடும் என்பதைப் போல, ஆண்களின் சௌகர்யத்திற்காகவும், அவன் மனம் தளர்ந்து, உடைந்துபோய் விடக்கூடாது என்பதற்காவும், பெண்களை பகடைக்காயாக வைத்து உருவாக்கப்பட்ட பல பொய்களைப் போல, இந்த “மெனோபாஸ்” குறித்தான பொய்யும் பெண்களாலேயே, “இதுதான் உண்மை
போல…” என்று நம்பப்படுகிறது. இத்தகைய பொய்யான கூற்றுக்களால்,அந்த ஆணாவது,உளவியல் ரீதியாக நிம்மதியாக இருந்து தொலைக்கிறானா என்றால்,அதுவும் இல்லை.எப்படி அவனால், நிம்மதியாக இருக்க முடியும்…? அவனுக்குத்தான், தன் உடல்நிலையில், மனநிலையில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருகின்றன என்பதெல்லாம். “உள்ளங்கை நெல்லிக்கனியைப் போல” தெள்ளத்தெளிவாகத் தெரிகிறதே…?

ஒரு காலகட்டத்தில் இந்தப் புனையப்பட்ட பொய்களுக்கு நேர்மாறாக,அவனது மனைவி மெனோபாஸ் நிலைக்குப் பிறகும் உடலுறவில் ஆர்வமும், முழு உடல் தகுதியும் கொண்டிருப்பதை அவன் பார்க்குபோது,தெளிவாக உணரும் போது,ஆனால், அதே சமயம் அவனால் அப்படிச் செயல்பட முடியாத போது,தன் மனைவிக்கு ஈடு கொடுக்க முடியாதபோது, அவன் மிகவும் மனம் நொறுங்கிப் போய்விடுகிறான். தன் உடல் மாற்றத்தை நினைத்து மிகவும் பயந்துபோய் விடுகிறான்.இதன் பிறகு, தனது மனைவி வேறு யாருடனாவது சென்று விடுவாளோ என்று ஒருவித மனப்பதட்டத்திலேயே இருப்பான்.அவன் தனக்கு ஏற்பட்டுள்ள இந்த “ஆண் மெனோபாஸ்” நிகழ்விற்குப் பிறகு,தன் மனைவி மகிழ்ச்சியாக இருந்தால், “தான் இவளிடம் உடலளவில் நெருக்கமாக இல்லாத போது,எப்படி இவளால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?” என்று குழம்பித் தவிக்கிறான்.அவள், யாராவது ஒரு ஆணுடன் சாதாரணமான விஷயங்களைப் பற்றிப் பேசிச் சிரித்துக்கொண்டிருந்தால் கூட, “ஒருவேளை, இவள் தனது இயலாமையைப் பற்றி இந்த ஆணிடம் சொல்லியிருப்பாளோ? இவனுடன் உடலளவில் நெருக்கமாயிருந்திருப்பாளோ? அதனால்தான், இவ்வளவு மகிழ்ச்சியாயிருக்கிறாளோ?” என்று கண்டபடி, தாறுமாறாகக் கற்பனை செய்து, தன்னையும் மனதளவில் வருத்திக்கொண்டு, அவளையும் வறுத்தெடுக்கிறான். இந்த மன நிலை
முற்றிப்போய்,தான் பெற்ற ஆண் குழந்தைகளுடனேயேகூட, தன் மனைவியை இணைத்து சந்தேகப்படுமளவிற்கு வக்கிர மனநிலைக்குத் தள்ளப்பட்டு,அதனால் தற்கொலை வரை சென்ற பெண்களின் கதைகளை நான் நேரடியாகக் கேட்டிருக்கிறேன். இதைப் பற்றியும்,தன் கணவனின் தொடுகை இல்லாமலேயே கூட ஏன் பெண்களால் பெரும்பாலும் மகிழ்ச்சியுடனிருக்க முடிகிறது, Emotional flexibility and adaptability மற்றும் Skin hunger விஷயங்களைப் பற்றியும் இனிவரும் அத்தியாயங்களில் விரிவாகப் பேசுவோம்.

எந்த ஆணும், அவன் கூடவே பழகிக்கொண்டிருக்கும் நெருக்கமான தோழர்களிடம் கூட தங்களுக்கும் இந்தப் பிரச்னை உள்ளது, தன் உடலிலும், மனதிலும் ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு இத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்ற உண்மையை சொல்வதில்லை.மாறாக இன்னும் தாங்கள் அதிகமான செயல் திறனுடன் கலவியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக பொய் பேசுகிறார்கள்.

“ஆணுக்கு ஆண் தான் எதிரி”என்பதைப்போல இப்படி பொய் பேசிப் பேசியே,”நாங்கள்லாம் சிங்கம் தெரியும்ல.கடைசி மூச்சு இருக்கும் வரை பொம்ளங்களுக்கு குழந்தை வரம் கொடுத்துட்டே இருப்போம்”என்று தெனாவெட்டாகப் பேசி அடுத்த தலைமுறை ஆண்களுக்கும் இதே பொய்யான கற்பனைகளைக் கடத்தி விடுகிறார்கள். இந்தப் பொய்யான கற்பனைகள்,அவர்கள் நிஜ வாழ்வில் அதற்கு எதிர்மாறான ஒரு நிலையைச் சந்திக்கும்போது எத்தகைய அதிர்ச்சிகளையும் பின் விளைவுகளையும் கொடுக்கும் என்பதைப் பற்றி அந்த ஆண்கள் யோசிப்பதே இல்லை. எந்த ஊடகங்களும் அல்லது அறிவியலாளர்களும் ஏன் இதைப் பற்றி பகிரங்கமாக பேசி, ஆண்களுக்கு அவர்களது “ஆண் மெனோபாஸ்” குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில்லை என்று எனக்கு இதுவரை புரியவில்லை.இது ஒரு ஆணை எந்த விதத்திலும் மட்டப்படுத்தக் கூடிய ஒரு செயலில்லையே. அவனுக்கு உண்மையிலேயே நிகழும் ஒரு இயற்கையான,மிக முக்கியமானதொரு உடலியல்,உளவியல் மாற்றங்களைக் குறித்த பதிவுதானே…?

“பெண்களின் மெனோபாஸ்” குறித்து பக்கம் பக்கமாய் எழுதுவதையும், பேசுவதையும், “விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன் பேர்வழி…” என்ற பெயரில், நிறைய உண்மைக்குப் புறம்பான கருத்துகளைப் பதிவுசெய்வதையும் தொடர்ந்து செய்துகொண்டேதானிருக்கிறார்கள்.ஆனால், ஆண்களுக்கு நிகழக்கூடியது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது ஒரு ஆணுக்கும்,அவன் சார்ந்திருக்கக்கூடிய அவனது குடும்பத்திற்கும் எவ்வளவு முக்கியம் என்ற விழிப்புணர்வு இல்லாததால்தான் ஆண்கள் இதைபற்றி வாயே திறப்பதில்லை. இதை ஒரு மனைவி புரிந்துகொள்வதே மிக மிக காலதாமதமாகத்தான். அப்படியிருக்க அவளால்
தன் கணவனுக்கு இதைப்பற்றி எப்படி எடுத்துச் சொல்ல முடியும்?தவிர,இந்த சிக்கலான விஷயத்தைப் பற்றி, ஒரு மனைவி அவளது கணவனுடன் பேசும்போது, அவன் உணர்வளவில் பாதிக்கப்படவும், அந்தப் பிரச்னையைத் தன் மனைவியிடம் ஒப்புக்கொள்ள அவனது “ஆண்” என்ற மனோபாவம் தடுப்பதாலும், பல எதிர்மறையான பின்விளைவுகள் ஏற்படவும் வாய்ப்புக்கள் அதிகம்.

மனைவி,தன் குடும்பத்தை, குழந்தைகளைக் கவனித்துக் கொள்வதையும்,பிற உறவுகளும்,இந்தச் சமூகமும் அவளுக்கு ஏற்படுத்தக்கூடிய வேறு பல அழுத்தங்களையும் சமாளிப்பதைப் பார்ப்பாளா அல்லது நாற்பது வயதிற்கு மேல் நிம்மதியாக,ஓய்வாகத் தன் வாழ்க்கையைக் கழிக்காமல் தன் கணவனுக்கு மனோதத்துவ வைத்தியம் பார்த்துக்கொண்டிருப்பாளா? இதற்காகவா ஒரு பெண்ணைப் பெற்று, வளர்த்து திருமணம் செய்து கொடுக்கிறார்கள்?

அப்படியென்றால், இந்தப் பொறுப்பை யார் எடுத்துக்கொள்வது? கண்டிப்பாக அந்த ஆணின் பெற்றோர்தான் அதைச் செய்யவேண்டும்.எப்படி, “ஆம்பளைன்னா அப்படி,இப்படித்தான் இருப்பான்… அதையெல்லாம் கண்டும் காணாம இருந்தாத்தான் குடும்பம் விளங்கும்… கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்…” என்று காலம் காலமாக ஒரு பெண்ணுக்குச் சொல்லிச் சொல்லி வளர்த்தீர்களே, அதேபோல் உங்கள் மகனுக்கும், “ஆண் மெனோபாஸ்” என்ற நிலை உனக்கு வரும்டா. இப்ப ரொம்ப ஆடாத. அப்ப, நீ எப்படி நடந்துக்கறது, உன் பொண்டாட்டி மேல அந்த எரிச்சலையும், இயலாமையையும் காட்டாம நடந்துக்கறது, உன் மனநிலையை நீ எப்படி ஆரோக்கியமா வெச்சுக்கறது, எப்படி நீயும் சந்தோஷமா வாழ்ந்து உன் குடும்பத்தையும் மகிழ்ச்சியாக வெச்சுக்கறது…” என்று உங்கள் ஆண் குழந்தைகளுக்கு வகுப்பெடுத்து, கற்றுக்கொடுத்த பிறகு அவனை ஒரு பெண்ணின்
தலையில் கட்டுங்கள். இதைப்பற்றியப் புரிதலை அவன் திருமணம் செய்யபோகும் பெண்ணுக்கும் ஏற்படுத்திய பிறகு அவர்கள் வாழ்க்கையைத் தொடங்குவதே, பிற்காலத்தில் இந்த “ஆண் மெனோபாஸ்” நிலையால் அவர்களுக்கு ஏற்படும் பலவிதமான உறவுச் சிக்கல்களைத் தடுக்கவும், தவிர்க்கவும் உதவும்.

(தொடர்ந்து பேசுவோம்)